உலகம்

வர்த்தகப் போரில் திடீர் திருப்பம்: வரி குறைப்புக்கு அமெரிக்கா, சீனா இணக்கம்

சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யப்படும் 60 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கான வரியைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

அமெரிக்கச் சோளம் முதல் அழகுசாதனப் பொருட்கள் வரையிலும், சீனாவின் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் பொம்மைகள் வரையிலும் பரந்தளவிலான பொருட்களுக்கு இவ்வரிவிலக்கு அளிக்கப்படவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே தூதரக அளவில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், உணர்திறன் அற்ற (Non-sensitive) 30 பில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகப் பொருட்களுக்குச் சாதகமான வரிச் சலுகைகளை வழங்க இரு நாடுகளும் பரிந்துரைத்துள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீயர் (Jamieson Greer) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையே வாஷிங்டனில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் முக்கிய முடிவாகவே இந்த பரஸ்பர வரி குறைப்பு மற்றும் வர்த்தகப் போர் நிறுத்த விரிவாக்கம் ஆகியவை எட்டப்பட்டுள்ளன.

வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின்படி, சோளம், கோதுமை, இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் காய்கறி எண்ணெய் உள்ளிட்ட பல அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கான வரியைச் சீனா குறைக்கவுள்ளது.

இருப்பினும் இதில் சோயாபீன்ஸ் சேர்க்கப்படவில்லை. மேலும் அமெரிக்க மீன், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான வரிகளையும் குறைக்க சீனா பரிசீலித்து வருகிறது.

அதேபோல, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காபி மேக்கர், டோஸ்டர் போன்ற சிறிய வீட்டு உபயோகப் பொருட்கள், பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் கார் இருக்கைகள் போன்ற பொருட்களுக்கான வரியை அமெரிக்கா குறைக்கவுள்ளது.

வர்த்தக போர் நிறுத்தம் நீடிப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் நிறுத்தத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு, அதாவது ஜனவரி 10 வரை நீட்டிக்கச் சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

இது பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், வணிக நிறுவனங்களுக்கு இடையே ஒரு நிலையான கொள்கைச் சூழலை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் என சீன வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த உச்சிமாநாட்டின் தெளிவான விவரங்கள் வெளியாகாததாலும், தகவல் தரவு மையங்களில் (Data centres) சீனப் பாகங்களைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா தடை விதிக்க முயல்வதாலும், சீனப் பங்குச்சந்தையில் முக்கிய தொழில்நுட்பப் பங்குகள் 2% க்கும் அதிகமாகச் சரிவைக் கண்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *