உலகம்

173 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி: மாவீரர் என மோடி, நெதன்யாகு புகழாரம்

flydubai விமானத்தை வீழ்த்த முயன்ற சக விமானியால் குத்தப்பட்ட பின்னரும், பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சர் என்பவரை இஸ்ரேல் மற்றும் இந்தியத் தலைவர்கள் மாவீரர் எனப் பாராட்டியுள்ளனர்.
இணை விமானியின் முயற்சியைப் பயணிகள் மற்றும் பணியாளர்கள் முறியடித்ததைத் தொடர்ந்து, விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் புதன்கிழமை பத்திரமாக இஸ்ரேல் சென்றடைந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இணை விமானி, முதன்மை விமானியைக் கத்தியால் குத்தி, விமானத்தை 30 வினாடிகளுக்குள் சுமார் 14,000 அடிகள் (4,267 மீட்டர்) கீழே சரியச் செய்தபோது இந்த மோதல் தொடங்கியது.
இரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்த நிலையிலும், ஸ்மித் மச்சர் காக்பிட் (விமான ஓட்டி அறை) கதவின் பூட்டைத் திறக்கும் பொத்தானை அழுத்த முடிந்தது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதனால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளே நுழைந்து இணை விமானியைக் கட்டுப்படுத்த முடிந்தது.
மேலும், அதே விமானத்தில் பயணித்த இரு ப்ளைடுபாய் விமானிகளால் விமானத்தை சவூதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாகத் தரையிறக்க முடிந்தது.
“இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 174 பேரின் உயிர்களை அவர் காப்பாற்றியுள்ளார்” என்று பிரதமர் நெதன்யாகு எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வியாழக்கிழமை அதிகாலை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஸ்மித் மச்சரை “மாவீரர்” எனப் போற்றிப் பாராட்டியுள்ளார்.
“மிகக் கடுமையான ஆபத்தான சூழ்நிலையிலும், பலத்த காயமடைந்த நிலையிலும், மற்றவர்களின் உயிரைப் பாதுகாக்க அவர் காட்டிய அசாத்திய தைரியமும் உறுதியும் போற்றத்தக்கது. அவரது வீரம் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி ஒரு பெரிய பேரழிவைத் தடுத்துள்ளது” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் வடமேற்கு நகரமான தபூக்கில் உள்ள மருத்துவமனையில் ஸ்மித் மச்சருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கிட அவரது குடும்பத்தினருடனும் சவூதி அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும் அங்குள்ள இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக சவூதி அரேபியாவிலுள்ள இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *