மாகாண சபைத் தேர்தலுக்காக பதவி துறக்க தயாராகும் எம்.பி.

“மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றேன். தேர்தல் அறிவிக்கப்பட்டால், எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்துவிட்டுத் தேர்தலில் களமிறங்கி அரசியல் ரீதியாகச் சவால் விடுக்கவும் நான் தயாராக உள்ளேன்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் எவருக்கேனும் சந்தேகம் இருந்தால், சத்தியக் கடதாசி (Affidavit) வழங்கவும் தயார் என்றும், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட கையோடு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐக்கிய மக்கள் சக்தி வெறுமனே விளம்பரத்திற்காகவும் காட்சிப் படுத்துவதற்காகவும் கூட்டங்களை நடத்தாது. உரிய நேரத்தில், உரிய முறையில் எங்கள் அரசியல் போரை முன்னெடுப்போம். முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்திப் பாருங்கள் என அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றேன்” என்றார்.
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால், வடமேல் மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தான் தயார் என நளின் பண்டார எம்பி ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()