இலங்கை

ஞானசார தேரரின் காவி உடையை அகற்ற தடை கோரி மனு

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை வலுவற்றதாக்கும் பேராணையை (Writ Order) பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

தீனியாவல பாலித தேரரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இதன் பிரதிவாதிகளாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சர் ஹர்ஷண நாநாயக்கக்கார, அமைச்சின் செயலாளர், புத்தசாசன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி உள்ளிட்ட சிலர் பெயரிடப்பட்டுள்ளனர்.

 

அரசியலமைப்பின் 09 ஆம் உறுப்புரைக்கு அமைவாக, பௌத்த மதத்தைப் பாதுகாத்து போஷிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்குப் உரித்தாக்கப்பட்டுள்ளது என மனுதாரரான தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், ஞானசார தேரரை கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும்போது, அவரது காவி உடையை அகற்றி சாதாரண உடையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அவரது காவி உடையை அகற்றுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்த தீர்மானம் சிறைச்சாலை விதிமுறைகளுக்கு முரணானது என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரரான தேரர், அது பௌத்த ஒழுக்க விதிகளுக்கும் முரணானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கமைய, பிரதிவாதியான ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை வலுவற்றதாக்கும் பேராணையை பிறப்பிக்குமாறு மனுதாரரான தேரர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மேலும், இவ்வாறான நடவடிக்கையை வற்புறுத்தும் சிறைச்சாலை விதிமுறையோ அல்லது சுற்றறிக்கையோ இருப்பின், அதனையும் வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.

 

அத்துடன், ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதைத் தடுக்கும் இடைக்காலக் கட்டளையை பிரதிவாதிகளுக்கு பிறப்பிக்குமாறும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *