இலங்கை

குடப்பொல தேரரைப் போல்; ஞானசார தேரரையும் சுட்டுக்கொல்லுங்கள்;  சிறிதம்ம தேரர் கூறுகிறார்

தேசியப்பற்றுள்ள பிரபல பௌத்த துறவியான வண. குடப்பொல தேரருக்குச் செய்யப்பட்டது போல, பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வண.கலகொடஅத்தே ஞானசார தேரரையும் சுட்டுக்கொல்வது மேல் என சிறிதுவே சிறிதம்ம தேரர் (சிறி சமந்தபத்ர தேரர் என்றும் அழைக்கப்படுபவர்) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவித்த சிறிதம்ம தேரர், ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை ஒரு புதிய தீர்ப்பு அல்லவென்றும், அது முன்னர் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் நீடிப்பு மட்டுமே என்றும் கூறினார்.
நீதியான மற்றும் நேர்மையான ஆட்சிக்காக பௌத்த போதனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ‘தச ராஜ தர்மம்’ (பத்து நற்பண்புகள்) எனும் தத்துவங்களை ஆட்சியாளர்கள் பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, தச ராஜ தர்மத்தின் இறுதி இரண்டு கொள்கைகளான ‘காந்தி’ (பொறுமை/சகிப்புத்தன்மை) மற்றும் ‘அவிரோதன’ (எதிர்ப்பின்மை/ஒப்புரவு) ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

“ஆட்சியாளர் எப்போதும் பொறுமையுடன் இருக்க வேண்டும்; மக்களுக்கு எதிராக நிற்கக்கூடாது. ஆட்சியாளர்கள் ‘காந்தி’ மற்றும் ‘அவிரோதன’ ஆகிய கொள்கைகளைப் பின்பற்றி நடந்தால், பெரும்பாலான பிரச்சினைகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்,” என்று அவர் கூறினார்.

ஞானசார தேரர் முன்னர் காவி உடைகளுடனேயே சிறையிலடைக்கப்பட்டார் எனச் சுட்டிக்காட்டிய சிறிதம்ம தேரர், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் இப் பிரச்சினை கையாளப்பட்ட விதத்தையும் அவர் விமர்சித்தார். ஞானசார தேரருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்து ஜனாதிபதி இப் பிரச்சினையைத் தீர்த்திருக்க முடியும் என அவர் கூறினார்.
“ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆட்சிமுறையின் தத்துவமாகத் தொடரும் ‘தச ராஜ தர்மத்தை’ பின்பற்றுவதே சிறந்தது,” என்று அவர் கூறினார்.

தச ராஜ தர்மத்தின் அடிப்படையில் பௌத்த துறவிகள் பாரம்பரியமாக ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டி வந்துள்ளதாகவும், ஆட்சியாளர்கள் தவறு செய்யும்போது அவர்கள் முன்னின்று அறிவுறுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

“ஞானசார தேரர் ஒரு குற்றவாளி அல்ல. அவர் யாரையும் கொல்லவுமில்லை, கொள்ளையடிக்கவுமில்லை,” என்று சிறிதம்ம தேரர் கூறினார்.
ஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அவர், இருப்பினும் பொருத்தமான மன்னிப்பு குறித்து பரிசீலிப்பதற்கு முன், ஆவணங்களின் துல்லியத்தன்மையை ஆராய்ந்து குறைகளைக் கண்டறிய ஜனாதிபதிக்கான சந்தர்ப்பம் உள்ளது என்றும் கூறினார்.

குறிப்பு: 1848 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது முக்கிய பௌத்த துறவியாக விளங்கிய குடப்பொல தேரர், 1848 ஆகஸ்ட் 26 அன்று கண்டி போகம்பரை ஏரிக்கு அருகில் தனது காவி உடைகளுடனேயே படைப்பிரிவினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *