ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை:4 ஐரோப்பிய நாடுகள் ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு சபையில் (UNSC) இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெற வேண்டும் என்று ‘விஸெக்ராட் குழு’ (Visegrád Group – V4) நாடுகளான சுலோவாக்கியா, போலந்து, ஹங்கேரி மற்றும் செக் குடியரசு ஆகிய நான்கு மத்திய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபையின் 81-வது அமர்வின் இடையே, ‘V4 + இந்தியா’ அமைப்பின் முதலாவது வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுலோவாக்கிய வெளியுறவு அமைச்சர் யூராஜ் பிளானார் (Juraj Blanár),
“உலகளாவிய தெற்கின் (Global South) முக்கிய அங்கமாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் வல்லரசாகவும் விளங்கும் இந்தியா, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினராக இடம்பெற வேண்டும் என்பதில் V4 நாடுகள் அனைத்தும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளன” என்று தெரிவித்தார்.
இச்சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறுகையில், “இந்த கூட்டம் ஒரு புதிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். V4 நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி, இணைப்புத் துறை மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன” எனக் குறிப்பிட்டார்.
மேலும், வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான இக்கூட்டம் இனி ஆண்டுதோறும் நடத்தப்படும் என்றும், இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த வருடாந்திர தொழில்முனைவோர் அரங்கம் (Annual Business Forum) அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
![]()