உலகம்

அமெரிக்க போர் விமானங்களுக்கு அச்சுறுத்தல்: ஒப்புக்கொண்டார் ட்ரம்ப்

ஈரான் தொடர்பான அச்சுறுத்தல் காரணமாகவே, பிரித்தானிய விமானப் படையின் தளத்திலிருந்து அமெரிக்காவின் B-1 குண்டுவீச்சு விமானங்கள் அகற்றப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

அமெரிக்கக் குண்டுவீச்சு விமானங்களின் ஐரோப்பிய முதன்மைத் தளமான RAF Fairford தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த விமானங்கள், அண்மையில் ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தன.

கடந்த வாரம், ஈரானின் புரட்சிகரக் காவல்படையினரால் சட்டப்பூர்வ இலக்காக அறிவிக்கப்பட்ட இத்தளத்தின் அருகில், பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாகச் சந்தேகத்தின் பேரில் ஐந்து பிரித்தானிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இது பற்றி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட டொனால்ட் ட்ரம்ப்,

” அங்கு அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது, எனவே அவற்றை ஏன் அங்கேயே விட்டுவைக்க வேண்டும்? அவற்றைப் பணியிட மாற்றம் செய்ய மிகக் குறைந்த தொகையே செலவாகும். அச்சுறுத்தல் ஏற்படும்போது இடத்தை மாற்றுவது பிரச்சினையைத் தணிக்கும், மேலும் இந்த அச்சுறுத்தலுக்குக் காரணமான நபர்களை நாங்கள் அறிவோம்” என்றார்.

அவர்கள் ஈரானுடன் தொடர்புடையவர்களா என்று கேட்கப்பட்டதற்கு, “அவர்கள் ஈரானுடன் தொடர்புடையவர்களே” என்று பதிலளித்தார்.

முன்னதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே விமானங்கள் மாற்றப்பட்டதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தெரிவித்திருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *