22 ஆவது திருத்தம் இன்று இரவு வாக்கெடுப்பு

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மை தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தின்படி, இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டதுடன் . பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளின் மூலம் மாத்திரம் இதனை நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதத்துக்காக 24 ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய திகதிகளை ஒதுக்கியத்துடன் இரு நாட்களிலும் காலை 11.30 மணி முதல் இரவு 7 மணி வரை விவாத்திற்கான நேரத்தையும் ஒதுக்கியது.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை 22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூல முதல் நாள் விவாதத்தை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆரம்பித்து வைத்தார். இரண்டு நாள் விவாதம் நிறைவடைந்த பின்னர், முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை 25ஆம் திகதி இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த வாக்கெடுப்பின்போது 22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லிம் எதிர்கட்சிகள் வாக்களிக்கவுள்ளன.
![]()