இலங்கை

அரசின் அடுத்த இலக்கு ஷிரந்தி ராஜபக்ஸவா?

மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை கொள்முதல் செய்வதற்காக நிதி சேகரித்ததில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக, தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசமிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமாஅதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட இயந்திரத்தை கொள்முதல் செய்வதற்காக உதவி கோரி விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஸவின்’சிரிலிய சவிய’ அமைப்பினால் பேணப்பட்ட வங்கிச் கணக்கொன்றில் ஒரு மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சட்டமா அதிபர் இதன்போது அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகளில் வெளிப்பட்டுள்ள தகவல்களின்படி, குறித்த உதவி கோரிக்கை ‘சுக உதாண’ எனும் திட்டத்தின் ஊடாக விடுக்கப்பட்ட போதிலும், அந்தப் பணம் ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கிலேயே வைப்பு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான பெட் ஸ்கேனர் இயந்திரம் ஒன்று சீனாவிலிருந்து நன்கொடையாக இலங்கைக்கு கிடைக்கவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும், அவ்வாறானதொரு இயந்திரத்தைக் கொள்முதல் செய்வதாகக் கூறி தனியார் வங்கிகளிலிருந்தும் நிதியுதவி சேகரிக்கப்பட்டுள்ளமையினால் இச்சம்பவம் தொடர்பில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

நன்கொடையாகக் கிடைக்கவிருந்த உபகரணம் ஒன்றை கொள்முதல் செய்வதாகக் கூறி இவ்வாறு நிதி சேகரித்தமையானது குற்றவியல் முறைகேடாக அமையக்கூடும் என விசாரணைப் பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிரதீப் காரியவசமிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டு ஒரு வாரத்திற்குள் அது தொடர்பான அறிக்கையை சட்டமாஅதிபரிடம் சமர்ப்பிக்குமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மேலும் அறிவுறுத்தியுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *