பலதும் பத்தும்

செயற்கை நுண்ணறிவால் உலக நிதித் துறைக்கு ஆபத்து

மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகளினால் உலகளாவிய நிதி கட்டமைப்பிற்குப் பெரும் ஆபத்து இருப்பதாக நிதி ஸ்திரத்தன்மை வாரியத்தின் தலைவர் ஆண்ட்ரூ பெய்லி எச்சரித்துள்ளார்.

வடக்கு கரோலினாவின் அஷ்வில்லி நகரில் நடைபெறும் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான கூட்டத்தை முன்னிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

உலகளாவிய நிதி கட்டமைப்புகளின் மீது மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் நடத்தக்கூடிய சைபர் தாக்குதல்களே தற்போதைய மிக அவசரமான அச்சுறுத்தலாகும் என தெரிவித்துள்ளார்.

“மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் ஆபத்துகள் தேச எல்லைகளைக் கடந்தது” எனக் குறிப்பிட்டுள்ள பெய்லி, பல நாடுகளில் இந்தத் தொழில்நுட்ப மேம்பாட்டையும் வெளியீட்டையும் கட்டுப்படுத்த முறையான வழிகாட்டுதல்கள் இல்லை என்று கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சோதனை அளவிலான சில ஏஐ மாதிரிகள், பரிசோதனை எல்லையைத் தாண்டிச் சென்று மற்றொரு நிறுவனத்தின் கணினி அமைப்பை ஹேக் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனம் நடத்திய சோதனையில், எந்த்தோபிக் நிறுவனத்தின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு மாதிரி போலியான அடையாளங்களைப் பயன்படுத்தித் தீங்கிழைக்கும் குறியீடுகளை கணினியில் புகுத்த முயன்றமை கண்டுபிடிக்கப்பட்டது.

ஆறாவது மாதமாக நீடிக்கும் அமெரிக்க-ஈரான் போரினால் பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்ந்துள்ள சூழலில் ஜி20 கூட்டம் கூடுகிறது.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சைபர் தாக்குதல்கள் தவிர, ஏஐ நிறுவனங்களின் மிதமிஞ்சிய சந்தை மதிப்பீடு மற்றும் அரசு-தனியார் துறைகளின் அதிகரித்து வரும் கடன் சுமை ஆகியவையும் நிதிச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு கூடுதல் அபாயங்களாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button