மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது; ஜனாதிபதித் தேர்தல் வரை எந்தத் தேர்தலும் இல்லை!; தேர்தல் நடந்தால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும்

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரையில் எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு இந்த அரசாங்கம் தயாராக இல்லை. இதனால் மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படாது என்று முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
லக்ஷ்மன் கிரியெல்லவினால் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலொன்று நடக்குமாக இருந்தால் அரசாங்கம் தோல்வியடைவது உறுதியானது. குறிப்பாக மாகாண சபைகள் தேர்தல் நடந்தால் அரசாங்கம் தோல்வியடையும். ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி 42 வீத வாக்குகளையே பெற்றார்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளிடையே என்ன பிரச்சினை காணப்பட்டாலும் மாகாண சபைகள் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைவர். இதனாலேயே அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் எந்தத் தேர்தலையும் நடத்த மாட்டார்கள். எனது எதிர்வுகூரலின் படி ஜனாதிபதித் தேர்தல் வரையில் எந்தவொரு தேர்தலையும் நடத்தமாட்டார்கள்.
இதேவேளை தேர்தலொன்று நடக்குமாக இருந்தால் பொதுப் பட்டியலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் தீர்மானித்துள்ளது. ஒரே பட்டியலில் அவர்களும் எங்களுடைய உறுப்பினர்களும் இருப்பர். சின்னம் தொடர்பான விடயம் சிறிய பிரச்சினையாகும். இதில் ஒன்றிணைவதே முக்கியமான விடயமாகும் என்றார்.
![]()