உலகம்

அமெரிக்காவுக்கு ரஷ்ய டீசல் இறக்குமதி: யுக்ரைன் ஜனாதிபதி கடும் கண்டனம்!

அமெரிக்காவுக்கு ரஷ்ய டீசலை இறக்குமதி செய்வது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையே எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு வழங்கப்பட்ட பரிசாகும் என்றும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாகப் போரை மேலும் நீடிப்பதற்கான முதலீடு என்றும் ஸெலென்ஸ்கி சாடியுள்ளார்.

முதற்கட்டமாக 3 லட்சம் டன் டீசலை உடனடியாக அமெரிக்க மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு ரஷ்யா வழங்வுள்ளதாகவும், தொடர்ந்து நவம்பர் மாதத்தில் 5 லட்சம் டன்னும், அதற்குப் பிறகு மேலும் 10 லட்சம் டன் டீசலும் வழங்கப்படும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, யுக்ரைனின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்களின் நிலையைப் பொறுத்து, குறுகிய காலத்தில் மேலும் 30 லட்சம் டன் டீசல் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ரஷ்ய டீசல் ஏற்றுமதி மீதான தடைகளை எதிர்வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை அமெரிக்க திறைசேரி திணைக்களம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.

எனினும், அமெரிக்க வங்கிகளில் உள்ள ரஷ்ய சொத்துக்கள் மீதான முடக்கம் தொடர்ந்து அமுலில் இருக்கும்.

இந்த நிலையில், சமூக வலைத்தளப் பதிவொன்றில் கருத்து தெரிவித்துள்ள ஸெலென்ஸ்கி, ரஷ்யா வழங்கும் இந்த டீசலுக்குப் பதிலாக “மேலும் தீவிரவாதத்தையே” திருப்பிச் செலுத்தும் என எச்சரித்துள்ளார்.

“யுக்ரைன் மக்களின் உயிரைப் பாதுகாக்கவும் எங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் அமெரிக்காவின் நியாயமான ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதேவேளை, ரஷ்யாவுடன் அமெரிக்கா பலவீனமான பேச்சுவார்த்தையை நடத்தாமல் வலுவான முறையில் பேச வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ரஷ்யா யுக்ரைனின் வலுசக்தி கட்டமைப்புகளை அழிக்காதவரை, ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது யுக்ரைன் தாக்குதல் நடத்தாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதனிடையே இடைகாலத் தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்காவில் எரிபொருள் விலையைக் குறைப்பதற்காக ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்ட இந்த நடவடிக்கை சற்று அவசர அவசரமானது எனப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ட்ரம்ப் குறிப்பிட்ட டீசல் அளவு ஒப்பீட்டளவில் மிகக் குறைவானது என்பதால், அமெரிக்க சந்தையில் எரிபொருள் விலையில் இது பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.

அத்துடன், இந்த ஒப்பந்தத்திற்குப் பதிலாக ரஷ்யாவுக்கு அமெரிக்கா என்ன கைம்மாறு செய்யவுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் வௌியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *