இலங்கை

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் தீப்பந்தங்கள்,பெரும் கோஷங்களுடன் யாழ்.நகரில் உணர்வுபூர்வமான பேரணி

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நேற்றையதினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் “நீதிக்கான நீள்பயணம்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடும் நடைபெற்றது.

மாநாட்டின் ஆரம்பத்தில் காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத் தூபி இடத்தில் பேரணி ஆரம்பமானது.

கடந்த காலங்களில் கடத்தலுக்கு பயன்பட்ட வெள்ளை வானை நினைவுபடுத்தும் வகையில் வெள்ளை வான் தாங்கிய ஊர்தியில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அதன் பின்னால் உணர்வுபூர்வமான பேரணியாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி மாநாட்டு மண்டபத்தை அடைந்தனர்.

மாநாட்டில் சர்வதேச இராஜதந்திரிகள், தூதரக பிரதிநிதிகள் பங்கேற்றதுடன் காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான புத்தகங்களும் வெளியீடு செய்யப்பட்டது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் மாநாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.

இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளுவற்கோ, நீதியைப் பெற்றுத்தருவதற்கோ எவ்வித நம்பிக்கைமிகு பொறிமுறைகள் இல்லை, சர்வதேச விசாரணையே எமக்குத் தேவை என்பதை மாநாட்டில் பிரதானமாக வலியுறுத்தப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button