இலங்கை

ராஜபக்ஷ குடும்பத்தில் அனைவர் மீதும் வழக்கு; இல்லாதவர்களே இல்லை

எவரையும் பழிவாங்க நாம் நினைத்தால் விளைவுகள் பாரதூரமானதாக அமையும்.மக்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்பினர் மீண்டும் ஒருபோதும் ஆட்சிக்கு வரமாட்டார்கள். ஒன்று நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.அல்லது எங்களை விட சிறந்த தரப்பினர் ஆட்சிக்கு வருவார்கள் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமைஇடம் பெற்ற ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும், ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதும் அரசியல் பழிவாங்கல் அல்ல அது அரச நிர்வாக கட்டமைப்பின் ஒரு பகுதி . ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்காகவே மக்கள் எமக்கு ஆணை வழங்கினார்கள். அந்த ஆணையையே கடுமையாக செயற்படுத்துகிறோம்.இதில் எவ்வித அரசியலும் கிடையாது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தை வலுப்படுத்துவதற்காகவும், நடைமுறையில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காகவே ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் கொண்டு வரப்பட்டது. அரச நிறுவனங்களின் வருவாய் கிடைப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்தல் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சுயாதீனம் மற்றும் கடுமையான செயற்பாடுகளின் ஊடாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தில் எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது.ஊழல்வாதிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.ஊழலற்ற அரச நிர்வாகம் வேண்டும், பலமான பொலிஸ் சேவை வேண்டும் என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள்.ஆனால் எதிர்க்கட்சியினர் அதனை எதிர்க் கின்றார்கள். போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்கிறார்கள். ஊழல்வாதிகள் கைது செய்யப்படும் போது அவர்களை கொண்டாடுகிறார்கள்.இது முற்றிலும் கீழ்த்தரமானதொரு செயற்பாடு .எதிர்க்கட்சியினர் ஊழலுக்கும் எதிர்ப்பு, ல் ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதிதாக எவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. தற்போதைய கைதுகளுக்கான வழக்குகள் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னரே தாக்கல் செய்யப்பட்டன . ஆனால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.டீல் செய்து வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள். அந்த நிலைமை தற்போது கிடையாது. என்பதால் சட்டத்தின் பிரகாரம் கைதுகள் இடம்பெறுகின்றன.

ராஜபக்ஷ குடும்பத்துக்கு இல்லாத வழக்குகள் ஏதும் இல்லை.இந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும், பல வழக்குகள் உள்ளன.சகல மோசடிகளிலும் ஏதாவதொரு வழியில் தொடர்புப்பட்டுள்ளார்கள்.சிரந்தி ராஜபக்ஷ சிரிலிய கணக்கு மோசடியில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.இவரை இலங்கையின் மாதா என்று ஒருசிலர் தற்போது குறிப்பிடுகிறார்கள்.இது இவர்களின் அறியாமை.

அரசியல் பழிவாங்கலை முன்னெடுக்க வேண்டுமானால் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில் பலரை கைது செய்திருப்போம். வழக்குகளை முறையாக விசாரணைகளை செய்வதற்கு அரசாங்கம் என்ற அடிப்படையில் தொடர்புடைய நிறுவனங்களுக்கான வசதிகளை வழங்கினோம். நீதிமன்றங்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.இதில் அரசாங்கம் எவ்வகையில் தலையிட்டுள்ளது.

ஊழல்வாதிகள் சிறை செல்லும் போது அவர்களின் குடும்பத்தாருக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை நாங்கள் அறிவோம்.இதற்கு எம்மால் எதுவும் செய்ய முடியாது. ஊழல்மிக்க அரச தலைவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒருசில அரச அதிகாரிகளும் ஊழல் மோசடிகளுக்கு பழக்கப்பட்டுள்ளார்கள்.அவர்களுக்கு எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மஹிந்த,ரணில் காலத்தில் ஊழலுக்கு பழக்கப்பட்டவர்கள் தற்போது நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகிறார்கள்.இதில் எமது தவறு என்ன உள்ளது?

எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. நாங்கள் அவ்வாறு பழிவாங்க நினைத்தால் விளைவுகள் பாரதூரமானதாக அமையும். மக்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்பினர் மீண்டும் ஒருபோதும் ஆட்சிக்கு வரமாட்டார்கள். ஒன்று நாங்கள் மீண்டும் வருவோம்.அல்லது எங்களை விட சிறந்த தரப்பினர் ஆட்சிக்கு வருவார்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *