2027 வரவு செலவுத் திட்டத்தில் வரிச் சுமைகளிலிருந்து மக்களை விடுவிப்போம்; எரிபொருள் விலை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்படும்

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் சில வரிச் சுமைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக மூலதனச் செலவாக 2000 பில்லியன் ரூபாவை ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் நிவாரணங்கள் ஊடாக நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படாமல் கட்டுப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைந்து இரண்டு வருடங்கள் பூர்தியாவதையொட்டி ”எமது அரசாங்கம் இரண்டு வருடங்கள் – நாட்டுக்கு சுபீட்சம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களின் அங்கமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அகுரஸ்ஸ நகரில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் இந்த அரசாங்கத்தை அமைத்தது எதற்காக? பழைய பாதையை அவ்வாறே கொண்டு செல்வதற்காக அல்ல. சமூக மாற்றங்களை ஏற்படுத்தவே இந்த அரசாங்கத்தை அமைத்துள்ளோம். ஆனால் இந்த மாற்றங்களை செய்யும் போது பழைய அரசாங்கங்களில் வரப்பிரசாதங்களையும், சலுகைகளையும், வசதி, வாய்ப்புகளையும் பெற்றவர்கள் குழப்பமடைகின்றனர். குறிப்பாக ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதே மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. ஊழல் மோசடிகள் எமது அரசியலில் ஒரு அங்கமாக இருந்துள்ளது. இது எமது நாட்டை பெரும் ஆபத்துக்குள்ளும் தள்ளியுள்ளது. இதனால் ஊழல் மோசடியற்ற ஆட்சியுடன் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதே மக்களின் அபிலாசைகளாக உள்ளது.
இதனை செய்யும் போது ஊழல் மோசடிகளுக்கு அடிமையான குழுக்கள் மற்றும் அதற்கு ஆதரவான குழுக்கள் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பர். இதன்போது கீரி, பாம்பாக இருந்த அனைவரும் ஒன்றிணைகின்றனர். ஊழல்வாதிகளா? திருடர்களா? என்று தேடிக்கொண்டிருக்க முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தை துரத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இவர்களால் ஏற்படும் மாற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாத காரணத்தினாலேயே இவ்வாறு செய்கின்றனர்.
இதேவேளை போதைப் பொருள், பாதாள குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது, அந்தக் குழுக்களை தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திய தரப்பினர் இந்த நடவடிக்கைகளால் குழப்பமடைந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அனைவரும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். குற்றம் நடந்தால் அதன் சூடு தனிவதற்கு முன்னர் தீர்ப்பு வருவதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். பல வருடங்களாக ஒரு சாட்சியேனும் விசாரிக்கப்படாத வழக்குகள் உள்ளன.
இப்போது அந்த வழக்குகளை விசாரணை செய்யும் போது அந்த வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் குழப்பமடைகின்றனர். சட்டத்திற்கும் மேலாக தங்களை நினைத்துக்கொண்டிருந்தவர்கள் சட்டத்திற்கு சாதாரண மக்கள் மட்டுமே அடிபணிபவர்கள் என்றும் ஏனையவர்கள் சட்டத்திற்கும் மேலானவர்கள் என்றும் நினைத்தனர். ஆனால் எமது அரசாங்கம் வந்த பின்னர் வரலாற்றில் முதற்தடவையாக முன்னாள் ஜனாதிபதியும் சட்டத்தின் முன்னால் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னர் சட்டத்திற்கும் மேலாக தங்களை நினைத்தவர்கள் இப்போது மாற்றங்களை செய்யும் போது குழப்பமடைந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த அரசாங்கம் பெற்ற அதிகாரங்களை சமூக மாற்றங்களுக்காக பயன்படுத்துகின்றது.
இந்த சமூக மாற்றங்களுக்கு எதிராக ஒன்றிணைந்தவர்கள் இதற்கு முன்னர் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருந்தவர்களே ஆகும். அவர்கள் இப்போது ஒரே மேடையில் ஏறி ஒருவர் தான் சிங்கம் என்று கூறும் போது இன்னுமொருவர் தான் புலி என்று கூறுகின்றார். ஒருவர் நாட்டை காட்டிக்கொடுத்தவராகவும் மற்றையவர் நாட்டை பாதுகாத்தவராகவும் இருந்துகொண்டு இவ்வாறு கூறுகின்றார். ஒருகாலத்தில் தங்களுக்கிடையே மோதிக்கொண்டவர்கள் இப்போது உடன்படிக்கைகளை செய்துக்கொள்கின்றனர். இதன் ரகசியம் என்ன? இந்த மாற்றங்களை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த மாற்றங்கள் ஊழல் மோசடிகளை தடுக்கும், குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் கொண்டு வரும், தங்களில் சலுகைகள் கிடைக்காமல் போகும் என்பதனால் மாற்றத்தை எதிர்க்க அவர்கள் அனைவரும் ஒன்றிணைகின்றனர். மாற்றங்களுக்கு எதிரான இந்த செயற்பாடுகளுக்கு முகம்கொடுக்க வேண்டுமாயின் பலமான மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும். நாங்கள் எப்போதும் மக்கள் சக்தியுடன் வேலை செய்ய வேண்டும்.
அரசாங்க அதிகாரத்தை பெற்ற பின்னர் ஜனாதிபதியாகியவர் ஜனாதிபதி செயலகத்திற்குள்ளேயே இருந்துவிடுவார் என்றே பலரும் கூறினர். அமைச்சர்கள் அமைச்சு அலுவலகத்திற்குள் இருந்துவிடுவர் என்றும் இதனால் மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புகள் இல்லாமல் போய்விடும் என்றே நினைத்தனர். ஆனால் அவ்வாறு அல்ல. இப்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆட்சியாளர்களை மக்கள் கேள்வி கேட்க வேண்டும். இருவருக்கும் இடையிலான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். ஆட்சியாளர்கள் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டும். அவ்வாறான புதிய மாற்றங்களை நாங்கள் ஏற்படுத்த வேண்டும்.
அத்துடன் அதனுடன் தொடர்புடைய ஜனநாயகத்தை முடிந்தளவுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு உரிமைகளை வழங்கும் போது என்னை ஹிட்லர் போன்று என சிலர் கூறுகின்றனர். நாங்கள் உரிமைகளை சரியாக வழங்க வேண்டும். ஆனால் ஊடகங்கள் வரையறைகளை புரிந்துகொள்ள வேண்டும். ஜனநாயகம் இன்றி நாட்டை முன்னால் கொண்டு செல்ல முடியாது. நாங்கள் இந்த இரண்டு வருடத்தில் எந்தவொரு கண்ணீர்புகை தாக்குதலையோ, நீர்தாரை தாக்குதலையோ நடத்தவில்லை. இவ்வாறுதான் ஜனநாயக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை, உணவு, பொருளாதார வசதிகள் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். சில வரிகளில் சுமைகள் உள்ளன. இதனால் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சில வரிகளை விடுவிக்க நான் எதிர்பார்க்கின்றேன். அத்துடன் எமது பொருளாதாரத்தில் திறைசேரி நிரம்பியுள்ளது. இதன்படி அடுத்த வருடத்தில் திறைசேரியில் இருந்து முதலீட்டு செலவாக 2000 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம். பாலங்கள், வீதிகள் ஆகியவற்றை அதிகளவில் அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கின்றோம். அத்துடன் இல்லாதவர்களை தெரிவு செய்து நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. இந்த டிசம்பரிலும் அஸ்வெசும பெறும் பிள்ளைகளின் குடும்பங்களுக்கும் மற்றும் பாடசாலை செல்பவர்களுக்கும் கொப்பி, புத்தகங்களை வாங்க 6ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். ஆசிரியர் பயிற்சியாளர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தற்போது மத்திய கிழக்கில் யுத்த நிலைமை உள்ளது. நாங்கள் உலக சந்தையில் எரிபொருள் விலைக்கு ஏற்றால் போன்று விலைகளை அதிகரிக்கவில்லை. 4 மாதங்களும் டீசலுக்காக ஒவ்வொரு லீட்டருக்கும் 100 ரூபாவை ஏற்று 6000 கோடி ரூபாவை செலவிட்டது. இப்போது ஒக்டோபரில் இருந்து எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியிருக்கும். ஆனால் அவ்வாறு செய்யாமல் நிவாரணத்தின் ஊடாக அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறுதான் அரசாங்கம் இருக்கும்.
இந்த அரசாங்கம் மக்கள் தொடர்பில் சிந்தித்தே வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது. ஆனால் இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் தமது குடும்பங்கள் தொடர்பில் சிந்தித்தே செயற்பட்டது. தம்மை சுற்றியுள்ள நண்பர்களையும் பார்த்துக்கொண்டது. ஆனால் மக்களை பார்க்கவில்லை. இப்போது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அரசாங்கத்துடன் இருக்கும் வரையில் எவராலும் இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது என்றார்.
![]()