தேர்தல்களை ஒத்திவைக்கமாட்டோம்: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதி

” நாம் எக்காரணம் கொண்டும் தேர்தல்களை ஒத்திவைக்க மாட்டோம். குறிப்பிட்டபடி ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் நடத்துவோம்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள புலத்சிங்கள மற்றும் பேருவளையில் நடைபெற்ற, “எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம்” என்ற கருப்பொருளிலான தேசிய பேரணித் தொடரின் தொடக்க விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திசையின்றி இயங்கும் அரசாங்கம் அல்ல. ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு முன் மிகவும் கவனமாகச் சாத்தியக்கூறு ஆய்வு செய்து, அதனால் மக்களுக்குப் பலன் கிடைக்கும் என்றால் மட்டுமே நாம் நிதி ஒதுக்கீடு செய்கிறோம்.
அதற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் 100, 200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாம் இதுவரை வந்த பாரம்பரியப் பாதையைத் தீர்க்கமாக மாற்றியுள்ளோம். மக்கள் நம்மிடம் எதிர்பார்த்தது அந்தப் புதிய மாற்றத்தையே ஆகும்.
சிலர் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்காக நாம் சர்வாதிகாரப் பொதுஜன வாக்கெடுப்பிற்குப் போவதாகக் கூறுகிறார்கள்.
இவை அரசியல் தெளிவில்லாத, பயந்தவர்கள் மக்களைப் பயமுறுத்தச் சொல்லும் கதைகள். நாம் எக்காரணம் கொண்டும் தேர்தல்களை ஒத்திவைக்க மாட்டோம்,
குறிப்பிட்டபடி ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் நடத்துவோம்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் தற்போது சட்டத் தடைகள் உள்ளன. பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் உடன்படும் தேர்தல் முறையைத் தீர்மானித்தவுடன் மாகாண சபைத் தேர்தலையும் நாம் நடத்துவோம்.
நாம் ஒருபோதும் மக்களுக்கு சாக்குப் போக்குகாட்டி ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்க மாட்டோம். நாம் எப்போதும் மக்கள் மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளோம்.
எனவே, நாம் மீண்டும் ஒன்றிணைவோம். கிராம மட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் பலமிக்க அரசியல் இயக்கத்தை மேலும் வலுப்படுத்தி, நாட்டைக் கட்டியெழுப்பும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் பங்கெடுக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.”- என்றார் ஜனாதிபதி அநுர.
![]()