கதைகள்

குருதிக்குள் கிடக்கும் சங்கதிகள்… சிறுகதைத் தொடர் – 18 …. சுப்புனி …. மீனாசுந்தர்

எருவு அள்ளிக்கிட்ருந்தான் சுப்புனி. மம்பட்டியால ஓங்கி சதக் சதக்குன்னு வெட்டி இழுத்து கொட்டுக் கூடையில் அள்ளியள்ளிப் போட்டான். பின்ன தானே மல்லுக்கட்டி, மூச்சடக்கி ரொம்ப செரமப்பட்டு தூக்கித் தலையில வெச்சான். பிருமனைமாரி வட்டமா சுருட்டி வெச்ச துண்டுச்சும்மாடு தலை மேலருந்திச்சி. அவனுக்கது ஏக வசதியா போயிட்டு. தலையில வெச்ச கொட்டுக் கூடய சொமந்துக்கிட்டு கொஞ்ச தூரம் நடந்தான். வேலிய தாண்டி நிறுத்தி வெச்சிருந்த மாட்டு வண்டியில பின்னாலேர்ந்து சன்னமா கொட்டிக்கிட்டே வந்தான்.
எரு குழிக்கும், வண்டிக்கும் எப்படியும் கால் பர்லாங் தூரமாவது ருக்கும். ஓடியாடி ஒத்த ஆளாவே அவன்ஞ் செய்யிற வேல ரெண்டாளு வேலக்கி சமம். அவன் எப்பவுமே அதுக்காவ அலுத்துக்கிறதில்ல. வண்டி மாடுக ரெண்டும் ஓரமா படந்து கெடந்த மாமரத்து நெழலுல கெட்டிக் கெடந்துச்சிங்க. ஒன்னுக்கொன்னு ஆதரவா எதிரெதிர்ல ரெண்டும் படுத்துக்கிட்டு அசை போட்டுக்கிட்டே சுப்புனிய வெச்சக்கண்ணு வாங்காம பாத்துக் கிட்டிருந்திச்சுங்க.

சுப்புனி நல்லா கன்னங்கரேல்ன்னு கருத்த தேகமாருப்பான். ஒடம்பு பூரா சுருட்ட சுருட்டயா மசிறு மண்டிக் கெடந்திச்சு. அவனுக்கு நல்ல தெடகாத்திரமான ஒடம்பு. அதுக்குத் தவுந்தாப்போல ஒசரம் வேற. நாலு மாசத்துக்கு ஒருக்கத்தான் முடி வெட்டுவான்ங்கிறதால நீளநீளமா சடாமுடி வளர்ந்து கெடந்திச்சி. முடியையே வெட்டாதவன் சேவிங் எங்க செய்யப் போறான்? வரப்புல புல்லு மண்டிக் கெடக்குறமாரி மொகம் பூராவும் புசுபுசுன்னு தாறுமாறா தாடிமுடி. போதாததக்கு கருகருன்னு அடர்த்தியான மீச வேற. அத ரெண்டு பக்கமும் வெட்டரிவா கணக்குக்கு முறுக்கி விட்டிருப்பான். இதான்ங்க சுப்புனி. அவனோட முழு பேரு சுப்ரமணியன். ஆனா எல்லாரும் சின்ன புள்ளயிலேர்ந்தே சுப்புனி, சுப்புனின்னே சுருக்கி கூப்புட, அதுவே அவனுக்கு பேரா ஆயிருச்சி. இப்ப சுப்ரமணியன்னு யாரும் கேட்டா ஊர்ல ஒருத்தரும் தெரியாதுன்னுதான் பதிலு சொல்லுவான்ங்க.
சுப்புனி பொண்டாட்டி லெச்சுமி. அவனுக்கு அப்படியே நேர்மாறா இருப்பா. கட்டயா மாநிறமாருக்குற லெச்சுமி அவங்கூடக் கெளம்பி வெளில போறதுக்கே வெக்கப்படுவா. சில பொம்பளங்க அவள கட்டச்சின்னுதான் கூப்புடுவாங்க. இத்தினி வருசம் ஒன்னாமன்னா வாழ்ந்தும் வயித்துல ஒரு புழுபூச்சி உண்டாகலேயேங்குற வருத்தம் ரெண்டு பேருக்குமே மனசு முழுக்க ஏக்கமா கெடந்திச்சி.

சுப்புனிக்கு ஒடம்பு பூராவும் வேர்வ அருவிமாரி கொட்டினிச்சி. சாத்துபூத்துன்னு இறக்கஎறக்க வண்டியில எருவ கொட்டிக்கிட்டே இருந்தான். மண்டய பொளக்குறமாரி நல்ல உக்கிரமான வெயிலு. அவன் என்னிக்கி அதயெல்லாம் பொருட்படுத்திருக்கான்? வண்டியில எருவு நெரம்பினதும் காளைகள ஓட்ட மரத்தடிக்குப் போனான். மாடுக ரெண்டும் அவன பாவமா பாத்திச்சுங்க. சுப்புனி அதுககிட்டப் பேசினான்.

“என்னடா போவோம்களா?..” மாடுகளப் பாத்துச் சிரிச்சான். ரெண்டு மாடுகளும் அவன புரிஞ்சிக்கிட்டு எழுந்து நின்னிச்சிங்க. கயித்த அவுத்து ஓட்டிக்கிட்டு வந்தவன், வண்டி நுகத்தடிய தூக்கினதும், ரெண்டும் கழுத்த நீட்டி அத வாங்குறமாரி நின்னிச்சிங்க. மாடுக கழுத்து மேல நுகத்தடிய வெச்சி கயித்த எடுத்து கழுத்துல சுத்தி கவ கம்புல மாட்டுனான். நீளமான ரெண்டு கயித்தயும், கய்யில புடிச்சிக்கிட்டு வண்டில ஒரே ஜம்புல ஏறி உக்காந்து ஹே..ன்னான்.
வண்டி மெல்லமா நவுர ஆரம்பிச்சி ஓட்டம் புடிச்சிட்டு. இங்கேருந்து ஒரு கிலோ மீட்டராவது இருக்கும் புண்ணியமூர்த்தியோட வயக்காடு. ஒரே எடத்துல அஞ்சாறு வேலி நெலம். இவன்ந்தான் ஏழெட்டு வருசமா தொடந்து பண்ணையாளு. வேலய சரியா செய்யிவான். சொன்னப் பேச்ச கேப்பான். மாடு கண்ணுகள தன்ம் வீட்டுப் புள்ளமாரி பாத்துப்பான். எதித்துப் பேச மாட்டான்ங்குற நெறய தகுதி அவனுக்கிருந்திச்சி, அந்தப் பண்ணயில அவன் தொடர்ந்து வேலயாளா இருக்கறதுக்கு. இல்லேன்னா இந்நேரம் எத்தனையோ ஆள மாத்திருப்பாங்க.
சுப்புனி உருவத்துக்கும் மனசுக்கும் சம்மந்தமில்லாத ஆளு. வாட்டசாட்டமா பாக்கவே பயமுறுத்துற தோற்றத்துல இருந்தாலும் பச்ச புள்ளமாரி இரக்க குணமுள்ள இளகிய மனசு அவனுக்கு. அதுலயும் வாயில்லா ஜீவனுங்கன்னா அவனுக்கு ரொம்ப உசிரு. அதனாலேயே இந்த வூட்டுல இருக்குற நாயிங்க, ஆடுக, மாடுக அத்தனயுமே சுப்புனிமேல தனி பாசத்தக் காட்டும்ங்க.

காளை மாடுக ரெண்டயும் குளிப்பாட்டுறதும், தண்ணி காட்டுறதும், புண்ணாக்குக் கெளறி வெக்கிறதும், கொடங்க கொடங்கயா வக்க அள்ளி போடுறதும், கொட்டுல சுத்தப்படுத்தி வக்கிறதும்னு அவன்ஞ் செய்யிற வேலய பாத்தா நமக்கே மூச்சு முட்டும். இன்னொருத்தன் வீட்டு மாடுகதானேங்குற எண்ணம் அவன் மனசுல ஒருநாளும் வந்ததேயில்ல. அதுலயும் மாட்டுப்பொங்கல்னு வந்துட்டா அவன் ஆடுற ஆட்டத்துக்கு அளவேருக்காது. கொட்டுல ஜோடிக்கிறதும், மாடுகள ஜோடிக்கிறதும் கீத்து நெறயுறதும், மாலைக் கட்டுறதும்ன்னு அவன் எடுத்துக்குற சிரத்தய பாத்து புண்ணியமூர்த்தியே பல நேரம் எரிச்சல் அடஞ்சிருக்காரு.

இதையெல்லாம் அவன் கூலிக்காவ மட்டும் செய்யிற ஆளுல்ல. ரெண்டு, மூனு நாளக்கி தொடந்து கூலியே கொடுக்கலேன்னாலும் வாயப் பொத்திக்கிட்டு இந்த வேலய பூராவும் செய்யிவானே ஒழிய, அதுக்காவ மாடுக மேல உள்ள கரிசனத்த அவன் ஒருநாளும் கொறச்சிக்கிட்டதில்ல.

மாடுகளும் அப்படித்தான். அவன ஒருநா பாக்கலேன்னாலும் மொகம் வாடிப் போயிடும்ங்க. சரியா வக்க, புண்ணாக்குத் திங்காதுங்க. யாரு போனாலும் விசும்பிக்கிட்டு முட்டுறத்துக்கு ஓடி வரும். அப்பயெல்லாம் சுப்புனிக்குத்தான் பேச்சு விழும். எல்லாம் அந்தப் பெய கொடுக்குற செல்லம். திங்கி

கொழுப்புல மெதக்குதுக ரெண்டும்னு மாடுகளுக்கும் சேர்த்து வசை விழும்.
புண்ணியமூர்த்தி அன்னிக்கி வாசல்லேயே உட்கார்ந்திருந்தாரு. சாய்வு நாற்காலிங்குறதால கண்களை மூடி ரெண்டு கைகளையும் கும்பிடுறதுபோல ஒன்னு சேத்து கண்ணு இடுக்கு ரெண்டலயும் கட்டை விரலை வச்சமாரி நாற்காலிய ஆட்டிக்கிட்டே இருந்தாரு. உள்ளுக்குள்ள பலமான யோசனை ஓடிக்கிட்டு இருக்கிறமாரி தெரிஞ்சிச்சி.

சுப்புனி வந்து துண்டையெடுத்துத் தலையில கட்டிக்கிட்டு மாட்டுக் கொட்டிலு பக்கமா போனான். கண்ண தொறந்து பாத்த புண்ணியமூர்த்தி அவனதான் எதிர் பாத்துக்கிட்டு இருந்தமாரி அடித் தொண்டையில கத்தினாரு.

“சுப்புனி…எலே…சுப்புணி..”
“இதோ…வந்துட்டேங்கய்யா..”
ஓடி வந்து கய்யிவொள கட்டி நின்னான்.
“நேத்தி என்னடா நடந்துச்சி?”
“எதக் கேக்குறீங்கய்யா?”
“மாடுக எங்கயோ போனிச்சாமே…”
“அது ஒன்னும் இல்லிங்கய்யா…”

“என்னடா… ஒன்னுமில்ல… அந்தக் கோவாலு பயலுக்கும் நமக்கும் அப்பயிலேர்ந்தே ஆவாதுன்னு உனக்குத் தெரியாதா?”
“நமக்குள்ள உள்ள பரம்பர பகை மாடுகளுக்கு எப்படிங்கய்யா தெரியும்…? பச்சய கண்டதும் ஆர்வத்துல ஓடி வயல்ல எறங்கிடுச்சிங்க..”
“ஓகோ… நிய்யி எனக்கே புத்திமதி சொல்லுறியா?”
அவ்வளவுதான். வாய மூடிக்கிட்டான்.
“நமக்கு மாடு பெரிசில்லடா… மானந்தான் பெரிசு. இந்த புண்ணியமூர்த்திக்கு அம்பத்தாறு வயசாவுது. இன்னி வரைக்கும் ஒரு நாயிகிட்ட கை கட்டி நின்னதுல்ல. பதில் சொல்லி தலய சொறிஞ்சதில்ல… ஆனா காலைல அவன் கேட்ட கேள்வி மனச கொடஞ்சிக்கிட்டேயிருக்கு”
சுப்புனி வச்சக்கண்ணு வாங்காம அவரையே பாத்துக்கிட்டிருந்தான்.

“ஒண்ணு மாட்ட ஒழுங்கா வெச்சிக்க. இல்லன்னா மாட்ட பாத்துக்குறவன ஒழுங்கா வெச்சிக்க… இல்லன்னா நீயாவது ஒழுங்கா இருங்குறான். என்னா திமிரு அவனுக்கு.? அவன சொல்லி குத்தமில்லே.. எம்மேலதான்… எம்மேலதான் குத்தம். ம்ஹூம்.. இத இப்படியே விடப்படாது… ஒரு முடிவு கட்டணும்… முடிவு கட்டணும்”.
கோர்வையில்லாம வார்த்தைக தடுமாறினிச்சி புண்ணியமூர்த்திக்கு. ஆத்திரத்துல மொகம் செவந்திருச்சி. கண்ணு ரெண்டுலயும் ஜிவ்வுன்னு பரவுனிச்சி கோவம். திரும்பவும் கண்ண மூடிக்கிட்டாரு. உள்ளுக்குள்ள துக்கத்த அடக்கறமாரி பல்லக் கடிச்சிக்கிட்டே இருந்தாரு. சாய்வு நாற்காலி திரும்பவும் ஆடத் தொடங்குனிச்சி… ஆடிக்கிட்டே இருந்தாரு. சுப்புனிக்கு எந்தப் பதிலுமே சொல்லாம அப்படியே.
மறுநாள் காலையிலேயே நாலஞ்சி பேரு கொட்டுல்ல வந்து நின்னாங்க. மாடுகள பாத்து என்னவோ காதுல கிசுகிசுத்துக்கிட்டே நின்னாங்க. கிட்டப் போறதும் மாடுக ரெண்டும் கொம்ப ஆட்டிக்கிட்டு முட்டுறமாரி தலைய அசைக்கிறதுமா ஒரு மணி நேரமா பெரிய போராட்டம்போல இருந்திச்சி.

புண்ணியமூர்த்திதான் சொன்னாரு.

“அதுக நம்மகிட்ட அடங்காதுவ… கொஞ்ச நேரத்துல ஆளு வந்திருவான். அது வரக்கும் வாங்க காப்பி சாப்பிடுவோம்”ன்னு வந்தவங்கள வூட்டுத் திண்ணைக்கு அழைச்சிக்கிட்டு போனாரு. திண்ணைல உக்காந்து காப்பி குடிச்சிக்கிட்டு இருக்கப்பவே சுப்புனி வேலைக்கு வந்துட்டான். சுப்புனி கொட்டுலு பக்கம் போவவும் வந்த ஆளுங்களும் உடனே கெளம்பி போனாங்க. இவன் சாணி அள்ளிக்கிட்டுருக்கும் போதே வந்த ஆள்ல ஒருத்தன் சொன்னான்.

“யலே… அந்த மாட்ட புடிச்சிக் காமி… பல்லு பாக்கணும்”
“எதுக்..கு..ங்..க?”
“உங்கிட்ட அதையெல்லாம் சொல்லணுமாக்கும்? காட்டுடா… பல்ல எதுக்கு பாப்பாங்க… வாங்குறத்துக்குத்தான்”
சுரீர்ன்னிச்சி சுப்புனிக்கு,
மாடுகளப் பாத்தான்… ரெண்டு மாட்டுக்கும் காலயிலேர்ந்து இவனுக படுத்தின பாட்டுல கண்ணுல பயம் கொப்புளிச்சி மின்னுனிச்சி. ராஜாக்க ரெண்டும் என்ன விட்டுப் போயிடுமா?ன்னு நெனக்கிறப்பவே அவனுக்குத் தொண்டக் கட்டிக்கிட்டதுபோல இருந்திச்சி. நேரா புண்ணியமூர்த்திக்கிட்ட ஓடுனான். என்னென்னவோ சொன்னான். கெஞ்சி கெஞ்சி பாத்தான். இனிமே வயப்பக்கம் போவாது. அதுக்கு நான் பொறுப்புங்கய்யான்னு கூட மன்றாடிப் பார்த்தான்.
புண்ணியமூர்த்தி ஒரு முடிவெடுத்துட்டா அத யாராலயிம் மாத்த முடியாது. அவன்ஞ் சொன்னது எதயும் அவரு காதுல வாங்கிக்கிடல. அவரு காரியத்துல குறியாருந்தாரு. சொன்ன வேலய செய்யுடான்னு கடைசியில அதட்டினார். வேற வழியில்லாம சுப்புனி திரும்பி வந்துட்டான். மாடுக ரெண்டையும் புடிச்சி பல்லக் காட்டுனான். வந்தவங்க எதையோ பேசிக்கிட்டானுவ. ஒண்ணும் புரியல. எல்லாம் சைகையிலேயே இருந்திச்சி.

சுப்புனிக்கு எப்படியும் மாடுகள இங்கருந்து விட்டிடக் கூடாதுன்னு உறுதியாருந்தான். இது சாதாரண சொந்தமில்ல. மாடுகன்னாலும் மனுசங்களவிட அதிகமா நேசிச்ச ஒறவுக. வாயில்லா ஜீவந்தான்னாலும் மாடுகளும் சுப்புனிய தம் உசுராவேதான் நெனச்சிச்சிங்க… ஏதாவது செய்யணும்போல இருந்திச்சி சுப்புனிக்கு, வந்தவங்கள்ல ஒருத்தங்கிட்டப் போயி மெதுவா வத்தி வச்சான்.
“ஐயா… சொல்றேன்னு தப்பா நெனக்காதீங்க… இது ரெண்டும் மாடுவளே இல்ல.. எதுக்கும், யாருக்கும் அடங்காத பிசாசுங்க… அதனால்தான் ஐயா விக்கணும்ன்னு துடிக்கிறாரு… ஒங்களப் பாத்தா நல்லவங்கமாரி தெரியுதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கப்பவே அவன் போதாத நேரம் புண்ணியமூர்த்தி அங்க வந்திட்டாரு.
“ஏண்டா அறிவுகெட்ட முண்டம். உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யுறியா? என்னைவிட மாடுகதான் உனக்கு பெரிசா? இந்த மாடுக இல்லேன்னா இன்னும் ரெண்டு மாடுகடா. இங்க வேல செய்யலேன்னா வேற எங்க போயி நிப்ப நீ? சோத்துக்கு லாட்டரி அடிக்க வேண்டியதுதான்னு கோவமா என்னென்னவோ சொல்லித் திட்டினாரு. சுப்புனிக்கு அழுகையே வந்திருச்சி. துக்கம் தொண்டய அடச்சிச்சி. பணம் கை மாறினிச்சி. மாடுகள அவுத்துக் கொடுக்க வேண்டியது தான், வேற வழி?

ஐயா சொன்னதும் மாடுகள அவுத்து வந்தவங்கக் கையில கொடுத்தான். மாடுக ரெண்டும் சீறிக்கிட்டே இருந்திச்சுங்க… கண்ணுல ஒரு மிரட்சி. பிரியும் ரணம். அடியெடுத்து வக்காம கொட்டிலு பக்கமே திரும்பவும் இழுத்திச்சுங்க.
சும்மா கொஞ்ச நாளக்கி அப்படித்தான் இருக்கும். சரியாயிடும்ன்னு புண்ணியமூர்த்தி மாடு வாங்க வந்தவர்களிடம் விளக்கம் தந்தாரு. சுப்புனிக்கு என்னவோ மாதிரி இருந்திச்சி. கொஞ்சநேரம் கொட்டிலு ஓரமா போயி மாடு கட்டுற கவனய பாத்துக்கிட்டே உக்காந்திருந்தான். புண்ணியமூர்த்தி வூட்டுக்குள்ள போவவும் சொல்லிக்காமகூட தன்னோட வூட்டுக்கு வந்திட்டான். ஏங்கி ஏங்கி பெருமூச்சு விட்டான். மனசு வலிச்சிச்சி. மாடுக ரெண்டும் வந்து அவங்கிட்ட அழறமாரி நெனச்சி உருகுனான். மாடுக நெனப்புல உடம்பே முடியாம சில நாளுக படுக்கையாவே படுத்திட்டான்.

ஒருவாரம் கழிச்சி ஒருநா காலையிலேயே புண்ணியமூர்த்தி அழச்சிட்டு வரச் சொன்னாருன்னு ஒருத்தன் வந்து தகவலு சொன்னான். சுப்புனி விருப்பமில்லாம அர மனசாவே கிளம்பிப் போனான்.

“ஏண்டா உடம்புக்கு ஏதும் முடியலியா? ஒருவாரமா வேலக்கி வரலயே… சொல்லிக் கூட அனுப்ப மாட்டியா? அவ்ளோ பெரிய ஆளாயிட்டியா?”

புண்ணியமூர்த்தி வார்த்தைகள்ல கோவம் கட்டுக்கடங்காம கொப்பளிச்சிக்கிட்டு நின்னிச்சி. எதித்துப் பேசறதுன்னா என்னான்னே தெரியாத சுப்புனி மனச தெடப்படுத்திக்கிட்டு தைரியமா சொன்னான்.

“ரெண்டு உசுருங்களோட பாசத்துக்கு முன்னால என்னால கூலிக்கு மாரடிக்க முடியலங்கய்யா… என்ன மன்னிச்சிடுங்க… மாடு வாங்கிட்டுப் போன பக்கத்து ஊரு பண்ணைல நான் வேலக்கி சேந்துட்டேன். இங்கருந்து ரெண்டு கிலோமீட்டர் நடந்து தான் போறேன்னாலும் அது மனசுக்கு நிம்மதியாருக்கு. நெறவாவுமிருக்கு. நீங்க வேற ஆளு பாத்துக்கிடுங்க.”

சுப்புனி பணிஞ்சி சொல்லிக்கிட்டே இருந்தான். புண்ணியமூர்த்தி மனசளவுள சுப்புனியோட கால்கள்ல விழுந்து கிடந்து துடிச்சிக்கிட்டிருந்தாரு

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *