முச்சந்தி

டெல்லி பிரிக்ஸ் (BRICS உச்சி மாநாடு: அமெரிக்காவுக்கு செல்லும் முக்கிய செய்தி என்ன?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஐங்கரன் விக்கினேஸ்வரா

( உலக அரசியலில் உருவாகி வரும் பலதுருவ மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்குக்கு புதிய சவால்கள் உருவாகி வருவதை காணக்கூடியதாக உள்ளது. சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகளில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு மாற்றாக, பலதுருவ உலக அமைப்பை உருவாக்கும் நோக்கம் பிரிக்ஸ் நாடுகளிடையே வலுப்பெற்று வருகிறது)

கடந்த வாரம் புது டெல்லியில் இந்தியா தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு, உலக அரசியலில் உருவாகி வரும் பலதுருவ மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்குக்கு புதிய சவால்கள் உருவாகி வருவதை காணக்கூடியதாக உள்ளது.
2026 செப்டம்பர் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம், நிதி அமைப்பு, செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சர்வதேச அமைதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து உறுப்புநாடுகள் விவாதித்தன.
மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு (Building for Resilience, Innovation, Cooperation and Sustainability) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மாநாடு, பிரிக்ஸ் அமைப்பின் வளர்ந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.
அமெரிக்கா மைய உலக அமைப்பில் மாற்றம் ?
பிரிக்ஸ் நாடுகள், உலகளாவிய முடிவெடுப்புகளில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், உலக நிர்வாகம் மேலும் சமநிலையானதாக இருக்க வேண்டும் என்றும் டெல்லி பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதன் மூலம், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகளில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு மாற்றாக, பலதுருவ உலக அமைப்பை உருவாக்கும் நோக்கம் பிரிக்ஸ் நாடுகளிடையே வலுப்பெற்று வருவதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் பல்வேறு நாடுகளுக்கு விதித்து வரும் பொருளாதாரத் தடைகள் குறித்தும் பிரிக்ஸ் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
குறிப்பாக ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதாரத் தடைகள் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பிரிக்ஸ் நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன. ஒரு தலைப்பட்சமான பொருளாதாரத் தடைகள் மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை பிரிக்ஸ் நாடுகள் வெளிப்படுத்தியிருப்பது, அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மறைமுகமான அரசியல் செய்தியாக பார்க்கப்படுகிறது.
 
டாலருக்கு மாற்றான பாதை?
பிரிக்ஸ் நாடுகளின் மற்றொரு முக்கிய நோக்கம் சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளில் அமெரிக்க டாலரை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதாகும். உறுப்பு நாடுகளுக்கிடையே உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்வது, எல்லைத் தாண்டிய பணப்பரிவர்த்தனை முறைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பிரிக்ஸ் தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.
எனினும், பிரிக்ஸ் உடனடியாக அமெரிக்க டாலருக்கு மாற்றாக ஒரு புதிய பொது நாணயத்தை உருவாக்கும் நிலைக்கு சென்றுவிட்டதாகக் கூற முடியாது.
இந்தியாவின் அணுகுமுறை குறிப்பாக நடைமுறைக்கு ஏற்றதாக உள்ளது. டாலரை எதிர்ப்பதற்குப் பதிலாக, சர்வதேச நிதி அமைப்பில் நாடுகளுக்கு அதிகமான தேர்வுகள் இருக்க வேண்டும் என்பதையே இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால் சீனா–ரஷ்யா கூட்டணியாக மட்டுமே பிரிக்ஸ் இல்லை என்று கூறலாம். உண்மையில் பிரிக்ஸ் அமைப்பை சீனா மற்றும் ரஷ்யாவின் அரசியல் கருவியாக மட்டும் பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன், சமீபத்திய விரிவாக்கத்தின் மூலம் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளும் அமைப்பின் முக்கிய பங்காளிகளாகியுள்ளன. இந்த நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார நலன்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. குறிப்பாக இந்தியா–சீனா போட்டி, ரஷ்யா–மேற்கு நாடுகளின் மோதல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகள் பிரிக்ஸின் உள்நிலை சிக்கல்களை வெளிப்படுத்துகின்றன.
இந்தியாவின் தனித்துவ நிலைப்பாடு:
இருப்பினும், இந்த வேறுபாடுகளுக்கு மத்தியில் பொதுவான பிரகடனத்தை வெளியிட முடிவது பிரிக்ஸ் அமைப்பின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில்
இந்தியாவின் தனித்துவமான நிலைப்பாடு வெளிப்பட்டது. டெல்லி மாநாட்டின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இந்தியாவின் சமநிலை அணுகுமுறை பார்க்கப்படுகிறது.
இந்தியா ஒருபுறம் அமெரிக்காவுடன் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தி வருகிறது. மறுபுறம் ரஷ்யாவுடனான நீண்டகால உறவையும் தொடர்ந்து பேணி வருகிறது. சீனாவுடனான எல்லை மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் இருந்தாலும், மற்றும் பிற சர்வதேச அமைப்புகளில் சீனாவுடன் இந்தியா செயல்பட்டு வருகிறது.
இதனால், இந்தியாவின் கொள்கை அமெரிக்கா அல்லது பிரிக்ஸ் என்ற இரு தேர்வுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அல்ல. மாறாக, தேசிய நலனுக்கு ஏற்ப பல்வேறு வல்லரசுகளுடன் உறவுகளை நிர்வகிக்கும் மூலோபாய சுயாட்சி என்ற அணுகுமுறையாக உள்ளது.
மோதலுக்கு பதிலாக பலதுருவ உலகம்:
டெல்லி பிரிக்ஸ் மாநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் முக்கியமான செய்தி, பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்காவுக்கு எதிரான ராணுவ அல்லது அரசியல் கூட்டணியாக உருவாகிறது என்பதல்ல. அதற்கு பதிலாக, உலகளாவிய முடிவெடுப்புகளில் வளர்ந்து வரும் நாடுகள் அதிக அதிகாரத்தையும் பிரதிநிதித்துவத்தையும் கோருகின்றன என்பதே முக்கியமான செய்தியாகும்.
சர்வதேச நிதி அமைப்பு, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உலக நிர்வாகம் போன்ற துறைகளில் ஒரே ஒரு வல்லரசின் ஆதிக்கத்தை குறைத்து, பல்வேறு நாடுகளுக்கு அதிக இடம் வழங்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. மத்திய கிழக்கு மோதல்கள் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழிகளில் தீர்வு காண வேண்டும் என்பதையும் பிரிக்ஸ் நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இதன் மூலம், இராணுவ சக்தி மற்றும் பொருளாதார அழுத்தம் மட்டுமே முன்வைத்துள்ளது.
டெல்லி பிரிக்ஸ் மாநாடு அமெரிக்காவுக்கு எதிரான நேரடி சவால் அல்ல. ஆனால், அமெரிக்கா மையமாக இருந்த உலக அமைப்பு படிப்படியாக பலதுருவ உலக அமைப்பாக மாறி வருகிறது என்பதை இந்த மாநாடு தெளிவுபடுத்தியுள்ளது.
தென் ஆசிய நாடுகள் இனி உலக அரசியலில் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் பார்வையாளர்களாக மட்டும் இருக்க விரும்பவில்லை. சர்வதேச முடிவுகளை உருவாக்குவதிலும் தங்களுக்கான முக்கிய இடத்தை கோருகின்றன.
இதனால், டெல்லி மாநாட்டின் முக்கிய அரசியல் செய்தி ஒன்றாகக் கருதப்படுவது, உலகம் மாறுகிறது; உலக முடிவுகளில் ஆச்சரியம் ஆசிய நாடுகளின் குரலும் இனி முக்கியமானதாக இருக்கும். இந்த மாற்றத்தை இந்தியா, அமெரிக்காவுக்கு எதிரான அணியாக அல்லாமல், அதிக சமநிலையும் பிரதிநிதித்துவமும் கொண்ட சர்வதேச அமைப்பை உருவாக்கும் முயற்சியாக முன்னெடுத்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *