பருவ மங்கை… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

இயற்கையையே சூது கவ்வும்போது
செயற்கையாம் புகழ் நிலைக்குமோ?
பதினாறும் நிறையாத பருவ மங்கை
நான்கு வார்த்தைகளே முதலடியில்
இதை முன்பும் சொல்லியிருப்பர்
பின்னும் சொல்லியதை சொல்வர்
பருவம் பதினாறும் நிறையாத மங்கை
வார்த்ததைகளை இப்படியும் மாற்றுவர்
இவ்வாறு முன்பாகவும் சொல்லியிருப்பர்
பின்னரும் இவ்வார்த்தைகளை சொல்வர்
காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கையை
வசமாக்கி காதல் பசியூட்டும் ரதியின் தங்கையாக
வார்த்தைகளை மாற்றியும் எழுதியிருப்பர்
வரிசையை மாற்றி பின் நாளிலும் எழுதுவர்
ஒன்றன்பின் ஒன்றாக ஒழுங்காய் எழுதினால்
வரிகள் அறிந்தோர் மருதகாசி பாடல் என்பர்
ஏற்காது போனால் களவாடியது என்றிடுவர்
பாடலை அறியாதார்முன் புதிய கவிஞராவர்
எழுத்துகளும் வரிகளும் வார்த்தைகளும்
இங்கு பொதுவானதாக இருந்த போதும்
ஒழுங்கு மாறாதிருந்தால் ஒருவர் உடைமை
ஒழுங்கு மாறிநின்றாலோ மற்றோருடைமை
சொந்தம் கொண்டாடி நீயும் புகழடைந்தால்
ஒரு குறிப்பிட்ட காலம்தான் என்பதறியாயோ
விந்தையை மானிடா எண்ணிப் பார்த்திடுவாய்
வள்ளுவன் சொன்னது புகழொடு தோன்றவே
மற்றவர் சொல்ல மங்காது புகழென்றாலும்
நிலையா உலகில் புகழ் மட்டும் நிலைக்குமா
நிலையும் மாறி மடிந்ததும் உனக்கு தெரியுமா
இருக்கும் வரைதான் பொன் பொருள் புகழும்
நிலையா புகழை நிலையாய் நினைப்பதேன்!

![]()