பலதும் பத்தும்

இலங்கையில் ஆண்களுக்கு இடையில் எச்.ஐ.வி தொற்று திடீர் அதிகரிப்பு

இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்று அதிகரிப்பதற்கு ஆண்களுக்கிடையில் நடைபெறும் பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தற்போது எச்.ஐ.வி தொற்றாளராக ஒரு பெண் அடையாளங்காணப்படும் போது, ஏழு ஆண்கள் தொற்றாளர்களாக அடையாளங்காணப்படும் போக்குக் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் கேட்போர்கூட மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாலியல் சுகாதாரம் மற்றும் எச்.ஐ.வி மருத்துவத் துறையின் தற்போதைய போக்குகள், நோய் தடுப்பு முறைகள் மற்றும் எதிர்கால புதிய கண்டுபிடிப்புகள் குறித்து ஊடகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை பாலியல் சுகாதாரம் மற்றும் எச்.ஐ.வி மருத்துவத் துறை விசேட வைத்திய நிபுணர்கள் கல்லூரியின் (SLCoSHH) தலைவியான விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய, இலங்கையில் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையேயே எச்.ஐ.வி தொற்று அதிகமாகப் பதிவாவதாகச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், போதைப்பொருட்களை ஊசி மூலம் செலுத்துவதனாலும் எச்.ஐ.வி தொற்று பதிவாவதாகவும், நோய் பரவலில் இது அவதானம் செலுத்தப்பட வேண்டிய ஒரு ஆபத்தான நிலைமை என்றும் அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *