நாமலுக்கு எதிரான வழக்கு; இந்திய பணிப்பாளர்கள் இருவருக்கு பிடியாணை

நாமல் ராஜபக்ஷ எம்.பி.க்கு எதிரான சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, ‘கிரிஷ் ட்ரான்ஸ்வர்’ தனியார் நிறுவனத்தின் இந்திய பணிப்பாளர்கள் இருவருக்கு பிடியாணை உத்தரவை பிறப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இவ்விசாரணைக்கு அமைய கிரிஷ் ட்ரான்ஸ்வர் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்களான அமித் கட்டயார் மற்றும் ராஜேந்திர பிரசாத் குப்தா ஆகிய இந்திய பிரஜைகள் இருவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது.
இது தொடர்பில் எதிர்வரும் தினங்களில் பரிசீலிப்பதாக நீதவான் இதன்போது அறிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த இரு இந்தியர்களும் முதலாவது மற்றும் இரண்டாவது சந்தேகநபர்களாவர் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
குறித்த இரு சந்தேகநபர்களும் வாக்குமூலம் வழங்குவதற்காக பல தடவைகள் அழைக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியது.
குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸார் மூலமாக சிவப்பு பிடியாணை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
எனவே, பிடியாணை தொடர்பான உத்தரவைப் பிறப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.
பிடிஆணையைப் பெற்றுக்கொள்வது தொடர்பான ஆவணங்களை எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதால், அதற்குரிய திகதியை ஒதுக்கித் தருமாறும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரியது.
![]()