இலங்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 63வது வருடாந்த கூட்டத்தொடர் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடர் ஜெனிவாவில்  (07) பிற்பகல் ஆரம்பமானது.

இந்த அமர்வு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் உரையுடன் இந்த அமர்வு ஆரம்பமானது.

இதன்போது இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கையை பேரவையில் சமர்ப்பிக்கும் பணியை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்மூலம் இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் மீண்டும் சர்வதேச அவதானம் திரும்பியுள்ளது.

இதன்படி, இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையின் முதன்மைப் பிரதி அண்மையில் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, தற்போதைய அரசாங்கம் அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், அரசியல் கைதிகளை விடுவித்தல் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற பெரும் மாற்றங்களைச் செய்யும் வாக்குறுதியிலேயே ஆட்சிக்கு வந்தது என்பதை நினைவூட்டியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு இடைக்காலத் தடையை விதித்து, அதனை விரைவில் நீக்கி புதிய சட்டத்தை இயற்றுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் பரிந்துரைக்கிறது.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவித்தல், மேலும் காணிகளைக் கையகப்படுத்துவதை நிறுத்துதல் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுவித்தல் ஆகியனவும் இந்த அறிக்கையின் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இது தவிர, கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act), ஐசிசிபிஆர் (ICCPR) சட்டம் மற்றும் வரைவு செய்யப்பட்டுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGO) தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது அல்லது அவற்றை நீக்குவதும் இந்தப் பரிந்துரைகளில் அடங்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *