பிக்குகளுக்குக் காட்டிய அக்கறையை தமிழ் – முஸ்லிம்களுக்கும் காட்டுங்கள்! அநுரவிடம் வேண்டுகோள்

சிறையில் உள்ள பௌத்த பிக்குகளின் காவி உடை அகற்றும் விவகாரத்தைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க காலம் குறிப்பிட்டு நடவடிக்கை எடுத்தது போன்று, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கும் குழு அமைத்துத் தீர்வு காண வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(10.10.2026) நடைபெற்ற, 1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கக் கோரும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பியின் தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “கறுப்பு ஜூலை கலவரத்தின் போது வடக்கு, கிழக்கை விடத் தென்னிலங்கைத் தமிழ் மக்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். கொழும்பில் என் வீடும் எரிக்கப்பட்டது.
அந்த இக்கட்டான சூழ்நிலையில், தற்போதைய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் தந்தை தனது குடும்பத்தினரைத் தனது வாகனத்தில் அழைத்துச் சென்று பாதுகாத்தார்.
ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்ட விவகாரத்தில் ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி, இரண்டு வாரங்களுக்குள் சட்டத் திருத்தங்கள் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டமையை வரவேற்கின்றேன்.
பிக்குகள் விவகாரத்தில் காட்டிய அக்கறையைப் போல் தமிழ், முஸ்லிம்களின் நீண்டகாலக் காணிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி குழுக்களை அமைத்துக் காலம் குறிப்பிட்டுத் தீர்வுகளை வழங்க வேண்டும்.
இத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் மூலமே எதிர்காலத்தில் கறுப்பு ஜூலை போன்ற கலவரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
![]()