அநுர அரசை வீட்டுக்கு அனுப்புவோம் ; எங்கள் ஆட்சியில் 22 ஐ ஒழிப்போம்!; தாங்களே மாற்று அரசு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சூளுரை

ஜனநாயகத்தை நாசம் செய்யும் அநுர குமார அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம். நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் சுபீட்சத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் ஒன்றிணைய முடியுமான சகல சக்திகளுடனும் நாம் ஒன்றிணைவோம்.
இந்த அரசாங்கத்தினால் நாளை வெள்ளிக்கிழமை (இன்று) நிறைவேற்றப்படும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இல்லாதொழிப்போம் .என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்தார்
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் நேற்று வியாழக்கிழமை காலை பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு சூளுரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் பேசுகையில்,
இந்த இழிவான அரசாங்கம் இந்நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டது. அதிக பொய்களைக் கூறிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்கவை அழைக்கலாம். 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் முழு நாட்டையும் தனிக் கட்சியின் அதாவது பெலவத்தை ஆட்சிக்கு உட்படுத்த இவர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த ஜனநாயகத்திற்கு எதிரான முயற்சியை மக்கள் பலத்தினாலும் மக்கள் சக்தியினாலும் தோற்கடிக்க வேண்டும்.
அவ்வாறே, ஜனநாயகத்தை நாசம் செய்யும் அநுர குமார திஸாநாநாயக்க அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.
நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் சுபீட்சத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் ஒன்றிணைய முடியுமான சகல ஜனநாயக மற்றும் தூய்மையான சக்திகளுடனும் நாம் ஒன்றிணைவோம். நாளை (இன்று)நிறைவேற்றப்படும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இல்லாதொழிப்போம்.
ஐக்கிய மக்கள் சக்தியானது இந்நாட்டு மக்களுக்கு உள்ள ஒரே மாற்று வழியும் மாற்று அரசாங்கமுமாக காணப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தை பலப்படுத்தி, மக்கள் பலத்தினாலும், மக்கள் சக்தியினாலும் அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தை தோற்கடிப்போம்.
மேலும், இப்போதாவது இந்த உண்மையை, யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இன்று பொல்துவ சந்திக்கு வந்தது ஜே.வி.பி.யினரைப் போல பாராளுமன்றத்திற்கு தீ வைக்க அல்ல.அன்றைய அரகலய போராட்ட காலத்தில் பாராளுமன்றத்திற்கு தீ வைக்க முயன்றவர்கள் இன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகின்றனர். 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மக்கள் மத்தியில் தோற்கடிப்போம். வறுமையை இல்லாதொழித்து, சகல வர்க்கத்தையும் சேர்ந்த மக்களை பாதுகாத்துக் கொண்டு, ஒட்டுமொத்த 220 இலட்சம் மக்களையும் வாழவைக்கக்கூடிய ஒரு யுகத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணையுமாறு சகலரையும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
![]()