முச்சந்தி

13 வயது மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு, இரு வேறு வழக்குகளில் தலா 15 ஆண்டுகள் கடூழியச் சிறை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதானவர் சொந்த மகளான 13 வயது சிறுமியை (சம்பவங்களின்போது 13 மற்றும் 16 வயதானவர்) 2013 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு வேறு சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தந்தைக்கு, முதலாவது வழக்கில் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும், இரண்டாவது வழக்கில் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இத்தண்டனைகளைச் சமகாலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், அவர் மொத்தம் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை அனுபவிக்கவுள்ளார். மேலும், அவருக்கு 10,000 ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 75,000 ரூபா நஷ்டஈடும் வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார்.

முதலாவது வழக்கு:

சந்தேகநபர், 2013ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி மற்றும் டிசம்பர் மாதத்தில் தனது மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில், அரசுத் தரப்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் பிரபாகரன் தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

விசாரணைகளின் முடிவில், குற்றவாளி என ஆகஸ்ட் 24ஆம் திகதி நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டு, செப்டம்பர் 11ஆம் திகதி தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, 2013 நவம்பர் 3ஆம் திகதி இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகக் குற்றத்திற்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், 5,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. இரண்டாம் குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், 2013 டிசம்பர் மாதத்தில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகக் குற்றத்திற்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

இரண்டாவது வழக்கு:

இதேவேளை, 2016ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் திகதி அதே சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது வழக்கிலும் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.

இதற்காக அவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 5,000 ரூபா அபராதமும் (அபராதத்தைச் செலுத்த தவறினால் 1 மாத சிறை) விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25,000 ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும், அதைச் செலுத்த தவறினால் மேலதிகமாக 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார்.

இவ்விரு வழக்குகளின் தண்டனைகளும் ஒரே காலத்தில் (சமகாலத்தில்) அனுபவிக்கத்தக்கவை என உத்தரவிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *