கட்டுரைகள்

“ரட்ட அனுரட்ட” ஏற்படுத்திய “சிஸ்டம் சேஞ்” (மாற்றம்) என்ன?… நியூசிலாந்து சிற்சபேசன்

நியூசிலாந்து சிற்சபேசன்

“ரட்ட அனுரட்ட” கோஷத்துடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சிப்பீடமேறி இரண்டு ஆண்டுகளாகின்றது.

பொருளாதாரப் பிரச்சினை, இனப்பிரச்சினை உள்ளிட்ட சிக்கலான விடயங்களைக் கையாளவேண்டிய சூழலிலேயே தேசிய மக்கள் சக்தி பதவியேற்றுக்கொண்டதாகும்.

Rata Anurata රට අනුරට updated... - Rata Anurata රට අනුරට

அத்தகைய சூழலைக் கையாளக்கூடிய வெற்றியையே வாக்காளர்கள் வழங்கினார்கள்.

2020 பாராளுமன்றத் தேர்தலிலே 3 ஆசனங்களை மட்டுமே வெற்றிபெற்ற ஒருகட்சிக்கு, 2024 பாராளுமன்றத் தேர்தலிலே 159 ஆசனங்களுடன் – மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைப் பலமும் கிடைத்தது.

அதனூடாக, தேசிய மக்கள் சக்தி நம்பிக்கைகளைக் கட்டியெழுப்ப ஆரம்பித்திருக்கின்றதா என்பதே தற்போதைய கேள்வியாகும்.

முன்னைய அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடனான மறுசீரமைப்புத் திட்டத்தை, தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி கடுமையாக விமர்சித்தது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதாகச் சொல்லியது.

Hon. President Anura Kumara Dissanayake, presents the Budget 2026 to  Parliament in his capacity as the Minister of Finance

ஆனால், அதனை நிறைவேற்றக்கூடிய நம்பிக்கைகளையேனும் ஏற்படுத்த முடியவில்லை. அதற்கு, தேசிய மக்கள் சக்தியிடம் நடைமுறைச் சாத்தியமான வேறு திட்டம் இல்லை என்பதுவும் காரணமாயிருக்கலாம். அதனால்தானோ என்னவோ, சர்வதேச உடன்படிக்கையைத் தொடர வேண்டிய நிர்ப்பந்தம் என்பதாகச் சாக்குப்போக்கு சொல்கின்றது.

எது எப்படியாகிலும், வரிக்குறைப்பு, பொருளாதார நிவாரணம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளைப் பூர்த்திசெய்ய முடியவில்லை.

முன்னைய காலங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால், ரணில் விக்கிரமசிங்க முதல் நாமல் ராஜபக்ஸ வரையான கைதுகள் “கானல் நீராகவே” தெரிகின்றன.

போதைப்பொருள் கடத்தல், பாதாள உலகக்கும்பல்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலான முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன. அதற்கான எதிர்வினையாகவே, சிறைக்கலவரங்கள் ஏற்பட்டதாகச் சொல்லப்படுவதும் கவனிக்கத்தக்கதாகும்.

”பார்க்காத பழகாத எங்களை நம்பினீர்கள். உங்களைக் கைவிட மாட்டோம்” என யாழ்ப்பாணத்திலே சனாதிபதி சொல்லியிருந்தார். ஆனால், அவை வெறும் வாய்வார்த்தைகளாகவே நின்றுவிட்டன. ஆகக்குறைந்தது, ஈரெட்டு ஆண்டுகளாகப் பிள்ளைகளைத் தேடிக்கொண்டிருக்கும் அம்மாக்களின் கண்ணீரைக்கூடப் பொருட்படுத்தவில்லை.

வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகள், அதிகாரப்பகிர்வு மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை.

காணிவிடுவிப்பு கண்துடைப்பாகவே கடந்துபோகின்றது.

தையிட்டி, மயிலிட்டி, செம்மணி, வெடுக்குநாறிமலை, குருந்தூர்மலை, கிண்ணியா, குசானமலை, குடும்பிமலை, உகந்தைமலை, மயிலத்தமடு – மாதவனை எனப் பிரச்சினைகள் முடிவின்றித் தொடர்கின்றன.

மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவதான வாக்குறுதி காணாமல்போய்விட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பான வாக்குறுதி காலிமுகத்திடல் கடற்கரையில் கரைக்கப்பட்டுவிட்டது.

சிறுபான்மைச் சமூகங்களை ஒடுக்குவதற்குச் சாதாரண சட்டங்களுடன், பேரினவாதச் சிந்தனை, திருப்திப்படுவதில்லை. அதனாலேயே, அசாதாரண சட்டங்களைப் பிரயோகிப்பதையே விரும்புகின்றது. அதனையே, முன்னைய ஆட்சியாளர்கள் செய்தனர். தற்போதைய ஆட்சியாளரும் செய்கின்றனர்.

ஆனால், தற்போதைய ஆட்சியிலே “அதிகாரச் சுக்கான்” ஜேவிபி வசமிருப்பதே குரூரமான யதார்த்தமாகும். ஏனெனில், அரசு பயன்படுத்தக்கூடிய சட்டமுகங்களினூடான கோரத்தை, ஜேவிபி நேரடியாகவே அனுபவித்திருக்கின்றது.

இலங்கைத் தீவின் ஆயுதப் போராட்ட வரலாற்றின் முன்னோடியான அமைப்பு. கொடூரமான வகைகளிலே நசுக்கப்பட்ட ஓர் அமைப்பு. ஒரு லட்சத்துக்குக் குறைவான தோழர்களை இழந்த அமைப்பு. காணாமல் ஆக்கப்படுதலின் வலியை அனுபவித்த அமைப்பு. மிகக் கொடூரமான சித்திரவதைகளின் மூலம் விசாரிக்கப்பட்டு, கொல்லப்பட்டவர்களின் துயர வரலாற்றைக் கொண்ட அமைப்பு. அந்தவகையிலே, “பயங்கரவாதத் தடைச்சட்டம்” போன்றவற்றின் கோரமுகம் தொடர்பில், ஜேவிபி யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை.

அதனாலேயே, “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்“ தொடர்பில் “யார்க்கெடுத்துரைப்பது” என்னும் கேள்வி எழுகின்றது.

“கிளீன் ஸ்ரீலங்கா” பிரகடனத்தை சனாதிபதி மேற்கொண்டபோது நம்பிக்கைகள் வானுயர்ந்தன. நீண்டதூரப் பேருந்துப் பயணங்களிலே, பெண்கள் முன்கூட்டியே நீர் அருந்துவதில்லை. ஏனெனில், பயண வழிகளில் சிறுநீர் கழிப்பதற்கு சுத்தமான கழிப்பறைகள் இல்லை என்று அவர் கூறியபோது பலருக்கும் கண்கள் கலங்கின. “வாரதுவந்த மாமணி” எனக் கொண்டாடினார்கள். இரண்டுவருடங்களிலே கழிப்பறைகளின் துர்நாற்றம் நாசியைத் துளைக்கிறது.

பொலித்தீன் பைகளை ஒழிப்பதான சனாதிபதியின் வாக்குறுதியைப் பார்த்து, “கல்லுண்டாய்”வெளி போன்ற, குப்பைமேடுகள் கெக்கட்டமிட்டுச் சிரிக்கின்றன.

முன்னைய ஆட்சியாளர்களைப் பரிகசித்தார்கள். அவை இனவாதத்துக்கு தலைமை தாங்கியதான பிம்பத்தை ஏற்படுத்த முயன்றார்கள். ஆனால், “கெட்டிக்காரன் புளுகு” வெட்டவெளிச்சமாகத் தெரிகின்றது.

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் சந்திசிரித்தது.

கல்முனை மருத்துவமனைச் சீருடை விவகாரத்தில் காத்திரமான தீர்மானத்தை எடுக்க முடியவில்லை.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வு தொடர்பில் உறுதியாகச் செயற்பட முடியவில்லை.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கக்கூடிய, வயதுக்கேற்ற பாலியல் கல்விமுறை தொடர்பிலான “வருமுன் காக்கும்” முயற்சி, முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. அத்தோடு நின்றுவிடாமல், தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகச் சர்ச்சை மூலமாக களங்கமும் ஏற்படுத்தப்பட்டது.

அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து, “வளமான நாடு – அழகான வாழ்க்கை”யொன்றை உருவாக்கப்புறப்பட்டவர்களைத் தேடித்தேடியே கண்கள் பூத்துவிட்டன.

அரைக்கால் சட்டையோடு யாழ்ப்பாணத் தெருவொன்றில் உடற்பயிற்சி செய்தார், தமிழ் மக்களோடு செல்பி எடுத்தார், அத்திவாரக்கல் வைக்க “அந்தரப்படாமல்” மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்தார் போன்றவற்றையே “ரட்ட அனுரட்ட” ஏற்படுத்திய “சிஸ்டம் சேஞ்” (மாற்றம்) என்று “பெருமையாகச்” சொல்லிக் கொள்ளலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *