செட்டியார் தெருக் கைதை உடனடியாக நிறுத்துங்கள்; தாக்குதல் நடத்துவதாகவும் மனோ விசனம்

செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்களை பொலிஸார் ஒளிப்பதிவுகளை பார்வையிட்டு, அவர்களை கைதுசெய்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனை உடனடியாக அரசாங்கம் நிறுத்த வேண்டும். அதேபோன்று கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். எங்களுடன் விளையாட வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எம்.பி.யுமான மனோகணேசன் வலியுறுத்தினார்
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசேட கூற்றோன்றை முன்வைத்தே இதனை வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,
கொழும்பு செட்டியார் தெருவில் திருட்டு நகை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளச் சென்ற பொலிஸார், அங்குள்ள நபர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் திருட்டு நகை தொடர்பில் தேடிச்சென்றமை தொடர்பில் எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அடிக்க முடியாது. அப்படி இருக்கையில் பொலிஸார் எவ்வாறு தாக்குதல் நடத்த முடியும்?
அதேநேரம் பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்கு மக்கள் வீதிக்கிறங்கி போராட்டம் நடத்தினார்கள். இவ்வாறு போராட்டம் நடத்தியவர்களை ஒளிப்பதிவு செய்து, அதனை பார்த்து , ஒவ்வாெருவராக கைது செய்து வருகிறார்கள். அவர்கள் மத்திய கொழும்பு குற்றவிசாரணைப் பிரிவில் தடுத்துவைத்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அதனால் பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜேபால, அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு உத்தரவிட வேண்டும்.
பொலிஸ்மா அதிபர் மற்றும் மத்திய கொழும்புக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை தொடர்புகொண்டு கதைத்தபோது, அவர்களை விடுவிப்பதாக எனக்கு வாக்குறுதியளித்தார்கள். அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் வாக்குறுதியளித்தார். இந்த விடயத்தில் புறக்கோட்டை மற்றும் மாளிகாவத்தை பொலிஸ் தவறு செய்து வருவதாகவே எமக்கு தெரிகிறது. திருட்டு இடம்பெற்றால், அது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பி்ல்லை. ஆனால் தாக்குதல் நடத்தக்கூடாது. அதேநேரம் அந்த மக்களுக்கு போராட்டம் செய்யும் உரிமை இருக்கிறது.
போராட்டம் நடத்துவதற்கு கற்றுத்தந்த மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம், தற்போது போராட்டம் நடத்தியபவர்களை தாக்குவதற்கு வெட்கப்பட வேண்டும். செட்டியார் தெருவில் மிகவும் வசதிகுறைந்த, வியாபாரம் செய்யும் மக்களும் இருக்கிறார்கள். நகை கடை வியாபாரிகளும் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நேர்மையாக செயற்படக்கூடியவர்கள். அதனால் பொலிஸார் அவர்களை தாக்கக்கூடாது, அவ்வாறு மீண்டும் இடம்பெற்றால், போராட்டம் நடத்துவதற்கு நான் அங்கு செல்வேன். அதனால் எங்களுடன் விளையாட வேண்டாம்.
இவ்வாறு கைது செய்து தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைவரையும், எனக்கு வாக்குறுதியளித்த படி உடனடியாக விடுவிக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதற்கு சபையில் இருந்து அமைச்சர் வசந்த சமரசிங்க பதிலளிக்கையில், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு நியாயத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
![]()