இந்தியா

ஒக்டோபர் 02 முதல் இந்தியா முழுதும் போராட்டம் வெடிக்கும்: CJP எச்சரிக்கை

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்   ராஜினாமா செய்யாவிட்டால், ஒக்டோபர் 2 முதல் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று ‘கரப்பான்’ (Cockroach) இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் அபீஜித் திப்கே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கட்சிக்கு சாதகமாக வாக்காளர் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அது குறித்துத் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் துணை அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகச் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளும் ‘கரப்பான் ஜனதா கட்சி’ (CJP) எனத் தங்களை அழைத்துக்கொள்ளும் இந்த அமைப்பும் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி வருகின்றன.

“ஞானேஷ் குமார் நாளைக்குள் ராஜினாமா செய்யாவிட்டால், சி.ஜே.பி (CJP) அமைப்பு தனது நாடு தழுவிய போராட்டத்தை ஒக்டோபர் 2 அன்று மும்பையில் தொடங்கி, இந்தியாவின் பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தும்” என்று அபீஜித் திப்கே ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஞானேஷ் குமார் 48 மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும் என்று சி.ஜே.பி இயக்கம் வியாழக்கிழமை கெடு விதித்திருந்தது.

இருப்பினும், எந்தவொரு அமைப்பிலும் அதிகாரிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானது என்றும், தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்திற்குட்பட்டே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *