இலங்கை

நாமலின் காருக்கு அர்ச்சுனாதான் சாரதியாம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே தமிழ் – சிங்கள சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும் என யாழ். மாவட்ட சுயேச்சை குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மகா ஜன பேரணியில் (Janasatana Rally) அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் மத்தியில், முற்றிலும் சிங்கள மொழியிலேயே தனது உரையை நிகழ்த்திய அர்ச்சுனா, டயஸ்போரா நிதி விவகாரம், இன நல்லிணக்கம் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல கதைகளை பகிர்ந்து கொண்டார்.

மேடையில் உரையைத் தொடங்கிய அர்ச்சுனா, வடக்கு மாகாணத்தில் தேர்தல்களின் போது பின்னணியில் நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெறுகிறது என சுட்டிக்காட்டிய அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்

“யாழ்ப்பாணத்திலும் வடக்கிலும் அரசியல் செய்யும் பலருக்கு எங்கிருந்து பணம் வருகிறது? வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் (Tamil Diaspora), தமிழ் சமூகத்தினரும்தான் தேர்தல்களை இலக்கு வைத்து கோடிக்கணக்கான நிதியை அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அனுப்புகிறார்கள்.

தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தலைவராக உருவாக்குவதற்காக பல பில்லியன் ரூபா பணத்தை வழங்கியுள்ளனர்.

ஆனால் தற்போது தமிழ் மக்களே தங்களது முடிவு குறித்து வருந்துகின்றனர். நான் எனது தமிழ் மக்களினதும் தமிழ் புலம்பெயர் சமூகத்தினதும் செய்தியை எடுத்துக்கொண்டு இங்கு வந்துள்ளேன்.

சிங்கள மக்களுடன் தாங்கள் எப்போதும் ஒற்றுமையாக வாழ்வோம் என்றும், அநுர குமார திசாநாயக்கவினால் தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், இதனை அனைத்து சிங்கள மக்களிடமும் தெரிவிக்குமாறு அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.

தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கும் வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் இடையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்.

“காட்டில் சிங்கத்திற்கும் எல்லை உண்டு, புலிக்கும் எல்லை உண்டு. தேசியக் கொடியில் சிங்கம் இருக்கிறது, வடக்கில் புலியை அடையாளமாகக் காட்டினார்கள். ஆனால், காடு என்று வரும்போது இரண்டும் ஒரே காட்டிற்குள்தான் வாழ வேண்டும்.

அதேபோல, இந்த இலங்கை என்கிற தேசத்திற்குள் சிங்கங்களாகிய சிங்கள மக்களும் புலிகளாகிய தமிழ் மக்களும் பிரிந்து மோதாமல், ஒன்றிணைந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து இரு சமூகங்களும் கைகோர்க்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே இந்த இரு சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும்.

ஒருபோதும் எனக்கு தமிழீழம் தேவையில்லை. எனக்கு வேண்டியது சிங்கள மக்களே. நான் மரணிக்கும் வரைக்கும் தமிழீழத்தை கோரப்போவதில்லை.

மேடையில் தன்னை வடக்கின் எதிர்காலத் தலைவர் என அறிமுகப்படுத்தியமைக்காக நாமல் ராஜபக்சவிற்கு நன்றி. நாமலிடம் நான் ஒரு வாக்குறுதியை வழங்கியுள்ளேன்.நாமல் ஜனாதிபயானால் அவரின் வாகனத்துக்கு சாரதிகாக வருவதாக கூறியுள்ளேன்.

அண்மைக் காலமாக நாடாளுமன்றத்தில் தமக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகிறது. வைத்தியராக இருந்த காலத்தில் எனக்கு எதிராக எந்த வழக்குகளும் இல்லை.

ஆனால் இந்த கொத்தமல்லி ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தவுடன் தனக்கு எதிராக அதிக வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். 29 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

சட்டம் என்பது ஏழைக்கும் அரசியல்வாதிக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *