நாமலுக்கு 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கலில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவரின் விளக்க மறியலை நீடித்து நீதவான் அசங்க போதரகம உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மற்றுமொரு சந்தேக நபரான, கிரஷ் நிறுவனத்தின் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தனவின் விளக்க மறியலும் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வழக்கை எதிர்வரும் 16ஆம் திகதி விசாரணைக்கு எழுத்துக்கொள்ளும் போது, சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்று நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் 4ஆவது சந்தேகநபராக நாமல் ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற வழக்கில் நாமல் ராஜபக்ஷ நேற்று வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். இதன்படி நேற்று குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். இதன்போதே அவரின் விளக்க மறியலை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற எயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()