இலங்கை

அரசாங்கம் உண்மைகளை மறைக்கிறது!; நாட்டில் 4,000 ஐ.எஸ். ஐ.எஸ். ஆதரவாளர்கள் திரிகின்றனர்; ஞானசாரர் தெரிவித்ததாக மகிந்தவின் பேச்சாளர்  தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு 250 வருடங்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டாலும், வெளியில் இன்னும் ஐஎஸ்ஐஸ் கொள்கைளை பின்பற்றும் 3000 – 4000 வரையிலானோர் இருக்கின்றனர். இந்த விடயங்களை அரசாங்கம் மக்களிடமிருந்து மறைக்கின்றது என்று சிறைத்தண்டனை அனுபவதித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தன்னிடம் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிறைச்சாலையில் ஞானசார தேரரை சந்தித்த போது அவர் இந்த விடயங்களை தன்னிடம் கூறியதாகவும், தனக்கு தெரிந்த தகவல்கள் தொடர்பில் வாக்குமூலங்களை பாதுகாப்பு தரப்பினர் பெற்றுக்கொள்வார்களாக இருந்தால் அவற்றை வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக இதன்போது ஞானசார தேரர் குறிப்பிட்டதாகவும் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே சட்டத்தரணி மனோஜ் கமகே இவற்றை கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த தினமொன்றில் நான் சிறையிலுள்ள ஞானசார தேரரை சந்தித்தேன். மொட்டுக் கட்சி சார்பாக நான் அவரை சந்திக்கவில்லை. அவர் என்னுடன் நீண்ட காலமாக நெருக்கமான தொடர்புகளை பேணியவர். இதன்படி அவருக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் சட்டத்தரணி என்ற வகையில் சந்தித்து ஆலோசனைகள் சில தொடர்பில் கலந்துரையாடினேன்.

இதன்போது அவர் மக்களுக்கு செய்தியொன்றை கூறுமாறு குறிப்பிட்டார். அதாவது அவர் கூறிய விடயம் வருமாறு, என்னை சிறைக்குள்ளேயே வைத்திருக்கலாம். நான் உள்ளேயே இறக்கலாம் அல்லது உள்ளேயே கொல்லப்படலாம் ஆனால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் எனக்கு கவலையே ஏற்பட்டுளள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை 250 வருடங்களுக்கு சிறைகளுக்குள் போட்டாலும், வெளியில் மூவாயிரம், நான்காயிரம் ஐஎஸ்ஐஸ் கொள்கைளை பின்பற்றுபவர்கள் இருக்கின்றனர். இவர்கள் எவ்வேளையிலாவது செயற்பட்டால் எமது நாட்டில் பிள்ளைகளுக்கு எவ்வாறான நிலைமை ஏற்படும். எனக்கு அப்பாவி முஸ்லிம் மக்களுடன் பிரச்சினை கிடையாது. அப்பாவி முஸ்லிம் மக்களே எனக்கு இந்த தகவல்களை வழங்கினர். முஸ்லிம் அப்பாவி மக்களுக்கும் வகாப் வாதிகள் மற்றும் ஐஎஸ் கொள்கைவாதிகள் பிரச்சினைகளுக்குரியவர்களே. இப்போது நான் உள்ளே இருந்தாலும் ஐஎஸ்ஐஎஸ் கொள்கையுடையவர்கள் வெளியில் இருக்கின்றனர். இந்த அரசாங்கம் அந்த விடயங்களை மக்களிடம் மறைக்கின்றது. இந்த அரசாங்கம் ஐஎஸ்ஐஎஸ் கொள்கையுடன் இருக்கும் பிரதான குழுக்கள் சிலவற்றுடன் தொடர்புகளை பேணுகின்றது என்று ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றால் அவற்றை வழங்குவதற்கு தயார் என்றும் அவர் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்புடனேயே விளையாடுகளின்றனர். நல்லாட்சி அரசாங்கமும் தேசிய பாதுகாப்புடன் விளையாடியது. இதனால் 300க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களே இழக்கப்பட்டன. ஞானசார தேரர் கூறிய விடயங்களில் இன்னும் பல தகவல்களை வெளியிடுகின்றேன். தகவல் வழங்குபவர் மீது துப்பாக்கி சூடு நடத்த முன்னர் அவர் கூறும் தகவல் என்ன என்பது தொடர்பில் பாருங்கள். ஞானசார தேரரை நோக்கி விரல் நீட்ட முன்னர் அவர் கூறும் விடயங்கள் உண்மையானவையா? என்று பாருங்கள். நாங்கள் ஞானசார தேரருக்காக கட்சியாக முன்நிற்கின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *