தலதா மாளிகையின் மீது புலிகள் போல் ஜே.வி.பி. குண்டு வீசவில்லை!; மல்வத்து மகாநாயக்க தேரர் தெரிவிப்பு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மீது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) குண்டு வீசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான குழுவினர், நேற்று திங்கட்கிழமை கண்டி மல்வத்து மகா விகாரைக்குச் சென்று மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மகாநாயக்க தேரர் முன்னிலையில் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, “கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மீது ஜே.வி.பி. குண்டு வீசினார்கள், கதிர்காமம் தேவாலயத்தின் மீது குண்டு வீசியதும் அவர்கள்தான்” என்று குறிப்பிட்டார்.
மகாநாயக்க தேரர் (மல்வத்து பீடம்): அவர்கள் தான் குண்டுகளை வீசினார்கள் என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்?
மத்தும பண்டார: அப்படித்தான் சொல்லப்படுகிறது தேரரே.
மகாநாயக்க தேரர்: இல்லை, இல்லை – மற்றவர்கள் என்ன சொன்னாலும், உண்மைகள் எங்களுக்குத் தெரியும். அவர்கள் துப்பாக்கிகளைக் கைப்பற்றினார்கள், முன்னணி பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து துப்பாக்கிகளைப் பறித்தார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் செய்தது போல அவர்கள் குண்டுகளை வீசவில்லை எனவும் திப்பட்டுவாவே சித்தார்த்த சுமங்கல தேரர் கூறினார்.
![]()