இலங்கை

மதுராந்தகத்தில் தமிழக முதலமைச்சர் இன்று பரப்புரை!

இந்தியாவின் தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. அந்த வகையில், த.வெ.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய் மதுராந்தகம் தொகுதியில் இன்று (25) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் த.வெ.க. தேர்தல் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகத்தில் த.வெ.க. தேர்தல் பிரசாரம் குறித்து அமைச்சரும், த.வெ.க. பொதுச் செயலாளருமான என். ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “த.வெ.க. தலைவரும் முதலமைச்சருமான விஜய் கலந்துகொள்ளும், மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பிரசார நிகழ்ச்சி செப். 25 மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.

பொலிஸார் அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய நுழைவு சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5,000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

கியூ.ஆர். குறியீடு அனுமதி சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்பு கருதி, கர்ப்பிணி பெண்கள், சிறுவர் – சிறுமியர், பாடசாலை மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.

கியூ.ஆர். குறியீடு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்கு தேவையான குடிநீர், வைத்திய வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனுமதி சீட்டு இல்லாத கட்சியினரோ பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, கியூ.ஆர். குறியீடு அனுமதி சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *