இலங்கை

அரசியல் லாபத்திற்காக அனோஜன் விடுதலை பெற தடை போடாதீர்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராஜா விவகாரத்தை அரசியல் லாபத்திற்கான துரும்புச் சீட்டாக பயன்படுத்தி, அவரின் விடுதலைக்கான முயற்சிகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராஜா விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் என்ற ரீதியில் இந்த சம்பவம் பதிவான நாளில் இருந்து இராஜதந்திர ரீதியில் சில நடைமுறைகளை பின்பற்றி வருகின்றது. இதனால் இந்த விடயத்தை அரசியல் துரும்புச் சீட்டாக பயன்படுத்தாமல் இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு இடமளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த சம்பவத்தை வேறு விடயங்களை போன்று அரசியல் துரும்புச் சீட்டாகவோ, உதைப் பந்தாகவோ பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம். இது உயிருடன் தொடர்புடைய விடயமாகும். நாடொன்றில் இருக்கும் சட்டத்திற்கமைய அந்த நாடு நடவடிக்கை எடுத்திருக்கையில் இலங்கை இளைஞனை மரண தண்டனையில் இருந்து மீட்பதற்கே அரசாங்கம் தேவையான முயற்சிகளை முன்னெடுக்கின்றது. இதனால் இந்த விடயத்தில் தடைகள் ஏற்படக்கூடியவாறு நானே முதலில் செய்தேன் என்றெல்லாம் காட்டுவதற்கு போக வேண்டாம். சிலவேளை இந்த பிரச்சினை மேலும் உக்கிரமடையலாம். இதில் அரசியல் லாபத்தை எதிர்பார்க்கக்கூடாது. இந்த பிரச்சினைகளை பயன்படுத்தி மக்களுக்கிடையே பிரிவுகளை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவுமாறே நாங்கள் கோருகின்றோம். நாங்கள் அனைவரும் இன பேதமின்றி அந்த இளைஞனை நாட்டுக்கு கொண்டு வர முயற்சிப்போம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *