தாய்வானுக்கான ஆயுத விற்பனையை நிறுத்த ட்ரம்பிற்கு ஷி ஜின்பிங் அழுத்தம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை இந்த வாரம் சந்திக்கவுள்ள சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், 1982-ஆம் ஆண்டின் கூட்டு ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி தாய்வானுக்கான ஆயுத விற்பனையை முற்றிலும் நிறுத்துமாறு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வொஷிங்டனுக்கு பயணம் மேற்கொள்ளும் சீன ஜனாதிபதி, தேசிய ஆவணக்காப்பகத்தில் நடைபெறும் நிகழ்வுகளின் போது இந்த கோரிக்கையை முன்வைக்கக்கூடும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனா தனக்குச் சொந்தமானது எனக் கோரும் தாய்வான் விவகாரம், அந்நாட்டின் மிக முக்கியமான மற்றும் உணர்வுபூர்வமான தூதரக விவகாரமாகப் பார்க்கப்படுகிறது.
இராணுவ நடவடிக்கை
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே 1982இல் கையெழுத்தான மூன்றாவது கூட்டு ஒப்பந்தத்தின்படி, தாய்வானுக்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா படிப்படியாகக் குறைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, தாய்வான் விவகாரத்தில் சீனா அமைதியான முறையில் தீர்வுகளைக் காண்பதை பொறுத்தே இந்த ஆயுதக் குறைப்பு சாத்தியமாகும் என அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது தாய்வானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா தனது இராணுவ நடவடிக்கைகளை கணிசமாக அதிகரித்துள்ள சூழ்நிலையில், தாய்வானுக்கு $14 பில்லியன் மதிப்பிலான புதிய ஆயுதங்களை விற்பனை செய்வதற்கான ஒப்புதலை அமெரிக்கா இன்னும் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
ஈரான் மீது அழுத்தம்
இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது, தாய்வானை “பதற்றத்தை தூண்டும் காரணி” என சித்தரிக்க சீன ஜனாதிபதி முயலக்கூடும் என்றும், அதற்கு பதிலாக மத்திய கிழக்கு விவகாரங்களில் ஈரான் மீது அழுத்தம் கொடுக்க சீனா உதவ முன்வரலாம் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், தாய்வானுக்கான ஆதரவில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும், சீனாவின் கோரிக்கைகளை ஏற்கக் கூடாது என்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ட்ரம்பை வலியுறுத்தியுள்ளனர்.
![]()