பசிலை இன்ரபோல் மூலம் கைது செய்வதற்கு உத்தரவு!; சிவப்பு அறிவித்தலைப் பெறவும் நடவடிக்கை

சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் நிதியை தவறாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி அவரை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் (இன்ரபோல்) ஊடாக சிவப்பு அறிவித்தலை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதிமன்றம் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்தி, சுற்றுலாப் பிரச்சார நடவடிக்கை எனக்கூறி 12,000 டிசேர்ட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதுடன், அந்த டி-ஷர்ட்டின் ஒரு பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படமும், மறுபக்கத்தில் அரசியல் கட்சியொன்றின் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அத்தடன் குறித்த டிசேர்ட்டுகள் மொனராகலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றிற்காக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பஸில் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் சமர்ப்பித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, அவருக்கு பிடியாணை உத்தரவை பிறப்பித்த நீதவான், வெளிநாட்டில் உள்ள பஸில் ராஜபக்ஷவை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இதன்படி அவரை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் (இன்ரபோல்) ஊடாக சிவப்பு அறிவித்தலை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை, மாத்தறை எலியகந்த வீதி, பிரவுன்ஸ்ஹில் முகவரியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியை கொள்வனவு செய்தமை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுற்கு எதிராக பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளில் தொடர்ச்சியாக ஆஜராகாமல் இருந்து வரும் பஸில் ராஜபக்ஷவை கைது செய்வதற்காக கடந்த மாதம் 22ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
![]()