உலகம்

ஹிலாரி கிளின்டன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ; உச்ச நீதிமன்றத்திடம் ட்ரம்பின் கோரிக்கை

அமெரிக்காவின் 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தமக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, ஹிலாரி கிளின்டன் உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்த வழக்கை மீண்டும் பரிசீலிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்ப் சார்பில் அவரது சட்டத்தரணிகள் இந்த மேன்முறையீட்டை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2022ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், ஹிலாரி கிளின்டன், ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு உள்ளிட்ட தரப்பினர், ரஷ்யாவுடன் ட்ரம்புக்குத் தொடர்பு இருப்பதாகத் தவறான தகவல்களைப் பரப்பி, 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தைப் பாதிக்கும் நோக்கில் சதித்திட்டம் தீட்டியதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

எனினும், கீழமை நீதிமன்றம் குறித்த வழக்கைத் தள்ளுபடி செய்ததுடன், ட்ரம்ப் மற்றும் அவரது சட்டத்தரணிகள் சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அட்லாண்டாவில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றமும் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியது.

இந்தநிலையில், ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் காலப்பகுதியில் இத்தகைய தனிப்பட்ட வழக்கை முன்னெடுப்பது அதிக நேரத்தையும் முயற்சியையும் எடுத்துக்கொள்ளும் என்பதால், தனது பதவிக்காலம் முடியும் வரை சட்ட நடவடிக்கைகளை ஒத்திவைக்கத் தீர்மானித்ததாக ட்ரம்பின் சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்மானிக்கும் என சர்வதேச ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *