அண்டங்காக்கையும் ஊர்க்குருவியும் – 08 … சோலையூர் குருபரன்


எதிர்பார்ப்பு….
‘இப்போது விதைக்கிறோம். லாபம் என்பது நம் கையில் இல்லையே? விழைந்து வெட்டிய பின்னர்தான் எல்லாந் தெரியும்’ என்ற எதிர்பார்ப்போடு முருகன் தனக்குச் சொந்தமான நாலேக்கர் வயலை விதைத்துப் பராமரித்து வந்தான். நகை நட்டுகளை அடகு வைத்து, கடன்பட்டு இன்று அறுவடை தினம் வரைக்கும் வந்திருக்கிறான். இதற்கிடையில் இருமுறை வந்த பெரு வெள்ளம், அடைமழை, யானைத் தொல்லை, ஏனைய விலங்குகளின் தாக்கம், பூச்சி, புழுக்களின் தாக்கம், வரட்சி, வளமாக்கிகள், கிருமி கொல்லிகள் கிடைப்பதில் தாமதம், பணக் கஷ்டம் காரணமாக உரிய காலத்துக்குப் பயன்படுத்தாமை, துன்பம், துயர், வேதனை, அலைச்சல், மன உழைச்சல், வயல் காவல் காரணமாகப் பல நாள் நித்திரையின்மை எனப் பலவற்றைக் கடந்துதான் இன்று அறுவடைக்கு வந்திருக்கிறான். பல ஏக்கங்கள், தவிப்புக்கள், ஐயங்களுக்கு மத்தியில் ‘திக்கற்ற ஏழை பாழைகளுக்குத் தெய்வந்தான் கதியெனப்’ பல தெய்வங்களுக்கு நேத்திக் கடனும் வைத்திருக்கிறான்.
முருகன் சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். சாதாரண தரம் வரைக் கற்றிருக்கிறான். மூன்று பிள்ளைகளுக்குத் தந்தை. மூன்று பிள்ளைகளும் கிராமத்தில் உள்ள பாடசாலையில் இடை நிலையில் கற்றுக் கொண்டிருக்கின்றனர். மனைவி செல்வி உயர் தரம் வரைக் கற்றுச் சித்தியடைந்தவள். கணவன் இருமுறை கட்டாருக்குத் தொழிலுக்குச் சென்று வந்ததனால் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக அரச தொழிலுக்கு முயற்சிக்கவில்லை. கணவனுக்கு வலக்கரமாகவும், பிள்ளைகளுக்குச் சிறந்த தாயாகவும் இருந்து வருகிறாள். ஆனால் புத்திசாலி. எதை, எங்கு, எப்படிச் செய்ய வேண்டும் எனப் பக்குவமாக ஆய்ந்து செயற்படுவாள். வீண் பிரச்சினைகளுக்கு ஒதுங்கி இருப்பாள். அவளும் முருகனின் உறவுக்கார ஏழைத் தொழிலாளியின் மகள்தான்.
முருகன் கட்டாரில் இருந்து அனுப்பிய பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழாமல் இரண்டு போகம் செய்கை பண்ணக்கூடிய நாலேக்கர் காணி, வளவு வாங்கி, ஓரளவு வசதிகளுடன் கல் வீடு கட்டிப் பிள்கைளின் பெயரில் ஒரு தொகைப் பணத்தை நிலையான வைப்பிலிட்டு, முருகனுக்கு ஒரு மோட்டார் சைக்கிள், தனக்கும் பிள்ளைகளுக்கும் நகை நட்டுக்கள், ஆடு, மாடு, கோழி ஆகியவற்றையும் சேர்த்திருக்கிறாள. தான் வாழ்ந்த பழைய வாக்கையை மறக்காமல் பவுசு, ஆடம்பரமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தான் அழகானவள் என்ற பெருமை அவளுக்கில்லை. எதையும் கணவனுடன் கலந்துரையாடி, முடிவெடுத்தே செய்வாள். தனது பாவனைக்காக ஒரு ஸ்கூட்டி பைக்கும் வைத்திருக்கிறாள். முருகனின் வயல் காணி ஊரில் இருந்து நான்கு மைல் தொலைவில் உள்ளது.
முருகனின் ஊர் மாஞ்சோலைக் கிராமம். அது ஓர் அழகிய கிராமம். பேருக்கேற்றால் போல் ஒவ்வொரு வீட்டிலும் வகை வகையான மாமரங்களும் தென்னை மரங்களும் சோலை போல் காணப்படுகின்றன. பல வீடுகளில் பலா, வாழை, தோடை, எலுமிச்சை, முருங்கை எனப் பலவும் உள்ளன. ஊரில் பிள்ளையார், கண்ணகையம்மன் கோயில்களும் உள்ளன. மத்தியில் மகா வித்தியாலயமும் ஓரிரு அரச அலுவலகங்களும் பல கடைகள், வாராந்தச் சந்தை, பொதுப் போக்குவரத்து எனப் பல வசதிகளைக் கொண்டது மாஞ்சோலைக் கிராமம். மரபுகள், சம்பிரதாயங்கள், ஊர்க் கட்டுப்பாடுகள், சமய நடைமுறைகள் ஆகியவற்றை மாறும் தொழினுட்ப உலகுக்கு ஈடுகொடுத்து கட்டுக் கோப்புடன் வாழ்க்கை நடத்தும் மக்களைக் கொண்ட கிராம் அது. ஊரின் மத்தியில் உள்ள வேம்பு மரத்தில் அண்டங்காக்கை கூடு கட்டி வாழ்ந்து வருகிறது. அது முருகனின் குடும்பம் பற்றி நன்கு அறிந்திருந்து.

முன்பெல்லாம் முகமக்காரன் தலைமையிலான வெட்டுக் கூட்டம் வயலை அறவடை செய்யும். ஒரு நாள் அறுவடை செய்து இரண்டாம் நாள் உப்பட்டி புரட்டிக் காயவைத்து, மறுநாள் உப்பட்டியைக் கட்டிச் சூடு வைப்பார்கள். பிறிதொருநாள் உழவு இயந்திரம் அல்லது ஒரு தொடுவை எருமை மாடுகளைக் கொண்டு சூடு மிதித்து, நெல்லைத் தூற்றி எடுத்துச் செலவுகள் எல்லாம் முடித்து மிகுதி நெல்லை வீடு கொண்டு சேர்ப்பார்கள். அறுவடை செய்து பல நாட்களின் பின்னரே இலாப நட்டம் தெரியவரும். இப்போதெல்லாம் அப்படியல்ல அறுவடைத் தினமே இலாப நட்டம் தெரிந்துவிடும். முருகனும் பல நேத்திக் கடன்கள் வைத்து வயலுக்குள் அறுவடை இயந்திரத்தை இறக்கி இருந்தான். வக்கடை வெட்டுதல், மூலை வெட்டுதல், நெல்லுப் பிடித்தல், கட்டுதல், உழவு இயந்திரத்தில் ஏற்றி இறக்கல் என்பவற்றுக்காகத் தன்னுடன் உதவிக்கு இருவரைக் கூலிக்கு அமர்த்தி இருந்தான். அறுவடை இயந்திரத்தில் இருந்து உரிய இடத்துக்கு நெல்லைக் கொண்டு செல்வதற்காக உழவு இயந்திரமொன்று பெட்டியுடன் ஆயத்தமாக இருந்தது. எட்டு மணிக்கு வயலுக்குள் இறங்கிய அறுவடை இயந்திரம் மிக வேகமாக நேர்த்தியாக அறுவடை செய்து கொண்டிருந்தது.
வெட்டு மெசின் அரைவாசியை அறுவடை செய்து முடிவதற்குள் பருமட்டாக இலாப நட்டத்தைக் கணித்துவிட்டான் முருகன். கவலையும் சோகமும் தொய்ந்த முகத்துடன் காணப்பட்டான். இதற்கிடையில் பணியாளர்களுக்குக் காலை உணவு தேநீர், சிற்றுண்டியும் கொடுத்துவிட்டான். கைப்பேசியில் பகல் உணவைச் சீக்கிரம் தயாரிக்குமாறு கூறச் செல்விக்கு அழைப்பெடுக்கிறான். மறு முனையில் இருந்து செல்வி “என்னங்க வெட்ட இன்னும் கனக்கக் கிடக்குதோ? விளைச்சல் எப்படி இருக்கு. பறவாயில்லதானே” என்றதும் முருகன் சோகத்துடன் “செல்வி பகல் சாப்பாடச் சுறுக்கா ரெடி பண்ணு ஒரு மணிக்குள்ள வந்திடுவம்” எனக் கூறக் கைப்பேசியை நிறுத்தி விட்டான். செல்வி புத்திசாலி அல்லவா? நிலமையைப் புரிந்து கொண்டு சமையல் வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டாள். அவள் எதையும் சமாளித்துப் பழக்கப்பட்டவள்.
மதியமாகும் போது வேளாண்மை முழுவதும் வெட்டப்பட்டு விட்டன. ஏற்றிக் கொண்டு கொட்டப்பட்ட நெல்லைக் காயவைத்து மீண்டுமொருமுறை தூற்றி எடுத்தால் செலவெல்லாம் போக ஏறக்குறைய ஒரு இலட்சம் வரை நட்டமாகும் என்பதையும் கணிப்பிட்டுவிட்டான். நெல்லைக் காயவைத்துப் பின்னர் விற்பனை செய்தால் தற்போதைய விலையினையும்விடச் சற்று அதிக விலைக்கு விற்கலாம். அதிலும் பாதிப்பும் இருக்கிறது. நெல்வைக் காயவைக்கும் போது நிறை குறைந்துவிடும். தமது சொந்த முதல் அனைத்தையும் இட்டுக் கடன் பெறாமல் வேளாண்மை செய்தவர்கள் நெல் விலை கூடிய பின்னர் விற்பனை செய்வார்கள். அவர்களுக்குப் பாதிப்பில்லை. முருகன் நகை, நட்டுக்களை வங்கியில் அடகு வைத்துக் கடனும் வாங்கி வேளாண்மை செய்தவனல்லா? அதனால் தாமதித்து வைத்து விற்பது பல சிரமங்களை ஏற்படுத்தலாம் என்பதனால் மோசடிக்காரர்களினால் தீர்மானிக்கப்பட்ட அறா விலைக்கு விற்பனை செய்துதான் ஆக வேண்டும். இதுதான் பெரும்பாலான விவசாயிகளின் தற்போதைய நிலவரமாகும்.
ஒன்றரை மணியளவில் 55 மூடை நெல்லுடன் முருகன் வீடு வந்து சேர்ந்தான். செல்வி எதுவும் அவனிடம் கேட்கவில்லை. எதையோ பறி கொடுத்தவன் போல் காணப்பட்டான். “ஞானமண்னே எல்லாம் ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறன், நெல்லப் பறித்து அதுல அடுக்கிப் போட்டுக் கையக் கால முகத்தக் கழுவித்து வாங்கோ சாப்பிடலாம்” என்றாள் செல்வி. நல்ல விளைச்சலை எதிர்பாத்து பசளை, கிருமி, களை நாசினிகளை உரியவாறு முறைப்படி பயன்படுத்தி இருந்தான் முருகன். அதில் எல்லாம் செலவுச் சிக்கனம் பார்க்கவில்லை. அவன் என்ன செய்வது. விதைத்த பின்னர் உரிய மழை பெய்யவில்லை. நான்கு தடவை பெய்த அடை மழையும் அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளமும் விளைச்சலை வெகுவாகப் பாதித்துவிட்டது. முருகன் எதையும் பெரிதாகத் தாங்கிக் கொள்ளமாட்டான். விரைவில் மனமுடைந்து விடக்கூடியவன்.
சாப்பிடும் போது “புள்ள செல்வி முருகன் எந்தக் குறையும் வைக்காம நல்லாத்தான் வெள்ளாமச் செய்தவன். ஒண்டும் நம்ம கையல இல்லையே. இயக்கையும் பாதிச்சுப் போட்டுது. அதனால் அரைவாசிக்கு மேல் விளைச்சல் குறைஞ்சித்து. என்ன செய்வது. எதிர்பாத்ததெல்லாம் நடக்குதா? அவன் மனமுடைஞ்சி பொயிருக்கான். பாத்து நல்லதச் சொல்லித் தேத்திக்கோ” என்று கூறினார் ஞானம். இருவரும் சாப்பிட்டு முடிந்ததும். ‘போயித்துப் பிறகு வருகிறோம்’ எனக் கூறி விடைபெற்றுச் சென்றுவிட்டனர். இத்தனையையும் மாமரக் கிளை ஒன்றில் அமர்ந்திருந்து கூர்ந்து அவதானித்துக் கொண்டிருந்த அண்டங்காக்கை பறந்து வந்து கண்ணில் பட்ட உணவுப் பருக்கைகளைப் பொறுக்கிக் கொண்டு சோகத்துடன் தனது கூடு நோக்கிப் பறந்து சென்றது.
அண்டங்காக்கை முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருக்கும் தனது மனைவிக்கு (பெண் காகத்துக்கு) உணவினைக் கொடுத்துவிட்டுப் பறந்து சென்று அருகிலுள்ள கிளையில் அமர்ந்து கொண்டு ஊர்க்குருவியின் வருகையை எதிர்பார்த்துச் சோகத்துடன் இருந்தது. வானவெளியில் வேகமாகப் பறந்து கொண்டிருந்த ஊர்க்குருவி அண்டங்காக்கை சோகத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்டு, தாளப் பறந்து வந்து அருகில் அமர்ந்து கொண்டது.
“வா தம்பி என்ன சில நாளாகக் காணல்லை. எங்காச்சும் போனதோ” என ஊர்க்குருவியைப் பார்த்துக் கேட்டது. இல்லை அண்ணே! கொஞ்சம் வேலையாப் போச்சுது. அதுதான் இந்தப்பக்கம் வரல்ல. அது சரி அண்ணே முகத்தப் பாக்கச் சோகந் தெரியுது. ஏதாச்சும் நடந்துச்சோ” என ஊர்க்குருவி வினவியது. “இல்லடா தம்பி, வெவசாயம் செஞ்ச வெவசாயிகளப் பாத்தாக் கவல கவலயாக வருது. இந்த வருசம் பலருக்குக் கையோடு நட்டமாப் போச்சுது. அப்படித்தான் நம்ம முருகன் அண்ணனுக்கும். நூறு மூடைக்கு மேல விளைய வேண்டிய நெல் வெறும் 55 மூடையத்தான் கொண்டு இறக்கிருக்காங்க. இந்த வருசம் ஒரு லச்சம் வரை நட்டமாம் எண்டு பிரம புடிச்சாப்போல இருக்காரு. இந்த வருசம் வந்த வெள்ளம், பெருமழை, வரட்சி எண்டு நெறயப் பெர் நட்டப்பட்டுப் போய்த்தாங்க. அதுதான் கவலையா இருக்கன்” என்றது அண்டங்காக்கை.

“அண்ணே பெரும்பாலான வெவசாயிகள் ஆராலும் கவனிக்கப்படாமத்தான் இருக்கிறாங்க. அரசும் பெரும்பான்மைச் சமூகத்துக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தத் தமிழ் மக்களுக்குக் கொடுக்கிறல்ல. இந்தப் பகுதில வெள்ளாம எல்லாம் வெட்டி முடிந்த பிறகு நெல்லுக்கான உச்ச வெலயத் தீர்மானித்து வாங்குறத்துக்கு நிதியும் ஒதுக்கிறாங்க. அதுல எந்தப் பயனும் தமிழ் மக்கள வந்து சேருதில்ல. இவங்க ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்துவாங்க அதுக்கிடையில மில்லு முதலாளிமாரும் இடைத் தரகர்பளும் அறா வெலக்கு வாங்கிக் கொள்ளையடிச்சித்துப் போயிடுவாங்க. கொறஞ்ச வெலக்கு நெல்ல வாங்கி அரிசி வெலயையும் கொறைக்க மாட்டாங்க. வெவசாயிகள் பாடும் பாமர மக்களின் பாடும் திண்டாட்டந்தான்.
பெரும்பான்மைச் சமூக மக்கள் பிந்தித்தான் அறுவட செய்வாங்க. அத வைச்சித்தான் வாங்கிற வெலயத் தீர்மானிக்கிறாங்க. இதுதான் இந்த நாட்டுல நடக்குது. மக்கள்தான் பாவப்பட்டவங்க. ஆரோ எவரோ செய்ய பழத்த எவனோ பறிசித்துப் போறமாதிரி வெவசாயிகளின் உழைப்பில இன்னொருவன் சம்பாதிக்கிறான். பசள, பூச்சி மருந்து, கள கொல்லி மருந்தும் நேரத்துக்குக் கிடைக்காமத் கஷ்டப்படுறாங்க. மழை, வெள்ளம், வறட்சி. யான எண்டு ஒரு பக்கம் அழிஞ்சி போகுது. இப்ப இயக்கையிர பாதிப்புத்தான் அதிகம் இருக்குது. அந்த அண்ணனப் போலதான் பலரும் பாதிக்கப்பட்டிருக்காங்க” என்று கூறி ஊர்க்குருவி பெருமூச்சு விட்டது.
“அப்படியெண்டா ஆர்தான் இதுகளப் பாதுகாக்கிறது. ஆரொ சுறண்டித்துப் போறதுதான் வாடிக்கையா” என அண்டங்காக்கை கேட்க “நாம என்னண்ணே செய்ய முடியும். ‘திருடனாப் பாத்துத் திருருந்தாவிட்டா திருட்ட ஒழிக்க முடியாது’ என்பது பொல அவங்க அவங்க திருந்தினாத்தான் உண்டு. அன்ணே எனக்கும் நேரமாகுது. நானும் போக வேணும்” எனக் கூறிய ஊர்க்குருவி தனது சொண்டினால் இரு இறகுகளையும் நீவிப் பெருமூச்சுவிட்டுச் சிறகடித்துப் பறந்து சென்றது.
அண்டங்காக்கை நீண்ட பெருமூச்சுவிட்டு, ஆறுதலடைந்து தன் சொண்டினால் இறகுகளை நீவிவிட்டு. இரை எடுப்பதற்காகப் பறந்து சென்றது. ஊர்க் குருவியும் வேகமாகப் பறந்து வான் வெளியில் மறைந்து விட்டது.
“போயக் குளிச்சித்து வாங்க சாப்பிடலாம். பிள்ளகளும் பள்ளியில இருந்து வந்திட்டாங்க. அதுகளும் சாப்பிடணும். கெதியா வாங்க” எனக் கூறிக் கொண்டு செல்வி நாலு பேருக்கும் சாப்பாட்டை எடுத்து வைத்தாள். சாப்பிடும்போது முருகனைப் பார்த்து “நடந்தது நடந்து போச்சுது. இதபத்திக் கவலப்பட்டு ஒண்டும் ஆகப் போறதில்ல. நாம எதிர் பாத்ததெல்லாம் நடப்பதுமில்லை. கிடைக்கிறதுதான் நமக்குக் கிடைக்கும். கால போகத்த நல்லாச் செஞ்சா விட்டதையும் எடுத்திடலாம். சாப்பிட்டுத்து ஆறுதலா ஓய்வெடுங்க” என்று செல்வி கூறியதும் முருகன் சாப்பிட்டதும் கை களுவிப் பெருமூச்சுவிட்டு மனக் குழப்பம் கலைந்தவனாக எழுந்து சென்றான்.
களம் தொடரும்…..
![]()