யூதாஸின் நற்செய்தி … தேடிக் கண்டடைதலின் வாழ்வும், குற்றவுணர்வின் தவிப்பும்… முத்தழகு கவியரசன்

முத்தழகு கவியரசன்
(முனைவர் மு. கவியரசன்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
ஜாய் பல்கலைக்கழகம், வடக்கன்குளம்,
திருநெல்வேலி – 627116.
தமிழ்நாடு – இந்திய ஒன்றியம்.)
முன்னுரை
1975 நெருக்கடி நிலை காலம். கேரளத்தைக் களமாக கொண்ட நாவல். கக்கயம் முகாம். நக்சலைட் வேட்டை. காணாமல் போன இளைஞர்கள். இந்த இருண்ட பின்னணியில் ஒரு பெண்ணின் கதை சொல்லப்படுகிறது. 20 வருடத்தில் பிரேமாவின் வாழ்க்கை என்ன ஆகிறது? கோழிக்கோட்டில் படிக்கிறாள். பத்திரிகையாளராக வேலை செய்கிறாள். ஆனால் மனம் முழுக்க யூதாஸ். “ஒவ்வொரு ஆண்டும் யூதாஸை எப்போது பார்ப்பேன் என நினைத்துக் கொண்டே இருக்கிறாள்”. அம்மா இறந்துபோகிறாள். அப்பா படுக்கையில் விழுகிறார்.. ஆனால் அவள் தேடல் நிற்கவில்லை. ஏன் தேடுகிறாள்? அவள் அப்பா கக்கயம் முகாமில் காவலராக இருந்தவர். மரணப்படுக்கையில் அவர் சொல்கிறார்: “அடிதாங்க முடியாமல் சொல்லி விட்டான்.
அதனால் தான் இரண்டு பேரின் உடலை பள்ளத்தாக்கில் போட்டோம்”. இந்த
வாக்குமூலம் அவளை துரத்துகிறது. அப்பாவின் பாவத்திற்கு மகள் பரிகாரம் தேடுகிறாள். இந்த அலைச்சலை வாசிக்கும்போது நமக்குள்ளும் ஒரு வலி வருகிறது. ஒரு பெண் எதற்காக இப்படி அலைய வேண்டும்? எதை தேடுகிறாள்? காதலையா? உண்மையையா? பரிகாரத்தையா? இந்தக் கேள்விகளோடுதான் நாம் நாவலுக்குள் நுழைகிறோம். பிரேமாவின் மனவேதனை நம் மனவேதனையாக மாறுகிறது. அவள் அலைச்சல் நம் அலைச்சலாக மாறுகிறது. 20 வருடம் ஒரு மனுஷியை தேடி அலையும் ஒருத்தியின் வெறி, வலி, வேதனை. உள்ளே போனால், கக்கயம் முகாமின் இருட்டு இருக்கிறது. வெளியே வந்தால், நம் மனதை இருட்டு தின்றுவிடுகிறது. ஆகவே, இவ்விருட்டை ஒவ்வொன்றாக அதற்குள் என்ன இருக்கிறது என்பதைத் தருகிறேன். அதுதான் இந்த நாவலுக்குச் சரியாக இருக்கும்.
01
கக்கயம் முகாம் பற்றி அப்பாவை வைத்து விளக்கப்பட்டிருக்கிறது. ஏரிக்கரையில் பாலுவின் பிணத்தை எடுக்க செல்லுதல். அங்கே யூதாஸைப் பார்த்து பேசுதல். அப்பா யூதாஸ் யாரென அடையாளம் கண்டுபிடித்து விடுகிறார். அதன் வழியாக பாலுவின் இறப்பு எப்படி நடந்தது. அதுபற்றி கடந்தகால நிகழ்வுகள் இடம்பெறுகிறது. பிரேமா – பாலு உரையாடல் வருகிறது. பிரேமா மீது விருப்பம் கொள்கிறான். அதற்கு அவள் எதிர்ப்பு தெரிவிக்கிறாள். யூதாஸ் பெண்கள் மீதான ஆபாசக் கதைகள் கேட்டு அவளுக்கு முத்தம் கொடுக்க வருகிறான் பாலு. விவரம் கேட்டதும் யூதாஸை பார்க்க வேண்டுமென்று அவளிருக்கும் இடத்திற்கு மதிய வேளையில் செல்கிறாள்.
15 வயதுள்ள பிரேமா யூதாஸின் குடிசையை அடைகிறாள். அங்கே அவன் அழுது கொண்டிருந்தான். எதற்காக அழுகிறீர்கள் என்று கேட்டவளைப் பார்த்து யூதாஸ் கோபம் கொள்கிறான். எதற்காக இங்கு வந்தாய் என்று. பாலுவைப் பற்றி பேசுகிறாள். எல்லோரிடமும் இதைப்பற்றி சொல்லிவிடுவேன் என்று கூறியதும், யூதாசுக்கு பயமில்லை. சொல்லிக்கோ என்று கூறிவிடுகிறான். பாவாடை உடுத்தியிருந்தாள். அவன் வெளியேபோ என்றாலும், போகாமல் அவனுக்கெதிரே உட்கார்ந்து விட்டாள்.

யூதாஸ் ஒரு நக்சல்பாரி என்றும், இக்கிராமத்தில் பதுங்கியிருக்கிறான் என்றும் கண்டுபிடித்து விடுகிறாள். அவன், உனக்கு என்ன வேண்டுமென்று கேட்க, நீச்சல் எனக்குக் கற்றுத்தர வேண்டும் என்று ஆணையிடுகிறாள். ஆனால் அவன் சம்மதம் தெரிவிக்க வில்லை. வீட்டிற்குப்போ எனச் சொன்னதும், பாலு விசயத்தைச் சொல்லி விடுவேன் என்று மிரட்டுகிறாள். அவள் சவங்களை எடுக்கும் போது, எப்படி இருக்கும் – முகம் எப்படி இருக்குமென்று, மேற்கொண்டு கேள்வி கேட்கிறாள். நீச்சல் கற்றுக்கொடுக்காவிட்டால் போகமாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள். இருவருக்கும் சண்டை வந்துவிட்டது.
அவள் உடனே நானே கற்றுக்கொள்கிறேனென்று பின்னாளிருக்கும் குளத்தில் விழுகிறாள். யூதாஸ் அவளைக் காப்பாற்றுகிறான். அவனுக்கு வயது 30. புரட்சிக் காரனின் மீது காதல் உருவாகியது அவளுக்கு. முத்தம் கேட்கிறாள். அவனுக்கு வியப்பு. இப்படி இவர்கள் உரையாட பாலு அங்கே வருகிறான். என்னை நேசிக்காதே. வீட்டிற்குப்போ என்று தன் நிலையை உணர்த்துகிறான். எங்காவது ஓடிப்போயி வாழலாம் என்று சொல்லும் போது, நான் பாவி. என்னைக் காதலிக்காதே என்று கூறிவிடுகிறான். நான் திரும்பவும் வருகிறேன் என்று கூறிவிட்டு போகிறாள், பிரேமா.
சாயங்கால வேலை. மலைச் சரிவில் ஏறுகின்ற இடத்தில் வரும்போது, பாலுவைச் சந்திக்கிறாள், பிரேமா. அங்கு நடந்ததைப் பாலு பார்த்திருப்பான் போல. நான் செத்துப்போவன் என்று மனக்கலக்கத்தோடு சொன்னான். ஆனால், பிரேமா அதைப்பற்றி கவலைப் படாமல் செத்துப்போ என்று அவனிடம் சொல்லிவிட்டு நகர்ந்தாள். அன்றே பாலு காணாமல் போய் விட்டான். கடந்தகாலம் – கடந்தகாலம் வருகிறது. யூதாஸ் – பிரேமாவின் அப்பா – பாலு – அம்மாவின் கள்ளக்காதல் – அப்பாவுக்கு முடக்குவாதம் – நெருக்கடிக்கால நிலையில் அப்பா போலீஸ் – பல பேரை கக்கயம் முகாமில் அடித்துச் சித்தரவதை செய்து கொன்றிருக்கிறார்.
02
கக்கயம் முகாம் மூடியதும், வருத்தப்பட்டுதான் அப்பா வேலையை விட்டதாக அறிய முடிகிறது. கான்ஸ்டபுளாக இருக்க விருப்பம் இல்லாமல் வெளியேறி வந்தார். முகாமில் பிறரைக் கொடுமைப்படுத்திய தாக்கம், குடும்பத்தில் இருப்பவர் களையும் மூர்க்கத்தனமாக நடத்துகிறார். நாலுக்கெட்டு வீட்டில் ஊதுபத்திகளின் வாடை, வதை முகாமில் மனிதர்களின் சதை நாற்றத்தை மறைக்க பற்ற வைக்கும் நினைவுகள் பிரேமாவிற்கு எட்டிப் பார்க்கும். அப்பா சொன்ன கதை வழியாக.
கக்கயம் முகாமைப் பற்றி விவரிக்கிறார். ஒரே நாளில் கக்கயம் மலைப் பிரதேசத்தை மாற்றி விட்டோம். கேள்வி கேட்டால் பதிலைச் சரியாக சொல்லவில்லை என்றால் பிரேமாவை அடிப்பார். (கக்கயம் தலைமையிடம் எது) யூதாஸைப் பற்றி பிரேமா சிந்திக்கிறாள். அன்று மாலையில் பாலுவை கரையில் தூக்கிப் போடும்போது, யூதாஸ் அடையாளம் கண்டார் அப்பா. நல்ல வேளை எல்லோரும் தடுத்ததால் அப்பா பிழைத்தார். வயதான உருவமாக மாறிவிட்டார் அப்பா. யூதாஸ் யாராக இருக்கும் சிந்திக்கிறாள் பிரேமா. அவன் மீது காதல் உருவாகியது. அன்று காலை யூதாஸின் வீட்டிற்குச் சென்றாள். முதல் பிரிவு. அவன் அங்கில்லை. சென்றுவிட்டான். பின்னர் அப்பாவுக்கு இரவில் உடல்நிலை மோசமாகிவிட்டது. மருத்துவர் வந்து கேள்வி கேட்க, பதில் உரைத்தார் அப்பா. (கக்கயம் முகாமில் அடித்து சித்தரவதை செய்தவுடன், எல்லாவற்றையும் சொல்லி விட்டான். அதனால் தான் இரண்டு பேரின் உடலை பள்ளத்தாக்கில் போட்டோம் என்று)
03
5 வருடம் கழித்து யூதாஸை பிரேமா கல்லாய் ஆற்றுக் கரையில் வைத்துப் பார்க்கிறாள். கோழிக்கோட்டில் முதுகலை டிப்ளமோ படிக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் யூதாஸை எப்போது பார்ப்பேன் என நினைத்துக் கொண்டே இருக்கிறாள். இவ்வய்ந்து வருடத்திற்குள் அம்மா ஏரியில் விழுந்து இறந்து போனாள். அப்பாவின் உடல்நிலை இன்றும் மோசமாக மாறியது. (விடுதியில் தங்கிப் படிக்கும் போது) நாலுக்கெட்டு வீடு மட்டும்தான் இப்போது சொந்தம்.
அம்மாவின் கள்ளக் காதலனான மச்சினன் மித்த சொத்துக்களை அவனின் பெயரில் மாற்றப் பட்டது. அக்காலத்தில் பிரேமா மிகுந்த கவலையில் இருந்தாள். அக்கவலையிலும் யூதாஸை நினைத்துக்கொண்டே இருக்கிறாள். இரவு பகல் பாராமல். அப்பாவின் சித்தரவதையால் அடிதாங்க முடியாமல் சொல்லி விட்டான் என்றும், கோழையின் மீது தனக்கு காதலை நினைத்து திகைத்துப் போகிறாள். இருந்தாலும் அவனை நினைக்கிறாள், பிரேமா.
பிரேமா படித்துக் கொண்டிருந்த காலத்தில் சாலியார் போராட்டத்தில் பங்கெடுத்த, தன்னோடு படித்த ஒருவன் ஆற்றில் விழுந்து இறக்கிறான். கொல்லப் பட்டிருக்கலாம். இறந்தவனை இறக்க யூதாஸ் வருகிறான். அவனைப் பார்க்கிறாள். முன்பை விடவும் பற்று அதிகமாகிறது பிரேமாவுக்கு. இறந்தவனைக் கண்டதும், பாலுவின் – அத்தையின் நினைப்பு வந்துவிடுகிறது. பிரேமாவின் மனம் அவனையே தேடி அலைகிறது. ஒரு வழியாக அவனிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துச் செல்கிறாள். ஆற்றோரத்தில் வெகு தொலைவில் மூன்று நான்கு ஓலைகள் சாய்த்து, சரிந்து வைத்தக் குடிசையில் இருந்தான் யூதாஸ்.
அவளைப் பார்த்து அதிர்ச்சியுற்றவன் வீட்டிற்குள் அழைத்தான். கஞ்சாவின் வாடை சூழ்ந்திருந்தது. சோறு பொங்க ஆரம்பித்தான். அப்போது பல நினைவுகளை எடுத்துச்சொல்லி தன் காதல் விருப்பத்தைக் கோருகிறாள். யூதாஸ் ஏற்கவில்லை. எந்தப் பதிலும் சொல்லாமல் கட்டிலில் போய் படுத்தான் யூதாஸ். பிரேமாவும் சென்றாள். மௌனங்களுக்குப் பின் சில விசயங்களைக் கூறுகிறான், யூதாஸ்.
கடந்தகால பதிவு : யூதாஸ் கல்லூரி படித்துக் கொண்டிருந்தான். அதொரு மொசமான காலமென்றும் வதைமுகாமில் சிலர் துன்புறுத்தப்படும் போது, பொறுத்துக்கொள்ள முடியாமல் பெயர்களைச் சொல்லி விட்டான். அந்தக் குற்றவுணர்வின் வீரியத்தில் ஆட்பட்டு நொந்து போகிறான். அவர்கள் இறப்பிற்கும் நான் தான் காரணம் என்றும் கண்ணீரோடு சுனந்தாவைப் பற்றியும் அவளை நான் காதலித்ததாகவும், கூறினான். அவள் மன தைரியசாலி. சுனந்தாவையும், ராஜாவையும் அவர்கள் கொன்றார்கள் என்றும் வேதனை அடைந்தான். மற்றவர்கள் அடிதாங்க முடியாததால், பெயரைச சொல்லிவிட்டதாகவும் அவர்கள் இறப்புக்கு நான் காரணமாகி விட்டேன் என்ற குற்றவுணர்வில் மனப்புழுக்கத்தோடு தாள்ளாடுகிறான், யூதாஸ். இரவு அவனோடு தங்கி விடுகிறாள். மறுநாள் காலையில் யூதாஸ் அங்கில்லை. வெறுமையான மனதோடு விடுதிக்குச் சொல்கிறாள், பிரேமா.
04
நெருக்கடிக்கால நிலை. அக்காலத்தில் நடைபெற்ற சம்பவத்தைக் குறித்து கட்டுரை எழுத பத்திரிக்கையாளராக வேடமிட்டு சுனந்தாவின் அக்கா முகவரியைக் கண்டு பிடிக்கிறாள், பிரேமா. சுனந்தாவின் அக்கா கணவரைப் போலீஸ்காரர்கள் அடித்து சித்ரவதை. இறுதியில் காசநோய் வந்து இறந்தார். சுனந்தாவின் அம்மாவும் கண்ணீர் விட்டே இறந்தார். இதைச் சுனந்தாவின் அக்காவிடம் பேசும் போது தெரிந்து கொள்கிறாள்.
பின்னர் பத்திரிக்கை ஆசிரியரோடு உரையாடல். தாசைப் பற்றி விவரிக்கிறார். காதலெல்லாம் ஒன்றுமிருக்காது. பெரிய நோக்கத்துக்காக உயிர் தியாகம் செய்பவர்களுக்கு அவ்வெண்ணம் வராது. சித்தரவதையின் அடி, உதைகளை விவரித்தார். சுனந்தாவைப் பற்றியும். 10 ஆவது படித்து முடித்துவிட்டு டைப்பிங் – நூலகத்திலிருந்து தொடர்பு – இயக்கத்தோடு இணைதல். பின் காவல்துறை அடித்துச் சித்தரவதை. மனஉறுதி கொண்டவள். கண்ணீர்கூட விடமாட்டாள். தாசும் – சுனந்தாவும் காதலிச்சாங்களோ என்னவோ அது தெரியாது. ஆனால், சுனந்தாவை போலீஸ் பிடித்ததற்கு நான் தான் காரணம் என்று தாஸ் நினைத்திருந்தான். அவன் சொல்லாமல் இருந்தாலும், பிடிக்கக்கூடிய காலமது. தாஸ் சாதுவானவன். கவிஞன். மகனின் நிலையைப் பார்த்து அம்மா இறந்து போதல். பேசிவிட்டு வெளியே வரும்போது, சுனந்தாவின் அக்கா மகள் எதிரில் வந்தாள். சனந்தாவின் சாயல். தனக்கு தாழ்வுமனப்பான்மை உருவாகியது என்று நினைத்தாள். மனஉறுதிகொண்டவள் சுனந்தா. என்னைக் காதலிக்க மனம் வராதென்று பிரேமா நினைத்து புலம்புகிறாள்.
அங்கிருந்து வந்தப்பின் பைபுள் வாங்குகிறாள். பைபிளில் குறிப்பிடும் சில செய்திகளை ஒப்பிட்டுப் பார்க்கிறாள். இதையெல்லாம் நினைத்து தூக்க மில்லாமல் உடல்வாதை ஏற்பட்டு படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வீடு திரும்புகிறாள். பழமையான வீடு மாறிவிட்டது. அப்பா உடல்வாதையில் படுத்தே விட்டார். பெரிய அத்தை கவனிக்கிறார். முன்பிருந்த இடமெல்லாம் மாறிவிட்டது. ஏரிக்கரை, மரங்களையும் பார்க்கிறாள். சில வருடங்கள் வீட்டிலேயே இருந்தாள் பிரேமா. வீடு அவளுக்கு வதைமுகாமாக உணர வைத்தது. இரண்டு தம்பிகள். ஒருவன் பெந்தகோஸ்த்தில் இணைந்திருந்தான். மற்றொருவன் ரவுடியாக மாறினான். அப்பா – அம்மாவின் அன்பு கிடைக்காமல் தவிக்கிறார்கள்.
ஒரு நாள் இரவில் ரவுடி தம்பியை காவலர்கள் அழைத்துச் சென்றார்கள். மறுநாள் காவல் துறையிடமிருந்து தகவல். அவன் ஓடிவிட்டான் என்று. ஏரியில் அவனது உடல் சடலமாக கிடைத்தது. அப்பாவின் செயலுக்கு மகன் பிராயச்சித்தம் செய்கிறான் என்று பிரேமா நினைக்கிறாள். வீடு மறுபடியும் இருண்டு விட்டது. பிரேமா வாழ்க்கையின் மன புலம்பலில் இருக்கிறாள். அவளுக்குக் கடுமையான அல்சர் இருக்கிறது. வாய் வழியாக இரத்தம் வரும் அளவுக்கு வீரியம் இருக்கிறது. அப்படியொரு நாளில்தான் தம்பியை காவலர் பிடித்துச்சென்று, லாக்கப்பில் அடித்துக் கொன்று விடுகின்றனர். ஏரியிலிருந்து தம்பியின் உடலை ஒரு தமிழன் எடுக்கிறான். அப்போது யூதாஸ் பிரேமாவின் நினைவுக்கு வருகிறான்.
05
அப்பாவின் உடல்நிலை இன்னும் மோசமாக செல்கிறது. ராத்திரியில் உளறுகிறார். பள்ளத்தாக்கு பற்றி. பிரேமாவும் உடல்நோயால் அளவுக்கதிகதமாக பாதிக்கப் படுகிறாள். கவலையில் தோய்ந்து போகிறாள். அழுதுகொண்டே நினைவுகளின் சித்தரவதைக்கு ஆளாகிறாள்.
யூதாஸைப் பற்றி எந்த விவரமும் கிடைக்கவில்லை. சுனந்தாவின் அக்காவிற்கு அவ்வவ்போது கடிதம் எழுதுகிறாள், பிரேமா. அதில் மலம்புழாவில் இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. தன்னுடைய இரத்தத்தை விற்று அந்தப் பணத்தில் செல்ல திட்டமிடுகிறாள். கோழிக்கோடு கல்லூரியில் சான்றிதழ் வாங்குவதற்காக என்று வீட்டில் சொல்லிவிட்டு பாலக்காட்டுக்குப் பயணம். ஒரு போலீஸ்காரரிடம் முகவரி கேட்டு அவனிருக்கும் இடத்தை அறிகிறாள் – பார்க்கிறாள். அணைக்கட்டோடு சேர்ந்த ஓலைக் குடிசையில் இருந்தான் யூதாஸ். மீன் பொறித்துக் கொண்டிருந்தான். உடல் தெம்பில்லாமல் இருந்த பிரேமாவைப் பார்த்து வெளியில் வந்தான்.
உள்ளே அழைத்தான். நீ வருவாய் என்று எதிர்பார்த்தேன் எனக் கூறினான். அவன் மட்டுமே பேசிக்கொண்டிருந்தான். எதற்கு சுனந்தாவின் அக்காவைத் தேடிப்போனாய். பின் இருளத் தொடங்கியது. இருவரும் உரையாடுகிறார்கள். சுனந்தாவைப் பற்றிக் கூறுகிறான். சுனந்தாவைத் தூக்கி எறியும்போது, அவளைக் காவலர்கள் கயிறு கொண்டு கட்டியிருந்தார்கள். அதன் பாதிப்பில் மூழ்கியிருந்தான் யூதாஸ். பிரேமா அவளைப் பற்றி இன்னும் கேட்க விரும்பினாள். அவன் வேறு பேசலாம் என்றாலும். பிரேமா அவனோடு வாதிடுகிறாள். சுனந்தா ராஜனைத்தான் காதலித்தாள் என்று சொன்னதும், கழுத்தை நெறித்தான். சண்டை வருகிறது. பழைய நிகழ்வுகளை விவரிக்கிறான். பணமோசடி, கருப்பு சந்தைக்காரர்களுக்கு நாட்டை எழுதிக் கொடுத்துவிட்டனர். போராடினோம். பல இளைஞர்கள் குழுவில் இருந்தனர்.
பேச்சை முடித்துவிட்டு அவன் வெளியில் சென்று அவள் குளிப்பதற்காக அணைக்கட்டிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தான். இருவரும் உறங்குகின்றனர். தன் காதலை வெளிப்படுத்துவான் என்று நினைத்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எக்காரணத்திலும் தன் காதலை அவளிடத்தில் எடுத்துரைக்க வில்லை. மறுநாள் விடிந்ததும் யூதாஸ் அங்கில்லை. அவளைத் தீண்டாமல் தன்னுடைய எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு, தனியாக விட்டுச் சென்றான்.
06
பிரேமாவின் அப்பா பெயர் வாசுதேவன். தன் உடல்நிலை, குடும்ப வறுமையை எடுத்து எழுதி தன்னுடைய உயரதிகாரியான பரமேஸ்வரன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார். தன் மகளுக்கு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டுமென்று. (பணியிலிருக்கும் ஒரு போலீஸ்காரனை மணமுடித்துக் கொடுக்க). பொதுவெளியில் அவ்வுயரதிகாரிக்கு மிருகம் என்று பெயர் இருந்தது. அந்நேரத்தில் புதிதாகத் தொடங்கிய கணிப்பொறி நிறுவனத்தில் ஆசிரியராக வேலையில் இருக்கிறாள் பிரேமா. அங்கு வேலை செய்வது விருப்பமில்லை என்றாலும், பணம் தேவையாக இருந்தது. மருந்து வாங்குவதற்காக. நீண்ட காலத்திற்குப் பிறகு யூதாசை பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தோடு கடிதத்தை வாங்குகிறாள்.
மேலதிகாரி வீட்டிற்குச் செல்கிறாள். பழைய மாடல் இரண்டு அடுக்குமாடி வீடு. பாழடைந்து போய் காணப்பட்டது. பகவத் கீதை படித்துக் கொண்டிருந்தார். தனியாகவும், வயதான தோற்றம். முன்பிருந்த மிருக அறிகுறி இப்போதில்லை. தண்ணீர் எடுத்துக் கொடுக்கக்கூட ஆள் அங்கு யாருமில்லை. முதலில் பார்த்ததும் பத்திரிக்கைக்காரி என நினைத்தார். கடிதத்தை மறைக்கிறாள் பிரேமா. அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். ஒரு மகன். மனைவி விபத்தில் இறந்தாள். சுவரில் மாட்டப்பட்ட படத்தைப் பார்த்து பிரேமா கேட்டக்கேள்விக்கு இப்படியாக பதில் சொல்லி முடித்தார்.
அவர் கொடுத்த காபியைக் குடித்துக்கொண்டே புகைப்படத்தைப் பார்த்து கேள்வி கேட்கிறாள். தன் மகளை வசதியான ஒருவனுக்கு கட்டிக்கொடுத்ததாகவும், அவன் மனநலம் பாதிக்கப்பட்டது தெரியாததால், மகளை துண்டுகளாக்கிக் கொன்றான். இரண்டாவது மகள் புற்றுநோய் வந்து படாதப்பாடுபடுத்தி இறந்தாள். மூன்றாவது மகளின் கணவன் வேறொரு பெண்ணோடு சென்றதால், விவாகரத்தன்று விசம் குடித்துச் செத்துப் போனாள்.
திரும்பவும் பிரேமா கேள்விக் கேட்கிறாள். வேற நக்சலைட் யாரையும் பார்த்தீர்களா என்று. பழிவாங்குவதற்காக?. ஒரு தடவைப் பார்த்ததாகவும், என் மகன் ஏரியில் மூழ்கி செத்தபோது, ஒருவன் பிணத்தை எடுத்தான். இதைக் கேட்டதும் யூதாசை நினைக்கிறாள், பிரேமா. அப்போது காபி சேலையில் கொட்டிவிடுகிறது. அதைக் கழுவிக்கொண்டு வருகிறாள். உடைந்த கிளாஸ் கண்ணாடியை எடுத்தும்போது அவளுக்கு கீறி விடுகிறது. அதைப் பார்த்ததும் அவர் அச்சம் கொள்கிறார். இளம் வயதில் அப்படியில்லை. வயதான காலத்தில் எல்லாம் மாறிவிடுகிறது.
அவரின் கூற்று : நாங்கள் அரசாங்கத்தின் ஊழியர்கள். அரசாங்கங்கள் என்ன செய்ய சொல்கிறதோ அதைச் செய்தோம். எங்களின் குடும்பங்கள் முகம் தெரியாமல் சிதறிப்போனது. அந்தச் சூழல் எங்களை செயல்படுத்த உந்தியது. அதெல்லாம் இரத்தம் சிந்திய, இறந்த மனிதர்களின் சாபமாகக்கூட இருக்கலாம். பல இளைஞர்களும் அதில் அடங்கும்.
காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிவிட்டுன்னு சொன்னார். பிரேமா கேட்டாள். மகனின் பிணத்தை எடுத்தது யார் என்று?. தெரியும் என்றார். சில உண்மைகளை மீண்டும் சொல்கிறார். தனி நபரிடம் அரசாங்கம் தோற்கக் கூடாது என்பதற்காக நாள் பூராவும் அடித்தேன் அவனை என்று கூறுகிறார். தாஸ் பிடிவாதக்காரன் என்றார்.
சுனந்தாவைப் பற்றியும் விவரிக்கிறார். சுனந்தாவைத் தொட்ட போதுதான் தாஸ் சொன்னதாகச் சொன்னார். எல்லாம் விதி என்றும், புலம்புகிறார். நான் குடும்பதஸ்தனாக இருந்தேன். ஏன் காவல்துறைக்கு வந்தேன் என்று தெரியவில்லை. எதற்காக இவ்வளவு வேலைகளையும் நான் செசய்தேன். நான் இல்லை என்றாலும் வேறு யாரும் வந்துதான் ஆவார்கள். தனியாக புலம்பி தவிக்கிறார். அவ்வீட்டிலிருந்து வெளியேறுகிறாள் பிரேமா. அதிகாரம் வரும்போது மனிதர்கள் வேறொருவராக மாறி விடுகிறார்கள். அவர் பேசியதை நினைத்துக் கொண்டு.
சுனந்தாவின் அக்காவைப் பார்த்து உரையாடுகிறாள் பிரேமா. அவர் உடல்நிலை மோசமாகி படுத்தப்படுக்கையாகிவிட்டார். தாசைப் பற்றி கூறுகிறாள். வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. பணம் மட்டும் வந்தது. இப்போதில்லை. சுனந்தாவின் டைரி, புகைப்படத்தைக் காட்டுகிறாள். சுனந்தாவின் டைரியை மட்டும் எடுத்துக்கொண்டு போட்டோவை அக்காளிடம் கொடுத்து விடுகிறாள். பிரேமாவுக்கு பொறாமை வருகிறது. சுனந்தாவின் மேல். அதை நினைத்துக்கொண்டேபேருந்தில் வீட்டிற்கு பயணம். அப்போதுதான் அப்பா கொடுத்த கடிதத்ததை வாசிக்கிறாள். தனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டு மென்று. ஆனால் பிரேமா யூதாஸை மட்டுமே போதுமென்று நினைக்கிறாள்.
07
5 வருடம் கழித்து சுனந்தாவின் அக்கா மகளின் கல்யாணத்திற்குச் செல்கிறாள், பிரேமா. அங்கு யூதாஸ் வருவான் என்று சென்றாள். சுரேந்திரன் என்பவரிடம் உரையாடல். உடல் வாதையோடு கல்யாணத்திற்கு செல்கிறாள். இந்த 5 வருடத்தில் இரண்டு முறை வேலை மாற்றம். உடல்வாதை – காலவிடுப்பு – பணிநீக்கம். பின் பில் போடும் வேலை. – அதுவும் விலகல். இறுதியாக எழுத்தாளர் ஒருவருக்கு தட்டச்சு வேலை. அஷ்டமுடி ஏரிக்கரையில் அவர் வீடு. நல்ல உணவு கிடைக்கிறது கல்யாணத்தின் போது தானாகவே வந்து யூதாசைப் பற்றி பேசுகிறாள் சுனந்தாவின் அக்கா. யூதாசுக்கு உடம்பு சரியில்லை. சுனந்தா அக்காவிற்கு ஆஸ்த்துமா. சேது ஆசிரியருக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும் சொன்னாள்.
சேது ஆசிரியர் முகவரி அறிந்து அங்கு செல்கிறாள். அவர் நெருக்கடி காலத்தில் கைதாகவில்லை. நக்சல் இல்லை. தாஸ் கொடுத்த சில ஆவணங்களை வைத்திருந்தார். மனநல மருத்துவமனையில் இருந்தார். யூதாஸை அறிய முற்படுகிறாள். சேர்ந்து வாழவேண்டுமென்று. அதற்கவர் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்றார். பிரேமா உடனே யூதாஸ் பற்றி தெரியும் வரை உங்களோடு இருப்பதாக அடம் பிடிக்கிறாள். இவ்வுரையாடலின் இறுதியில், கக்கயத்துக்கு ஒரு கூட்டத்துக்கு செல்வதாக பிரேமாவிடம் கூறுகிறார். அவளும் உடன் வருகிறாள்.
மலை மீது வண்டி சுற்றிச் சுற்றிச் செல்கிறது. பயணம் தொடங்குகிறது. சேது தன் வாழ்வில் நடந்ததைச் சொல்கிறார். அம்மாவுக்கு நோய் முத்தியது. அன்று இரவு பரமசீரன் அதிகாரி அழைத்தார் என்று கூட்டிச் சென்றார்கள். கண்ணைக் கட்டிக் கொண்டு. எப்படியும் திரும்ப வர மாட்டேன் என்று அம்மாவுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு சென்றேன். இதைக் கேட்டதும் பிரேமா, சுனந்தாவையும் யூதாசையும் நினைக்கிறாள். அவர்களின் நிலையை நினைத்து.
கக்கயம் வந்ததும், முகாமை பார்க்க வற்புறுத்தலின் பெயரில் சேது சம்மதிக்கிறார். அங்கு செல்ல அனுமதி பெற வேண்டும். ஏற்றப் பாதையில் நடந்தார்கள். சில வீடுகள் இருந்தது. அப்போதும் இதே வீடுகள். முந்தைய தலைமுறையினர். அணைக்கட்டு வேலைக்கு வந்தவர்கள். இடத்தை அடைந்ததும், அங்கிருக்கும் காவலாளி அனுமதி இல்லையென்றால் உள்ளே விட முடியாது என்று கூறிவிட்டார். அவர்கள் திரும்புகின்றனர்.
ஏற்றத்திலிருந்து இறங்கும் போது இட்டிச்சன் வீட்டைப் பார்த்து உள்ளே சென்று பேசுகிறார் சேது. தாசைப் பற்றியும் கேட்கிறார். அதற்குப் பதில் சொல்கிறார் இட்டிச்சன். காணிப்பாற மலையில இருந்து ஒரு பொண்ணு, ஒரு ஆணை எறியப்போனானே அவனா என்றும், ராஜனின் இறப்பு, அடி – உதை – பல இளைஞர்கள் என்று அக்கால வதைகளை எடுத்துக் கூறினார். இட்டிச்சன் மகள் அதைப்பற்றி பேச வேண்டாம் என்று சொல்கிறாள். இறுதியில் சேது தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்துவிட்டு இருவரும் வீட்டைவிட்டு வருகிறார்கள். மீண்டும் பிரேமா பள்ளத்தாக்கை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாள். இறுதியாக சேது, யூதாஸ் சாலக்குடியில் இருக்கிறான் என்று சொல்ல, மறுநாள் ரயில் ஏறி அங்கு செல்கிறாள்.
ஒரு ஆட்டோகாரரிடம் யூதாசைப் பற்றிக் கேட்க அவர் அழைத்துச் செல்கிறார். ஆற்றுக் கரையோர குடிசையில் இருந்தான். உருவத்தில் சில மாற்றங்கள். குனிந்து உட்கார்ந்திருந்தான். இருவரும் உரையாடல். காட்டிக்கொடுத்தக் குற்ற உணர்விலே இருந்தான். வீட்டிற்குள் அழைக்கிறான். சென்றார்கள். உடல் சரியில்லாமல் இருந்தான், யூதாஸ். என்னைத் தேடி வராதே. குற்றவுணர்வில் தள்ளாடுகிறான். அப்போது பிரேமா சொல்கிறாள், பரேமஸ்வரன் சித்தரவதை செய்தும் நீங்க சொல்லல. நீங்க யாரையும் காட்டிக்கொடுக்கல. என்று அவனுக்கு புரிய வைக்கிறாள். அவனால் அதிலிருந்து மீளமுடியவில்லை. தன் காதலை வெளிப்படுத்துகிறாள். அவன் தவிக்கிறான். மடியில் படுத்து உறங்குகிறான். மதிய வேளை வந்தது. இனி நான் ஏமாறமாட்டேன் என நினைத்து இறுக்கி அணைத்துக் கொள்கிறாள்.
மதிய வேளையில் குளித்துவிட்டு வருகிறேன் என்று ஆற்றில் நடுபகுதிக்குச் செல்கிறான். திரும்பி வரவேயில்லை. அங்கேயே இரவு தங்கிவிட்டு, மறுநாள் வெளியேறுகிறாள் பிரேமா. அப்போது அப்பா கொடுத்த கடிதத்தை கிழித்துப் போடுகிறாள். என் கணவன் யூதாஸ் என்று.
08
உடல்வாதைக் காரணமாக சில நாட்கள் மருத்துவ மனையில். பின்னர் சுனந்தா அக்காவிற்கு கடிதம். யூதாஸைப் பற்றி விவரம் கேட்கிறாள். சுனந்தாவின் அக்கா மகள் சங்கீதாவை பார்க்க வருவதாக அக்கடிதத்தில் குறிப்பு ஒன்று இருக்கிறது. இவளும் சுனந்தா மாதிரி சென்றுவிடுவாளோ என்று அக்கா அச்சம் கொள்கிறாள். அங்கு செங்கச்சூளைப் போராட்டம் நடக்கிறது. ஒரு விடுதியில் இருக்கிறாள். கோட்டயத்தில் பெண்கள் அமைப்பில் எழுத்தராக பிரேமா இருக்கிறாள். உடன் படித்த ஒரு பெண்ணின் அம்மா வேலையை வாங்கிக் கொடுத்தார். பல வருடங்கள் கழிந்தன, யூதாசைப் பார்த்து.
திருச்சூரில் சங்கீதாவின் வீடு இருக்கிறது. ஒரு மழைநாளில் அங்கு செல்கிறாள். சேர்ந்ததும், அப்பகுதியில் போராட்டம் – முழக்கம் நடைபெறுகிறது. 45 நாள்கள். அப்போது சங்கீதா கர்பிணியாக இருந்தாள். செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்கு. அவர்களின் வயல்வெளிகளை ஆகரமிப்பு செய்கிறார்கள். அதைத் தடுக்க போராட்டம். போராட்டம் வெடிக்கும் போது, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் வாசிக்கிறார். கூட்டம் அமைதியாக இருக்கும் போது, அவர்களை விலக்கிவிட்டு சங்கீதா அவரிடம் உரக்க பேசுகிறாள். நியாயம் கேட்கிறாள். மாவட்ட அதிகாரியின் உறவுக்காரர் அம்முதலாளிகளில் ஒருவர். அவருக்கு சாதகமாக பேசுகிறார். அது முற்றியப்பின் தடியடி நடக்கிறது. சங்கீதா அடி வாங்குகிறாள். அதைத்தடுக்க பிரேமாவும் செல்கிறாள். பின்னர், காவல் நிலையத்திற்கு கூட்டிச்சென்று புதிவு செய்தப்பின் காவல்துறை வெளியே விட்டார்கள். அங்கிருந்து வந்ததும் மழை இல்லை. சங்கீதா மீது பிரேமா கோபப் படுகிறாள். தலைமுறை இரத்தம் என்று. சுனந்தா சங்கீத்தாவின் நிலையில் தன்னை வென்றுவிடுவதாக நினைக்கிறாள். இதுவும் ஒரு குற்றவுணர்வாக பிரேமா நினைக்கிறாள்.
போராட்டம் செய்தவர்கள் உண்ணாவிரதம் என்று அறிவிப்பு செய்கின்றனர். வயலில் பந்தல் கட்டி. இரவில் சங்கீதாவின் வீட்டில் பிரேமாவோடு பேசுகிறாள். யூதாசைப் பற்றி கேட்க தவிக்கிறாள். இரவில் பிரேமாவைத் தூங்க வைத்துவிட்டு சங்கீதா போராட்டத்திற்கு சென்றாள். பிரேமாவிற்கு தூக்கம் வரவில்லை. காலையில் கணவர் வந்து கேட்டதும் பதற்றம் இருவருக்கும். சங்கீதா மாயமாக போனாள். தேடினார்கள். படுகுழியில் பிளாஸ்டிக் செருப்பு கிடப்பதை கண்டு அச்சம் கொள்கிறார்கள். அக்குழியில் இறங்க தயக்கம் கொள்ள, பிரேமாவே இறங்கித் தேடுகிறாள். உடல் நோயோடு. சங்கீதாவின் விறைத்த உடலை எல்லோரும் பார்க்கிறார்கள். கணவன் அலறுகிறான். செய்தி அறிந்து இருவரையும் பார்க்க சுனந்தாவின் அக்கா வந்து விட்டார். சித்தி வழியிலேயே சென்று விட்டாளென்று அழுகிறாள்.
உடல்கூறாய்வில் அடித்துக் கொன்றப்பின் தண்ணீரில் போட்டிருப்பார்கள் என்றும், சூளை முதலாளிகள் கூட இருக்கலாம் என்றும் சிலர் பேசுகின்றார்கள். சங்கீதாவின் அம்மா பலரையும் சாபம் விடுகிறாள். உடலைப் பார்க்க யூதாஸ் வருவானா என்றும் எதிர்பார்க்கிறாள் பிரேமா.
09
சங்கீதா இறந்து நான்காவது நாளில் மாவோயிஸ்டுகளைக் காவல் துறையினர் கைது செய்கிறார்கள். வீட்டில் சுனந்தாவின் அக்காவிற்குச் சுடுகஞ்சி கொடுத்துக் கொண்டிருந்தாள், பிரேமா. ஒரு சிறுவன் வந்து தகவல் சொல்கிறான். நாம் தப்பிக்க வேண்டுமென்று பிரேமாவையும் மாவோயிஸ்டு என நம்பி கைது செய்ய வாய்ப்பிருக்கிறது என அச்சிறுவன் இங்கிருந்து கிளம்ப வேண்டுமென்று அவளை அழைக்கிறான். இருட்டில் வயல் வரப்புகளைக் கடந்து ஓடுகிறாள். உடல் வாதையோடு அல்சரின் வலியால் வாயிலிருந்து இரத்தம் வருகிறது. தன் நிலையை அறிந்து சிரிக்கிறாள். வயல் வெளியைக் கடந்து பின் ஒரு வாடகைக் காரில் ஏற்றி விட்டான் அச்சிறுவன்.
குமரகம் பகுதியை அடைகிறது அக்கார். இறங்கியதும் டிரைவர் முதியவரோடு எரிக்கரை வழியாக நடக்கிறாள். தூரத்தில் உடைந்த படகு. அங்கு யூதாஸ் மீன் பிடித்துக் கொண்டிருந்தான். இருவரும் சந்தித்தனர். யூதாஸ் அவளைப் படகில் ஏற்றினான். உடலில் மாற்றங்கள். ஒரு பழைய வீட்டை நோக்கி அழைத்துச் சென்றான். ஒற்றை அறை வீடாக இருந்தது. இருவருக்கும் உரையாடல் தொடங்குகிறது. தரையில் புல் பாயை விரித்துக்கொண்டு அதில் உட்கார்ந்து பேசுகின்றனர். தன் காதலை வெளிப்படுத்துகிறாள் பிரேமா. பிரேமாவுக்கு 35 வயது. நெருக்கடி நிலை முடிந்து 30, கக்கயம் முகாம் முடிந்து 30 வருடம். யூதாசுக்கு வயசாகி விட்டது.
வாக்கு வாதம் உண்டாகிறது. அல்சரின் வலியால் இரத்தம் வருகிறது பிரேமாவுக்கு. யூதாசின் கடனை அடைத்து விட்டதாகவும் கூறுகிறாள். இதற்கு மேலும் என்னால் போகிறதுக்கு இடமில்லை என்று வருத்தப் படுகிறாள். யூதாசுக்கு 50 வயது. 20 வருடம் பிரேமா அலைச்சல். தன் வாழ்க்கைக்காக. சுனந்தாவைப் பற்றிக் கூறுகிறான் யூதாஸ்.
கடந்தகாலத்தின் நினைவுகளில் கரைந்து போகிறான். காட்டிக் கொடுத்து விட்டேன் என்ற குற்றவுணர்வுக்குள்ளே மாட்டிக் கொள்கிறான். அந்நினைவுகளை மறப்பதற்காகத்தான் குடிக்கிறேன் என்றும் கூறுகிறான். எங்க கிராமத்துக்கு வந்த காரணத்தையும் பிரேமா கேட்கிறாள். எதர்ச்சியாகத் தான் வந்தேன் என்றும் கூறினான். கக்கயத்துக்குப் போனீங்களா என்றும் பிரேமா கேட்கிறாள். பின் நான் சென்றேன் என்றும் பிரேமா பதில் கூறினாள். அப்பாவைப் பற்றியும், தன்னைத் திட்டி அடித்ததையும், கடிதத்தைப் பற்றியும் அவனிடம் கூறுகிறாள். இருவருக்கும் இறுதியில் ஒரு நெருக்கம் வருகிறது. அவன் தூங்கும் போது, உறங்காமல் இருக்கிறாள். இந்த முறை தப்பி ஓட முடியாது என்று நினைக்கிறாள்.
முடிவுரை
யூதாஸின் நற்செய்தி முடிவதில்லை. அது தொடங்குகிறது. பிரேமா “இந்த முறை தப்பி ஓட முடியாது” என்று நிற்கும்போது, நாவல் முடிந்துவிட்டதாக நினைக்கிறோம். இல்லை. அங்கேதான் நம் விசாரணை தொடங்குகிறது. இது காதல் கதை இல்லை. புரட்சி கதை இல்லை. இது குற்றவுணர்வின் புனித நூல். கக்கயம் என்ற பள்ளத்தாக்கில் புதைக்கப்பட்டது இரண்டு பிணங்கள் மட்டும் இல்லை. அங்கே புதைந்தது ஜனநாயகம். மனசாட்சி.மனிதம். பரமேசுவரன் அடித்தார். அப்பா புதைத்தார். தாஸ் உயிரோடு இருந்தான். பிரேமா தேடினாள். யாரும் தப்பவில்லை. ஏனென்றால் யாரும் புனிதர் இல்லை. எல்லோரும் குற்றவாளிகள். செய்த குற்றத்திற்கு. செய்யாமல் விட்ட குற்றத்திற்கு. காப்பாற்ற முடியாத குற்றத்திற்கு. கே.ஆர். மீரா அவர்கள் நம்மை கேள்வி கேட்கிறார். வரலாறு என்பது வெற்றி பெற்றவன் எழுதும் கவிதை மட்டும்தானா? தோற்றுப்போனவனின் புலம்பலுக்கு இடமில்லையா? அடித்த கைக்கு வரலாறு இல்லையா? அடிவாங்கிய உடலுக்கு வரலாறு இல்லையா? காட்டிக் கொடுத்ததாக நம்பி கரையும் ஒரு கவிஞனுக்கு வரலாறு இல்லையா? இருக்கிறது. அது அவர்களின் குற்றவுணர்வில் இருக்கிறது. அந்த குற்றவுணர்வை தேடிக் கண்டடைவதுதான் உண்மையான வரலாறு. அதை ஏற்றுக்கொள்வதுதான் உண்மையான விடுதலை.
தேடிக் கண்டடைதல் என்பது யூதாஸை கண்டடைதல் இல்லை. உள்ளே இருக்கும் யூதாஸை கண்டடைதல். நாம் எல்லோரும் ஏதோ ஒரு கணத்தில், ஏதோ ஒருவருக்கு துரோகம் செய்திருக்கிறோம். சுனந்தாவை போல ஒருத்தியை. ராஜனை போல ஒருவனை. சங்கீதாவை போல ஒரு கர்ப்பிணியை. காப்பாற்றாமல் விட்டிருக்கிறோம். அந்த குற்றத்தை சுமந்துகொண்டு அலைகிறோம்.
கக்கயம் முகாம் இடிந்துவிட்டது. ஆனால் கக்கயம் நம் எல்லோர் மனதிலும் இருக்கிறது. நாம் எல்லோரும் கக்கயத்தின் காவலர்கள். நாம் எல்லோரும் கக்கயத்தின் கைதிகள். ஆகவே இது யூதாஸின் நற்செய்தி. நற்செய்தி என்ன? நாம் எல்லோரும் யூதாஸ். அதை ஒப்புக்கொள்வதுதான் முதல் பாவமன்னிப்பு. தப்பி ஓடுவதை நிறுத்தி, குற்றவுணர்வை கட்டியணைப்பதுதான் வாழ்வு. நாவல் முடிந்துவிட்டது. ஆனால் விசாரணை தொடர்கிறது. குற்றவாளிக் கூண்டில் நாம் நிற்கிறோம். சாட்சி சொல்ல நம் குற்றவுணர்வு மட்டும்தான் இருக்கிறது.
குறிப்பாக இது ஒரு மொழிபெயர்ப்பு நாவல். மொழிபெயர்த்தவர் பேராசிரியர் மோ.செந்தில்குமார் அவர்கள். மேட்டுப்பாளையம் அரசு கல்லூரியில் பணியாற்றுகிறார். இந்நாவலை வாசிக்கும் போது மொழிபெயர்ப்பென்றே தோன்றவில்லை. எந்த இடத்திலும் மனச் சலனமில்லாமல், அதாவது வாசிக்க தடை இல்லாமல் தமிழிலேயே எழுதப்பட்ட ஒரு நாவல் போல் அவ்வளவு கனக்கச்சிதமான நேர்த்தியுடன் மொழி பெயர்த்திருக்கிறார். வெகு சிறப்பாகவும், அதே நேரத்தில் பிரம்மிப்பாகவும், மேலும் இப்பேராசிரியரின் மொழிப்பெயர்ப்பு நூல்களை தேடி வாசிக்க வேண்டும் எனும் எண்ணத்தை மனதில் பதியம் போட வைக்கிறது. அவர்களுக்கும், வெளியிட்ட எதிர் பதிப்பகத்துக்கும் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
![]()