உலகம்

ஜப்பான், ஜெர்மனி வரிசையில் ஆஸ்திரேலியா; 2060 இல் காத்திருக்கும் அதிர்ச்சி

ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே முதல்முறையாக 2060-ஆம் ஆண்டுகளில் பிறப்புகளை விட இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கருவூலத்துறை Department of Treasury திங்கள்கிழமை கணித்துள்ளது.

முதியோர் தொகை அதிகரிப்பு, பிறப்பு விகிதக் குறைவு மற்றும் குடியேற்றக் கட்டுப்பாடுகள் ஆகிய சவால்களை எதிர்கொண்டு வரும் ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தில், இந்த மக்கள்தொகை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

கடந்த பல தசாப்தங்களாக, ஆஸ்திரேலியா தனது குறைந்த பிறப்பு விகிதத்தைச் சமாளித்து மக்கள்தொகை வளர்ச்சியைத் தக்கவைக்கக் குடியேற்றத்தையே (Immigration) பெரிதும் நம்பியிருந்தது.

ஆனால் தற்போது குடியேற்றத்தின் வேகம் குறைந்து வருவதால், ஜப்பான், ஜெர்மனி மற்றும் தென் கொரியா போன்ற வளர்ந்த நாடுகள் எதிர்கொண்டு வரும் அதே சவாலான பாதையை ஆஸ்திரேலியாவும் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.

கருவூலத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட தலைமுறை இடைவெளி அறிக்கையில் (Intergenerational Report), அடுத்த நாற்பது ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கப்போகும் ஐந்து முக்கியக் காரணிகளை அடையாளம் கண்டுள்ளது. அவை:

செயற்கை நுண்ணறிவு (AI)

புவிசார் அரசியல் பிளவுகள்

ஆற்றல் மாற்றம் (Energy Transition)

முதியோர் தொகை அதிகரிப்பு

சேவை சார்ந்த பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம்

கருவூலத் துறையின் கணிப்புப்படி, வரும் நாற்பது ஆண்டுகளில் நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 0.9% ஆகக் குறையும். கடந்த 40 ஆண்டுகளில் சராசரியாக 1.4% ஆக இருந்த இந்த வளர்ச்சி, பிறப்பு விகிதக் குறைவு மற்றும் நிகர வெளிநாட்டு இடம்பெயர்வு சரிவடைவதால் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து உரையாற்றிய நிதியமைச்சர் ஜிம் சால்மர்ஸ் (Jim Chalmers), “ஆஸ்திரேலிய வரலாற்றில் முதல்முறையாக 2060-ஆம் ஆண்டுகளில் பிறப்புகளை விட இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2066-ஆம் ஆண்டிற்குள் 85 வயதிற்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை மும்மடங்காக உயரும், இது சுகாதாரச் சேவைகளுக்கான தேவையை கணிசமாக அதிகரிக்கும்,” என்று கூறினார்.

வலதுசாரி One Nation கட்சியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ் தலைமையிலான லேபர் கட்சி அரசு கடந்த வாரம் குடியேற்ற விதிகளைக் கடுமையாக்கியது. 2022-இல் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, ஆல்பனீஸின் மக்கள் ஆதரவு தரவரிசை இந்த வாரம் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், முதியோர் தொகை அதிகரிப்பதால் பராமரிப்புச் சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும் என்றும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அதிகம் நம்பியிருக்கும் சுகாதாரம் மற்றும் முதியோர் பராமரிப்புத் துறைகளில் கடுமையான தொழிலாளர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

அத்துடன், பணவீக்கம், உயர்ந்து வரும் அடமானக் வட்டி விகிதங்கள் மற்றும் வீட்டுவசதிச் செலவுகளால் அவதியுறும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், வருங்கால வரவு செலவுத் திட்டங்களில் (Budget) வரி விலக்குகளை வழங்க அரசு பரிசீலித்து வருவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *