உலகம்

பேச்சுவார்த்தையா அல்லது விளைவுகளைச் சந்திப்பதா? ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஈரானுடனான மோதலுக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வுகாண அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து விரும்புவதாகவும், எனினும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதா அல்லது மேலதிக விளைவுகளை எதிர்கொள்வதா என்பதை ஈரானே தீர்மானிக்க வேண்டும் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் டொமி பிகொட் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அணு ஆயுதத்தைப் பெற்றுக்கொள்வதை அமெரிக்கா அனுமதிக்காது எனத் தெரிவித்த பிகொட், அந்த இலக்கை அடைவதில் ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணை ஊடான எண்ணெய் போக்குவரத்து, மோதலுக்கு முந்தைய நிலைகளைவிட அதிகரித்துள்ளதாகவும், அமெரிக்கத் தடைக்கு உட்பட்டுள்ள ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி இதில் உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவுடனான அமெரிக்காவின் உறவுகள் குறித்துப் பேசிய அவர், அந்நாட்டுக்கான தனது உறுதிமொழிகளை வொஷிங்டன் தொடர்ந்து நிறைவேற்றும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியா மீது ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விரிவாகத் தெரிவிக்கவில்லை.

மேலும், கடந்த மாதம் ஈரானிடமிருந்து ஹிஸ்புல்லாஹ் அமைப்புக்கு 200 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதாக வெளியான தகவல்களையும் பிகொட் நிராகரித்துள்ளார்.

அந்த அமைப்பின் வருமானம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றக் கும்பல்களுடனான தொடர்புகள் மூலம் கிடைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும், ஹிஸ்புல்லாஹ்லாவுக்கு ஈரானிடமிருந்து 200 மில்லியன் டொலர்கள் கிடைத்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தத் தகவல் தொடர்பில் அமெரிக்கத் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், நிதிப் பரிமாற்றம் குறித்த தகவல்கள் சுயாதீனமாக முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டியவையாக உள்ளன.

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள், ஹோர்முஸ் நீரிணை வழியான எண்ணெய் போக்குவரத்து மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டம் ஆகியவை அமெரிக்கா–ஈரான் உறவுகளில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *