இலங்கை

அனோஜனுக்காக இன்று யாழில் போராட்டம்

சவுதி அரேபியாவில் தண்டனையை எதிர்கொண்டுவரும் அம்பாறையைச் சேர்ந்த சிவராஜா அனோஜனுக்கு விடுதலையையும் மன்னிப்பையும் கோரி யாழ்ப்பாணம் பண்ணை பகுதியிலே மெழுகுதிரி ஏந்தும் போராட்டத்தை இன்று திங்கட்கிழமை மாலை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனோஜனுடைய விடுதலை தொடர்பிலான கலந்துரையாடல் இளைஞர்களுடைய அழைப்பின் பேரிலே, நல்லூரிலே சிவகுரு ஆதீனத்திலே நேற்று நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திலே மதத்தலைவர்கள், சமூகப் பெரியார்கள் மற்றும் மனிதாபிமான செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், ஊடகவியலாளர்கள் என்று பல தரப்பினரும் இந்த கலந்துரையாடலிலே பங்குபற்றி இருந்தார்கள்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த கலந்துரையாடலின் நிறைவிலே மேற்கொள்ளப்பட்ட பிரதானமான நான்கு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

முதலாவதாக, உலகளாவிய ரீதியிலே இந்த செய்தியை, அதாவது அனோஜனை விடுதலை செய்ய வேண்டும், அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்கின்ற செய்தியை, சமூக வலைத்தளங்கள் ஊடாக, ஆங்கில மொழி மூலமாகவும் அரபிக் மொழி மூலமாகவும் ஒரு பதிவை தயார் செய்து அந்த செய்தியை உலகமெங்கும் முன்னெடுத்துச் செல்லுகின்ற சமூக வலைத்தளங்கள் ஊடான ஒரு போராட்டத்தை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அனைவருடைய ஆதரவையும் நாங்கள் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

இரண்டாவதாக, சமயத் தலைவர்களாக, சைவ சமய மற்றும் கிறிஸ்தவ சமயத் தலைவர்களாக ஒன்றிணைந்து, ஆயர்கள், ஆதீனங்கள், சமயத் தலைவர்களை ஒருங்கிணைத்து, இஸ்லாமிய சமயத் தலைவர்களை சந்தித்து, இலங்கை ரீதியிலே இருக்கக்கூடிய உயர்மட்ட இஸ்லாமிய சமயத் தலைவர்களை சந்தித்து, அவர்கள் ஊடாக அனோஜனுடைய மன்னிப்புக்கும் விடுதலைக்கும் என்ன செய்யலாம் என்கின்ற ஆலோசனையை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவது தீர்மானமாக, ஒரு பொதுவான கடிதத்தை சவுதி அரேபிய மன்னருக்கு அனுப்பக்கூடிய விதத்திலும், அந்த கடிதத்தினுடைய பிரதிகளை ஏனைய சர்வதேச இராஜதந்திரிகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும், மரண தண்டனைக்கு எதிராக செயல்படுகின்ற அமைப்புகளுக்கும், மனிதாபிமான அமைப்புகளுக்கும் மற்றும் இலங்கை, இந்திய அரசுகளுடைய உயர்மட்ட தலைவர்களுக்கும் என்று அனைத்து தரப்பினருக்கும் பொதுவான கடிதத்தை அனுப்புவதாகவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

நான்காவதாக, உடனடியாக இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணத்திலே பண்ணை பகுதியிலே மெழுகுதிரி ஏந்தும் போராட்டத்தை நடத்தி அனோஜனை விடுதலை செய்ய வேண்டும், அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த விதத்திலே எம்முடைய உறவுகள் அனைவரும் இன்றைய தினம் நடக்க இருக்கின்ற போராட்டத்திலே மாலை 5 யாழ்ப்பாணம் பண்ணையிலே ஒன்றுகூட வேண்டும். உயிரை காப்பாற்றுவதற்கான ஒரு அடிப்படை மனிதாபிமான பணியிலே அனைவரும் இனமத மொழிபேதம் என அனைத்து பேதங்களையும் கடந்து அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *