அரசின் ‘நாய் வரி’ இன்று வருகிறது!; மாத்தளையில் போராட்டம்

அரசாங்கம் விதிக்கத் திட்டமிட்டுள்ள’ நாய் வரி’க்கு எதிராக, மத்தளை மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வீரபுரன்னப்பு நினைவுத் தூபிக்கு முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விசர்நாய்க்கடி நோயை ஒழிப்பதையும் நாய்களைப் பதிவு செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் மீது வரி விதிப்பதற்கான அரசாங்கத்தின் அறிவிப்பை இன்று 7 ஆம் திகதி வெளியிட அரசினால் எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து, மாத்தளை மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்றுக் காலை 8 மணியளவில் வீரபுரன்னப்பு நினைவுத் தூபிக்கு முன்பாகப் போராட்டம் நடத்தினர்.
உள்ளூராட்சி மன்றங்கள் வாயிலாக நாய் வரியை விதிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்தத் திட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியுமே இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
1848-ஆம் ஆண்டில், அக்கால ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் விதித்த ‘நாய் வரி’க்கு எதிராக வீரபுரன்னப்பு உள்ளிட்ட வீரர்கள் போராடினர்.இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், வீரபுரன்னப்பு நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய பின்னரே தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.
ஏற்கனவே கடும் சிரமங்களை எதிர்கொண்டு வரும் மக்கள் மீது இத்தகைய வரிகளை விதிப்பது அவர்களுக்கு மேலும் துயரத்தையே ஏற்படுத்தும் என்பதால், இந்தச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகளை வலியுறுத்தும் நோக்கிலேயே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக இதில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
![]()