வைத்தியசாலைகளில் இருக்கும் மகிந்த,சிரந்திக்காக நாமலுக்கு பிணை வழங்க முடியாது; 27 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய மனைவி ஷிரந்தி ராஜபக்ச ஆகியோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைக் காரணமாகக் கொண்டு நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதவானால் நிராகரிக்கப்பட்டதுடன் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்த போது, நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கவீந்திர பெர்னாண்டோ,
“நாமல் ராஜபக்சவின் தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய பாரியாரான ஷிரந்தி ராஜபக்ச ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச தனியார் வைத்தியசாலையிலும், ஷிரந்தி ராஜபக்ச கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஷிரந்தி ராஜபக்சவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. நாமல் ராஜபக்சதான் அவர்களுக்கு மூத்த மகன்.
நாமல் ராஜபக்ச தொடர்பான இந்த வழக்கின் விசாரணைகளும் தற்போது நிறைவடைந்துள்ளன. அத்துடன், அவருடைய பெற்றோர் இருவரும் ஒரே நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதனைக் கருத்திற் கொண்டு நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்குமாறு” கோரி தனது வாதங்களை முன்வைத்திருந்தார்.
எனினும், பிணை மனு தொடர்பான சமர்ப்பிப்புக்களை கருத்திற் கொண்ட நீதவான் அசங்க எஸ்.போதரகம, விசாரணைகள் நிறைவடைந்ததன் அடிப்படையில் பிற வழக்குகளில் பிணை வழங்கப்பட்டிருந்தாலும், அந்த வழக்குகளுக்கும் தற்போதைய வழக்குக்கும் இடையே தெளிவான வேறுபாடு இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
பிற வழக்குகளில் விசாரணைகளை நிறைவு செய்ய நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்பட்டமை ஒரு காரணியாக இருந்தபோதிலும், இந்த வழக்கில் விசாரணைகள் விரைவாக நிறைவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகைகளைத் தயாரிக்கும் பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நீதவான் இதன்போது தெரிவித்தார்.
இதன்படி, இந்த வழக்கில் விசாரணைகள் நிறைவடைந்துவிட்டன என்பது மட்டுமே பிணை வழங்குவதற்கான போதுமான அல்லது விதிவிலக்கான காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதவான் குறிப்பிட்டார்.
மேலும், நாமல் ராஜபக்சவின் பெற்றோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகநபர் தரப்பு சட்டத்தரணி வாதிட்ட போதிலும், அவர்களின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கைகள் எதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதையும் நீதவான் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாமல் ராஜபக்சவின் பெற்றோர் தொடர்பாக வெளிவந்த ஊடகச் செய்திகளைத் தானும் பார்த்ததாக குறிப்பிட்ட நீதவான், இத்தகைய செய்திகளின் அடிப்படையில் மட்டும் ஒருவரின் உடல்நிலையைச் சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியாது என்று இங்கு வலியுறுத்தினார்.
அத்துடன், இந்த விடயத்துடன் தொடர்புடைய மருத்துவச் சான்றுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், அத்தகைய சான்றுகள் இல்லாவிட்டால் பெற்றோரின் உடல்நிலையை பிணை வழங்குவதற்கான போதுமான விதிவிலக்கான காரணமாகக் கருத முடியாது என்றும் நீதவான் இதன்போது தெரிவித்தார்.
![]()