இலங்கை

செம்மணிக்கு சர்வதேச நீதி கிடைக்குமா..!; பின்லாந்து நாடாளுமன்றத்தில் அதிரடி கேள்விகள்

இலங்கையின் செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளைச் சுயாதீனமாகவும் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாகவும் முன்னெடுப்பது தொடர்பாக, பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான இன்கா ஹொப்சு (Inka Hopsu) மற்றும் ஏவா பியோடெ (Eva Biaudet) ஆகியோர் அந்நாட்டு அரசாங்கத்திடம் எழுத்துமூலக் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிதல், மனித எச்சங்களை அடையாளம் காணுதல் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துதல் ஆகிய விடயங்களில் பின்லாந்து அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 செம்மணி மனிதப் புதைகுழி

தமது கேள்வியில், ஒகஸ்ட் மாத நடுப்பகுதி வரை செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 580க்கும் மேற்பட்ட மனித உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் தகவல்களையும் ஊடகச் செய்திகளையும் மேற்கோள்காட்டி, கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில் குழந்தைகளின் உடல்களும் அடங்குவதாகவும், பாடசாலைப் பைகள் மற்றும் பால் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செம்மணிக்கு சர்வதேச நீதி கிடைக்குமா..! பின்லாந்து நாடாளுமன்றத்தில் அதிரடி கேள்விகள் | Semmani Mass Grave Finland Mps Seek Independent

இலங்கையில் மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் மெதுவாக முன்னெடுக்கப்படுவது குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மழை மற்றும் வளப் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை, அத்துடன் சர்வதேச கண்காணிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்களையும் அவர்கள் தமது கேள்வியில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சர்வதேச தடயவியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளதையும் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்கான டி.என்.ஏ. மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுசெய்யும் பணிகளுக்கு சுயாதீனமான பொறிமுறைகள் அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 பாதிக்கப்பட்ட குடும்பங்கள்

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் மற்றும் வாழ்க்கைத் துணைகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமலேயே வயதான பெற்றோர்களும் உறவினர்களும் உயிரிழந்து வருவது குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உண்மையையும் நீதியையும் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாண்டு பெப்ரவரியில் பின்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் நிறுவப்பட்ட அரசியல் ஆலோசனைப் பொறிமுறையைப் பயன்படுத்தி, மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை முன்வைப்பதற்கும் இலங்கை அரசாங்கத்துடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடுவதற்கும் உள்ள வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

செம்மணிக்கு சர்வதேச நீதி கிடைக்குமா..! பின்லாந்து நாடாளுமன்றத்தில் அதிரடி கேள்விகள் | Semmani Mass Grave Finland Mps Seek Independent

 

குறிப்பாக, செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச தடயவியல் நிபுணத்துவம், தொழில்நுட்ப உதவி மற்றும் நிதியுதவிகளை வழங்க பின்லாந்து தயாராக உள்ளதா என்பதையும், அவ்வாறான உதவிகள் இருதரப்பு உறவுகள், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐக்கிய நாடுகள் சபை ஊடாக வழங்கப்படுமா என்பதையும் அவர்கள் வினவியுள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பின்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகக் குறிப்பிடப்படும் சூழலில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை, சுயாதீனத்தன்மை மற்றும் சர்வதேச நிபுணத்துவத்தின் பங்களிப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை, இந்த எழுத்துமூலக் கேள்விகள் மூலம் மீண்டும் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *