அர்ச்சுனா எம்.பி.புலியா?; சி.ஐ.டி.யில் முறைப்பாடு

அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய யாழ். மாவட்ட சுயேச்சை குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வெளியிட்ட கருத்துகளுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அர்ச்சுனா எம்.பி.,தான் புலி என்றும், புலம்பெயர் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு பெருமளவு நிதியை வழங்கியுள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த கருத்துக்கள் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்று கூறப்படும் அமைப்பு மற்றும் மக்கள் சக்தியின் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சி.ஐ.டி.யில் முறைப்பாடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அந்த வகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்று கூறப்படும் அமைப்பொன்று ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி அர்ச்சுனாவின் கருத்துக்கள் தொடர்பிலும் அவர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பிலும் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், இது தொடர்பில் சி.ஐ.டி.யில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக நாட்டில் தடைச் செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவன் என்று தன்னை அவர் கூறியதன் ஊடாக அவர் நாட்டின் சட்டத்தை மீறியுள்ளார் என்றும், தடைச் செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர் என்று கூறி கூட்டத்தில் கலந்துகொள்வது சட்டவிரோதம் என்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்று கூறும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை அவர் புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்திற்கு பணம் வழங்கியுள்ளதாக கூறியுள்ளதாக தெரிவித்துள்ளமை தொடர்பிலும் முறைப்பாடுகளை செய்வதற்கு சில அமைப்புகள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
![]()