கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஓய்வுநிலைப் பேராசிரியர் மௌனகுரு நியமனம்

கிழக்குப் பல்கலைக்கழகப் புதிய வேந்தராக ஓய்வுநிலைப் பேராசிரியர் சின்னையா மௌனகுரு வெள்ளிக்கிழமை (25 ) நியமிக்கப்பட்டுள்ளார்.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பட்டதாரியான பேராசிரியர் சி. மௌனகுரு, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர். தனது கல்விப் பணியை ஆசிரியராக ஆரம்பித்த இவர் கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலையத்தில் பாடநூல் எழுத்தாளராகவும் பணியாற்றினார்.
வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறை ஆரம்பிக்கப்பட்ட போது பேராசிரியர் சி. மௌனகுரு அதன் ஸ்தாபகப் பணிகளில் பங்கேற்று விரிவுபடுத்தினார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறைத் தலைவராகவும், கலை, பண்பாட்டுகள் பீடத்தின் பீடாதிபதியாகவும், பதில் துணைவேந்தராகவும் பதவிகளை வகித்ததுடன் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இணைப்பாளராகவும், நூலகக் குழுத் தலைவராகவும், தமிழ்ச் சங்கப் போஷகராகவும் பல தளங்களில் பணியாற்றினார். பல்கலைக்கழகச் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும், இசை, நடன, நாடகத் துறைகளில் பல்வேறு பங்களிப்புகளைச் செய்து வருகிறார்.
![]()