உலகம்

ஆபிரிக்காவிலிருந்து ஏமன் சென்ற படகு கடலில் மூழ்கியது ; 109 உடல்கள் மீட்பு

ஆபிரிக்க நாடான ஜிபூட்டி கடற்கரைப் பகுதியில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 சிறுவர்கள் உட்பட 109 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 116-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு (IOM) தகவல் தெரிவித்துள்ளது.

ஜிபூட்டியில் இருந்து ஏமன் நாட்டை நோக்கிப் புறப்பட்ட இந்தப் படகு, ஓபோக் நகரின் குஹேரே பகுதி அருகே கடலில் சென்றபோது கவிழ்ந்து மூழ்கியது.

இதில் படகில் பயணித்த எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் நீந்தி உயிர் தப்பிய நிலையில், அவர்களில் 64 பேருக்கு ஓபோக் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த விபத்தில் இதுவரை 109 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமான 116 பேரைக் கண்டறிய ஜிபூட்டி கடற்படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளைத் தேடி ஆபிரிக்காவின் கொம்புப் பகுதியிலிருந்து பப் அல்-மந்தேப் நீரிணை வழியாக ஏமனுக்குச் செல்லும் கடல் வழிப்பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வன்முறை மற்றும் பாதுகாப்பற்ற சூழல் நிறைந்திருந்த போதிலும் மக்கள் பிழைப்புக்காக இப்பாதையைத் தேர்வு செய்வது தொடர்ந்து வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், மக்கள் இத்தகைய ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்வதைத் தடுக்கவும் களத்தில் தொடர்ந்து பணியாற்றி வருவதாக ஜிபூட்டிக்கான ஐ.நா. திட்ட பணிப்பாளர் அலெக்சாண்டர் கொய்சாக் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த இரங்கலையும் பதிவு செய்துள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்காக ஆபத்தான இந்த கடல் பாதையில் பயணித்தவர்களில், கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டுமே 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *