இலங்கை

அநுரவை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுங்கள் – மனோ கணேசன் எச்சரிக்கை

அரசாங்கத்துக்கு ஆதரவாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு தமிழ் மொழியில் பொதுவெளியில் பதிவிடும் சில எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் யூடியூப் ஊடகவியலாளர்கள், நாட்டில் வித்தியாசமான மாற்றத்தை ஏற்படுத்த முயலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை பெரும் அவஸ்தைக்கு உள்ளாக்கி வருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எப்போதும் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் இனவாதத்தைத் தூண்டிவிடும் வகையில் சிலர் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மொழியில் பொதுவெளியில் இவர்கள் எழுப்பும் கூச்சல்கள் மற்றும் கருத்துக்கள், ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பம் மூலம் உடனடியாகச் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுப் பகிரப்படுகின்றன.

இத்தகைய செயற்பாடுகள், நாட்டில் மீண்டும் ‘சிங்கள-பௌத்த மத அரசியல்’ வலுப்பெற்று தலைதூக்குவதற்கே வழிவகுக்கின்றன. இது ஜனாதிபதி அனுரவின் ஆட்சிக்கும், அவரது சீர்திருத்தங்களுக்கும் முட்டுக்கட்டையாக அமைகின்றது.

குற்றம் புரிந்த ஞானசார தேரரைச் சிறையில் அடைத்தது தவறு என இப்போது யாரும் கூறவில்லை. அவரது சீருடை விவகாரமே சர்ச்சையாக உள்ளது. இது தொடர்பில் பௌத்த தலைவர்களுடன் பேசி இரண்டு வாரங்களில் தீர்வு தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

பௌத்த மதத் தலைமைகளின் அழுத்தத்திற்கு அமைவாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இனவாதம் முழுமையாக மாறுவதற்கு நீண்ட காலம் எடுக்கும். ‘அரகலய’ போராட்டமே அதனைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தியது. பௌத்த தேரர்கள் விவகாரத்தில் ஜனாதிபதிக்கு உதவ விரும்பினால், தயவுசெய்து தமிழ் எழுத்தாளர்களும் யூடியூப் ஊடகவியலாளர்களும் அமைதி காக்க வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் இந்த விவகாரங்கள் குறித்து அதிகம் பேசாமல், ‘எங்களது பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வுகளைத் தாருங்கள் ஜனாதிபதி அவர்களே’ என்ற கோரிக்கையை மட்டும் முன்வைத்து அமைதியாக இருக்க வேண்டும்.

நாட்டின் தற்போதைய சூழலைக் கருத்திற் கொண்டு, ஜனாதிபதியை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுங்கள் என்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே நான் கேட்டுக்கொள்கிறேன் என மனோ கணேசன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *