உலகம்

பனிப்போருக்கு பிறகு ஜெர்மனியில் மிகப்பெரிய சர்ச்சை: முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது

வெளிநாட்டு உளவு அமைப்பிற்காக இரகசிய ஆவணங்களை விலைக்கு வாங்கி பகுப்பாய்வு செய்து பயன்படுத்திய குற்றச்சாட்டில், ஜெர்மனியின் முன்னாள் உளவுத்துறை தலைவருக்கு எதிராக அந்நாட்டின் கூட்டாட்சி உச்சநீதிமன்ற நீதிபதி உத்தியோகபூர்வ கைது பிடியாணையை பிறப்பித்துள்ளார்.

உளவு பார்த்தல் மற்றும் தேசத்துரோக முயற்சி சந்தேகத்தின் பேரில் 80 வயதான ஆகஸ்ட் ஹேனிங் (August Hanning) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட சம்பவம், ஜெர்மன் உளவுத்துறையினரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பனிப்போரின் முடிவுக்குப் பிறகு ஜெர்மனியில் இடம்பெற்ற மிகப்பாரிய இரகசிய ஆவண கசிவுகளில் ஒன்றாக இது உருவாகக்கூடும் என்றும் கருதப்படுகிறது.

மேலும், முக்கியத் தகவல்களை ஜெர்மனியுடன் பகிர்வதை வெளிநாட்டு உளவு அமைப்புகள் நிறுத்திவிடக்கூடும் என்ற கவலையையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வெளிநாட்டு உளவு அமைப்பு எது என்பதை கூட்டாட்சி அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் வெளியிடவில்லை. அத்துடன் ஹேனிங்கின் பகுப்பாய்வு தகவல்கள் உரிய தரப்பை சென்றடைந்ததா என்பதும் இன்னும் தெளிவடையவில்லை.

விசாரணையாளர்கள் அஜர்பைஜான் நாட்டுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக ‘டெர் ஸ்பீகல்’ (Der Spiegel) செய்தித் சஞ்சிகை செவ்வாய்க்கிழமை இரவு செய்தி வெளியிட்டிருந்தது.

ஹேனிங் அந்நாட்டின் முகவர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அஜர்பைஜான் புதன்கிழமை இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *